அமெரிக்கப் பணக்காரராக வேண்டுமா? உங்களிடம் 2.2 மில்லியன் டாலர் சொத்து இருந்தால் போதும்

பணக்காரர்களுக்கானச் சொத்து மதிப்பு மற்றும் பணக்காரர்களாக மாற வேண்டுமாயின் அதற்குத் தேவைப்படும் நிகர சொத்து மதிப்பு ஆகியவை குறித்து அமெரிக்காவின் பிரபல நிதிச்சேவை நிறுவனமான சார்லஸ் ஷ்வாப் நிறுவனம் ஆயிரம் அமெரிக்கர்களிடம் ஒரு புதிய கணக்கெடுப்பை நிகழ்த்தியது. அந்நிறுவனத்திற்காக லாஜிக் ரிசர்ச் நடத்திய இந்தக் கணக்கெடுப்பில், ‘உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் பணக்காரர்தானா, உங்களைப் பணக்காரர்களாகக் கருதுவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பன போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது கணக்கெடுப்பில் இடம்பெற்ற மக்கள் அளித்த பதில்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அவற்றில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதோ அவை உங்களுக்காக.
கணக்கெடுப்பில் பங்குபெற்ற பெரும்பாலான மக்கள் பணக்காரர் என்ற அந்தஸ்தை அமெரிக்காவில் பெறுவதற்கு சுமார் 2.2 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து இருக்கவேண்டும் எனவும் 48 சதவீதம் பேர் தங்களிடம் ஐந்து லட்சத்து அறுபதாயிரம் டாலர் மதிப்பிலான நிகர சொத்து மதிப்பு இருக்கும்போதே தாங்கள் செல்வந்தர்களாக உணர்ந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் 1981 – 1996க்கு உட்பட்ட காலத்தில் பிறந்தவர்களை மில்லேனியல்ஸ் என்றும் 1996 – 2010க்கு உட்பட்ட காலத்தில் பிறந்தவர்களை ஜென் இஸட் என்றும் 1965 – 1981 க்கு உட்பட்ட காலத்தில் பிறந்தவர்களை ஜென் எக்ஸ் என்றும் 1946 – 1964 க்கு உட்பட்ட காலத்தில் பிறந்தவர்களைப் பேபி பூமர்ஸ் என்றும் அழைப்பார்கள்.
இவர்களில் மில்லேனியல்களும் ஜென் இசட் பிரிவினரும் தங்களைப் பணக்காரர்களாக உணர்வதாகவும் 57% மில்லேனியல்கள் மற்றும் 46% ஜென் இசட் பிரிவினர் தாங்கள் மிகவும் வசதியாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். அதே வேளை அமெரிக்காவில் இளம் தலைமுறையினர் பணத்திற்காகப் போராடுகின்றனர் என்னும் பொதுவான கருத்து நிலவுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் கருத்துக்கணிப்பில் 41 சதவீத ஜென் எக்ஸ் பிரிவினரும் 40 சதவீத பேபி பூமர் பிரிவினரும் மட்டுமே தாங்கள் வசதியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆக, இது அமெரிக்காவில் செல்வந்தர் என்று சொல்வதற்கான குறியீடுகள் என்ன என்பதைக் கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன என்பதையே காட்டுகிறது.
உலகின் பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் விலைவாசி உயர்ந்து வருகிறது. வீடுகளின் விலையை எடுத்துக்கொண்டால் அமெரிக்காவில் வாழ்க்கை நடத்த மிகப் பெரும் தொகை தேவைப்படுகிறது. நகரங்களிலோ சொல்லவே வேண்டாம். மிகப்பெரும் சம்பளத்துடனும் வாங்கும் திறனுடனும் பலர் அங்கு இருந்தாலும் வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை, கடன், சொந்த வீடு ஆகியவை அவர்களுக்கு நிதிப்பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது என்பதே நிதர்சனம்.
சார்லஸ் ஷ்வாப் நிறுவனத்தைச் சார்ந்த ராப் வில்லியம்ஸ் என்ன கூறுகின்றார் தெரியுமா? அமெரிக்காவில் மக்கள், செல்வந்தர்கள் என்னும் நிலைக்கான அளவுகோலைத் தங்களுக்கு ஒன்றாகவும் மற்றவர்களுக்கு ஒன்றாகவும் வைத்திருக்கிறார்கள். இது முற்றிலும் முரண்பாடானது. நீங்கள் ஒரு அமெரிக்கரிடம் ஒரு டாலர் தொகையைக் கேட்டால் அவர்கள் அதைத் தங்கள் வாழ்நாளின் மீதமிருக்கும் நாட்களின் அடிப்படையிலோ அல்லது நிதி ஆரோக்கியத்தின் அடிப்படையிலோ அர்த்தம் கொள்வதில்லை எனக் கூறுகின்றார். இந்தக் கணக்கெடுப்பில், உங்களின் செல்வநிலை குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போது தங்களுக்கு ஒப்பானவர்கள் குறித்து அமெரிக்கர்கள் கொண்டுள்ள எண்ணங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதாவது அவர்கள் தங்கள் நண்பர்களைப் போன்ற வாழ்க்கை முறையைப் பெறுவதே தங்களைப் பணக்காரர்களாக உணர வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்னும் சிலர், அதாவது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் மூன்றில் ஒரு பகுதியினர், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இதர பிரிவினர், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆன்லைனில் பதிவு செய்து பொருட்களை வாங்கி மகிழும் வாழ்க்கையை எப்போதும் ஒப்பிட்டுப் பார்த்து தங்களது செல்வநிலையை உணர்வதாகக் கூறியிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நல்ல தகவலும் இந்தக் கணக்கெடுப்பில் கிடைத்துள்ளது. பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பதையே கை நிறைய பணத்தை வைத்திருப்பதை விட மேலான செல்வநிலையாகக் கருதுவதாகக் கூறியிருக்கிறார்கள். அட! அமெரிக்காவிலும் அன்பு இருக்கிறது. “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற குறளே இங்கு நினைவுக்கு வருகிறது.
இன்னும் சிலர் பணத்தைவிட நேரம் முக்கியமானது என்று கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்ததாக இன்னும் ஒரு சுவையான சர்வே முடிவு என்ன தெரியுமா? சுமார் 70 சதவீதம் பேர், “பெரிய வங்கிக் கணக்கை விட பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் நிலையே செல்வம்” என்று கூறியிருக்கிறார்கள். ஆஹா! இவர்கள் எல்லோரும் ‘நம்ம கேட்டகரி’ போலும். பணத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். இதனடிப்படையில் பார்த்தால் நாம் எல்லோரும் பணக்காரர்கள்தான், இல்லையா? எது எப்படியோ, அமெரிக்காவில் பணக்காரர் ஆவதற்கு, சுமார் 2.2 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து வேண்டும் என்னும் புதிய சூத்திரம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது.