உலகில் முதன்முறையாகப் பெண்ணின் மூளைக்குள் மலைப்பாம்பின் ஒட்டுண்ணி உயிருடன் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையிலிருந்து 8 சென்டிமீட்டர் நீளமுள்ள புழு ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகில் முதல்முறையாக நடைபெற்றிருக்கும் இந்த அதிசயம் பிரிட்டனில் பிறந்த பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது நிகழ்ந்திருக்கிறது. அப்பெண்ணின் சேதமடைந்த முன்மூளைத் திசுக்களிலிருந்து நீண்ட சரம் போல இருந்த வெளிர் சிவப்பு நிற ஒட்டுண்ணி ஒன்று வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணிப் புழுவானது இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் சஞ்சய சேனாநாயகா இது குறித்துக் கூறுகையில், “அறுவை சிகிச்சை நிபுணர் ஹரி ப்ரியா பாண்டி அந்தப் பெண்ணின் மூளையில் தெரிந்த அசாதாரணமான பொருள் ஒன்றை இடுக்கி மூலம் எடுக்க அது நெளிய ஆரம்பித்தது. அப்போதுதான் தெரிந்தது அது 8 சென்டிமீட்டர் நீளமுள்ள வெளிர் சிவப்பு நிற ஒட்டுண்ணிப் புழு என்று. அந்தத் தருணத்தில் அறுவை சிகிச்சை அறையிலிருந்த ஒவ்வொருவரும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம்” என்கிறார். மேலும் இது மனிதர்களிடையே நுழைந்திருக்கும் புதிய மற்றும் இதுவரை ஆவணப்படுத்தப்படாத தொற்று என்றும் அவர் கூறியுள்ளார். கோவிட் தொற்று குறைந்த போதும் தொற்றுநோய்களின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்சி என்று அழைக்கப்படும் இந்த வகையான ஒட்டுண்ணிகள் கார்பெட் எனப்படும் ஒருவகை நஞ்சற்ற மலைப்பாம்புகளிடம் இருக்கக் கூடியது என்றும் இந்த வகை மலைப்பாம்புகள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் உள்ள காடுகளில் காணப்படுகிறது என்றும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தான் வசித்த இடத்துக்கு அருகில் உள்ள ஏரியில் புற்களைச் சேகரிக்கச் சென்றபோது இந்த ஒட்டுண்ணி அவருக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது மூளையின் வலது முன்மடலில் சற்று வித்தியாசமான காயம் இருப்பதை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். கடந்த 2022ஆம் ஆண்டு அப்பெண்ணுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து அறுவை சிகிச்சை செய்தபோதுதான் நோய்க்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான நிலையில் இருந்த அந்தப் பெண் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவ நிபுணரான மெஹ்ராப் ஹூசைன் என்ன கூறுகின்றார் தெரியுமா?
பாதிக்கப்பட்ட பெண் மலைப்பாம்பின் மலம் மற்றும் ஒட்டுண்ணி முட்டைகள் இருந்த தீவனச் செடிகளை அதாவது வாரிகல் கீரைகளை எடுத்துக்கொண்டு வந்து சமையலுக்குப் பயன்படுத்தியதால் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 64 வயதான அவருக்கு வயிற்றுவலி, இருமல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு, இரவு நேரம் வியர்த்தல் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக அவருடைய நினைவாற்றல் குறைந்து ஞாபக மறதியும் மன அழுத்தமும் அவரை ஆட்கொண்டுள்ளன. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்சி ஒட்டுண்ணிப் புழுவானது மூன்றாம் கட்ட லார்வா போன்று அப்பெண்ணின் மூளையில் வளர்ந்திருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. முந்தைய ஆய்வுகளில் இது போன்ற ஒட்டுண்ணி வளர்ச்சி எலிகள், குரங்குகள் போன்ற விலங்குகளிலும் காணப்படவில்லை. மனித மூளையில் இந்த ஒட்டுண்ணிப் புழு இருப்பது இதுவரையில் கண்டறியப்படாத ஒன்று என்கிறார் மருத்துவ நிபுணரான மெஹ்ராப் ஹூசைன்.
இது குறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக மருத்துவக் குழு கூறுகையில் கடந்த முப்பது வருடங்களில் முப்பது புதிய வகை நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவற்றில் பெரும்பாலானவை அதாவது எழுபத்து ஐந்து சதவீதம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்று நோய்கள் என்றும் தெரிவித்துள்ளது.
கனடாவின் டொராண்டோவில் வசிக்கும் தொற்று நோய் மருத்துவர் டாக்டர் ஐசக் போகோச் இது குறித்துக் கூறும்போது, இது ஒரு “அழகான காட்டு வழக்கு” என்றார். தொடர்ந்து கூறுகையில், “அந்தப் பெண்மணி தற்செயலாக ஒட்டுண்ணி இருந்த மலைப்பாம்பு மலத்தை உட்கொண்டதால் இது ஒரு “தனித்துவமான தொற்று” என்றே சொல்ல வேண்டும். இந்தவகை தொற்றுகள் வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணியால் ஏற்படுபவைதான். மருத்துவத்தில் இவை ஜூனோடிக் தொற்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் மனிதர்கள் அல்லாத விலங்குகளுடனான நெருங்கிய தொடர்பு மூலம் மக்கள் தொற்று நோய்களைப் பெறுவதைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய பிரச்சினை, நிச்சயமாக நாங்கள் இதை மிகப்பெரும் ஆபத்தாகப் பார்க்கிறோம்” என்றார். மேலும் வவ்வால்களிலிருந்து வீட்டில் வளர்க்கப்பட்ட பன்றிகளுக்கும் அதன் பின்னர் மக்களுக்கும் பரவிய நிபா வைரஸ், கடந்த காலத்தில் நாம் கண்ட கொரோனா வைரஸ், சார்ஸ் வைரஸ் போன்று இது பரவாது என்று கூறும் அவர் அதேவேளையில் இது விலங்குகளிடமிருந்து மக்களுக்குப் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்திருப்பதையே எடுத்துக் காட்டுவதாகவும் மனித குலத்துக்கு இது மிகப்பெரும் எச்சரிக்கை என்றும் கூறியுள்ளார்.