காபி அருந்திக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணின் மீது விழுந்த சிறிய சைஸ் விண்கல் – மேலே விழுந்த அந்த கணத்தில் தனது மார்பெலும்புக்கூடு அதிர்ந்ததாக கூறியுள்ளார்.

செய்தி சுருக்கம்:
“பூம் சத்தம்”
பிரான்ஸ் நாட்டில் வெளியாகின்ற Les Dernieres Nouvelles d’Alsace (DNA) என்ற பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியில், பிரான்ஸ் நகரத்தில் வசிக்கும் தன்னுடைய பெயரை தெரிவிக்க விரும்பாத பெண்மணி ஒருவர் அவரது நண்பருடன் வீட்டிற்கு வெளியே லான் பகுதியில் அமர்ந்து காபி அருந்தியபடியே சம்பாஷனையில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது மிளகை விட சிறிய அளவில் ஒரு உலோகம் மேலேயிருந்து விழுந்து எகிறியுள்ளது, செய்தி நிறுவனம் எடுத்த பேட்டியில் அவர் “வானிலிருந்து மெல்லிய பூம் என்ற சத்தம் வரவர அதிகமாகி கொண்டே வந்தது, எதோ ஒன்று என்மீது பட்டு தெறித்து விழுந்தது, அந்த நொடியில் நான் என் எலும்புக்கூடு அதிர்ந்ததை உணர்ந்தேன், முதலில் அது கண்ணுக்கு தெரிந்த போது எதாவது வண்டாக இருக்கக்கூடும் என்று நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்த மாதிரியான மிக மிக அரிதான ஆபத்தான ஒரு நிகழ்வில் இருந்து இந்த பெண்மணி உயிர்பிழைத்து உள்ளார் என்பது வியக்கத்தக்க விஷயமே. வானியல் அறிஞர்களின் கணக்குகளின் அடிப்படையில் ஒரு மனிதன் விண்கல் ஒன்றினால் மிகச்சரியாக தாக்கப்படுவதுவது என்பது வெகு அரிதான சம்பவம் ஆகும். ஒருவர் லாட்டரியில் தொடர்ந்து இரண்டுமுறை முதல் பரிசை பெறுவது எப்படி அரிதானதோ அதுபோல தான் இந்த நிகழ்வும். இன்னும் சொல்லப்போனால் ஒருவர் பூவா தலையா போடும் போது தொடர்ந்து 44 முறை தலை மட்டுமே விழுவதை போன்ற வாய்ப்பே இல்லாத ஒரு அரிதான நிகழ்வுதான் ஒரு மனிதன் மீது மிகச்சரியாக விண்கல் விழுவதும்.
நாசா விண்வெளி ஆய்வு மைய தகவலின் படி நம் பூமியின் மீது ஒரு நாளைக்கு சராசரியாக 48.5 டன் அளவிலான விண்கல் மற்றும் நம்முடைய பூமியின் சுற்றவட்ட பாதையில் மிதந்து கொண்டிருக்கும் விண்கல் போலவே ஆகிவிட்ட வேறு சில உபகரணங்கள் போன்றவை விழுகின்றன. Space Derbis எனப்படும் விண்வெளிக் குப்பைகளும் இதில் அடக்கம். இவற்றில் பெரும்பாலான விண்கற்கள் கடலிலும் பிற ஆள்நடமாட்டம் இல்லாத பனி மற்றும் காட்டு பிரதேசங்களிலும் விழுந்து விடுகின்றன, ஏதாவது இது போன்ற அரிதான சந்தர்ப்பமாக மிகச்சரியாக மனிதர்கள் மீது விழுகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
“அதிசய பொருள்”
வானிலிருந்து பூம் சத்தத்தோடு வந்து தன்மீது பட்டு எகிறி கீழே விழுந்த அந்த அதிசய பொருளை அந்த பெண்மணி உடனடியாக எடுத்துக்கொண்டு அங்கு அருகில் Geologist துறையில் நிபுணராக இருக்கும் Thierry Rebmaan என்பவரிடம் தந்து அந்த உலோகத்தை பரிசோதிக்க கூறியுள்ளார். பின்னர் அவர் அந்த பொருளின் மீது சில ஆய்வுகளை மேற்கொண்டு அந்த பொருளானது இரும்பு மற்றும் சிலிக்கான் போன்ற உலோகங்களின் கலவையுடன் உள்ள பாறை போன்றுள்ளது என்று கண்டறிந்தார். இந்த வகையான கலவைகள் கொண்டது நிச்சயமாக ஒரு விண்ணிலிருந்து விழுந்த ஒரு விண்கல்லாக தான் இருக்க முடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
DNA பத்திரிக்கை நிறுவனத்திற்கு Rebmann அளித்திருந்த பேட்டியில் “நம் பூமியின் வெப்பநிலையிலும், கால சூழலிலும் இதுபோன்ற உலோக கலவை கொண்ட கற்கள் உருவாவது என்பது நிகழ முடியாத ஒன்று, ஏனெனில் இவை ஒன்றுடன் ஒன்று உருகிப்போய் இறுகி கலந்துள்ளன, இதற்கான சாத்தியக்கூறுகள் பூமியில் எங்கும் இல்லை, ஒருவேளை பாலைவன பிரதேசங்களில் உள்ள அதீத வெப்பநிலையில் அங்கு வேண்டுமானால் இத்தகைய உலோக கலவை கொண்ட கற்கள் உருவாக வாய்ப்புள்ளது, எனவே இங்கு பிரான்சில் வந்து விழுந்து இருக்கும் இந்த அதிசய பொருள் நிச்சயமாக ஒரு விண்கல்லாகத்தான் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
