உலகப்போரில் வீசிய வெடிகுண்டுகள், தோண்டத் தோண்ட அச்சுறுத்தல்கள்!

செய்தி சுருக்கம்:
ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின் புதையுண்ட வெடிகுண்டு கண்டெடுப்பு: 13000 மக்கள் வெளியேற்றம்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
நிலத்தை தோண்டும் போது புதையல் கிடைப்பது நல்ல விஷயம் தான், ஆனால், அதேநேரம் வெடித்துச் சிதறும் வெடிகுண்டு கிடைத்தால்? அப்படித்தான் நடந்திருக்கிறது.
பின்னணி:
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இருந்து 13,000 பேர் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.
மனிதகுலத்தின் மிகவும் மோசமான காலக்கட்டம் எது என்று கேட்டால் 19ஆம் நூற்றாண்டைக் கூறலாம். ஏனென்றால், அப்போது இரு உலகப்போர்கள் அரங்கேறியது அதிலும், 19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939- லிருந்து 1945 வரையில் உலகினை உலுக்கிய இரண்டாம் உலகப்போர் இடம்பெற்றது.
இந்த போரில் ஒட்டுமொத்தமாக சுமார் 5 கோடி பேர் வரை உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர். இதில் அதிக உயிரிழப்பு சோவியத் ரஷ்யாவுக்குதான் ஏற்பட்டது. ஆனால் இந்த போரை தொடங்கியது ரஷ்யா கிடையாது. ஜெர்மனிதான் இப்போருக்கு அடித்தளமிட்டது. அவர்கள் சோவியத் ரஷ்யாவை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் முன்னேறி வந்தனர்.
ஜெர்மனியுடன் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் சேர்ந்துக்கொண்டது. இப்படி இருக்கையில் ஒருபுறம் சோவியத் ரஷ்யாவும், மறுபுறம் அமெரிக்காவும் இந்த இரு நாடுகளை எதிர்த்தன. ஆனால் இரு நாடுகளின் போர் புரியும் முறையும் வித்தியாசமாக இருந்தது. அப்போதைய ரஷ்யாவின் அதிபரான ஸ்டாலின் ஜெர்மனி வீரர்களை முன்னேறவிட்டு அடிப்பார். ஆனால் அமெரிக்கா அப்படியல்ல. எடுத்தவுடன் எதிரி நாட்டின் மீது குண்டு மழை பொழிந்துவிடும்.
அப்படி போடப்பட்ட குண்டுகளில் பல ஜெர்மனியில் வெடிக்காமல் மண்ணில் புதைந்திருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜெர்மனி மறு கட்டமைப்புக்குள் சென்றதால் இந்த குண்டுகள் அப்படியே பூமிக்கு அடியில் புதைந்துவிட்டன. இவ்வாறு புதைந்த குண்டுகள், புதிய கட்டிடங்களை கட்ட பள்ளம் தோண்டும்போது கிடைக்கும். இப்படிதான் ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் எனும் நகரத்தில் உள்ள ஓர் மிருககாட்சி சாலையில் நேற்று ஒரு வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு டன் எடையிருக்கும் இந்த வெடி குண்டு கடந்த 78 ஆண்டுகளாக வெடிக்காமல் இங்கேயே பூமிக்கு அடியில் இருந்திருக்கிறது.
ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெர்மன் மண்ணில் இதுபோல இன்னும் ஆயிரக்கணக்கான குண்டுகள் செயலிழந்து கிடப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
2017-ஆம் ஆண்டில், பிராங்பேர்ட்டில் 1.4 டன் அளவு எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டதட்ட 65 ஆயிரம் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் அப்போது ஏற்பட்டது.
டிசம்பர் 2021-ல், முனிச் ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில், இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு வெடித்தது, அதில் நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
முதல் கட்டமாக இந்த குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவில் வசித்த 13,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தபட்டுள்ளனர்.
அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன மற்றும் மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் கூறினார்