நம்முடைய இதுவரையிலான மனிதகுல பயணத்தின் வரலாற்றில் இந்த மாதிரியான விண்கல் மனிதர்கள் மீது மிகச்சரியாக விழும் சம்பவங்கள் மிகவும் அரிதாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்துள்ளன, இது மிகவும் அதிசயக்கத்தக்க அரிதான சம்பவமாகும். ஒருசிலர் இந்த விண்கல் விழும் சமயங்களில் மயிரிழையில் உயிர் பிழைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. தற்போது இந்த பிரான்ஸ் பெண்மணி மீது விழுந்தது மிளகு அளவுள்ள சிறிய சைஸ் என்பதாலும், அது காற்றுத்தடையால் அதிக பாதிப்புக்குள்ளாகி திசைவேகம் குறைந்து போனதாலும் அந்த பெண்மணி பெரிதான பாதிப்புகள் மற்றும் காயங்கள் இல்லாமல் உயிர்தப்பியுள்ளார். இந்த விண்கல்லின் அளவு 50gr இருந்திருந்தால் கூட போதும் உயிரிழப்பை ஏற்படுத்திவிடும் அளவிற்கு அதன் தாக்குதல் இருக்கும் என்று கூறுகின்றனர்.
இதேபோன்று 1954 இல் ஆலம்பா (Alamba) பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி விண்கல் தாக்கியதால் பாதிக்கப்பட்டார், சுமார் 4 கிலோ அளவு கொண்ட விண்கல் ஒன்று அவரது வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு வந்து அவர்மீது விழுந்துள்ளது, அதனால் அவருக்கு ஆழமான காயங்கள் உண்டாகின. இந்த நிகழ்வானது விண்கல் விழும் சந்தர்ப்பங்களில் அவ்வப்போது மேற்கோள் காட்டப்படும் அதிசயமாக நிகழ்ந்த ஒன்றாகும். மேலும் இந்த சம்பவமானது “வானத்தில் இருந்து கீழே விழுகின்ற ஒரு விண்கல் மிகச்சரியாக ஒரு மனிதனின் மீது விழக்கூடும், அதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன” என்பதற்கான ஒரே ஒரு உதாரண சம்பவமாக இருந்து வருகிறது.
விண்கல் மேலிருந்து கீழே விழும் வேகத்தில் புவியீர்ப்பு விசையின் காரணமாக முடுக்கம் பெற்று அதிக திசைவேகத்தில் தாக்கக்கூடும், அதன் எடையை பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். இப்போது பிரான்சில் இந்த பெண்மணி மீது விழுந்தது விண்கல் தான் என்று உறுதியாகும் பட்சத்தில் இவர்தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்கு இரண்டாவது உதாரணம் ஆவார். அந்த விண்கல் மிகச்சிறிய அளவு என்றாலும் கூட அந்த பெண்மணி தன்னுடைய எலும்புக்கூடு மின்சார ஷாக் அடித்தது போன்று அதிர்ந்தது என்று கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். மனிதனுக்கு பாதிப்புகள் பலதிசைகளில் இருந்து வருவது போதாது என்று இனிமேல் வானிலிருந்தும் வரலாம் என்ற உண்மை இந்த நிகழ்வினால் உலக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பெண்மணி மீது விழுந்தது உண்மையிலேயே விண்கல் தானா? அதனால் இந்த பெண்மணி விண்கல் தாக்குதலுக்கு உள்ளான இரண்டாவது உதாரணம் ஆகப்போகிராறா? போன்ற கேள்விகளுக்கு விடைதெரிய வேண்டுமெனில் நாம் இன்னும் சில மனிதர்கள் இதுபோன்ற விண்கல்லால் மிகச்சரியாக தாக்கப்படும் அதிசய நிகழ்வுக்கு உள்ளாக வேண்டும், அப்போதுதான் அதிக தரவுகள் கிடைத்து அதற்கான பதிலை அறிந்துகொள்ள முடியும்.
பின்னணி:
இதுபோன்ற விண்கல் விழும் சம்பவங்கள் உலகத்தில் ஆங்காங்கே மனிதர்கள் கண்முன் நிகழ்வது உண்டு, பெரும்பாலான விண்கற்கள் கடல் மீதுதான் விழுகின்றன, பூமிப்பந்தின் சாய்வான கோணத்தால் பசிபிக் பெருங்கடலின் விரிந்த பரப்பில் தான் அதிகமானவை விழுகின்றன. சமீபத்தில் கடந்த மே மாதம் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள Hopewell நகரத்தில் ஒரு வீட்டின் மீது நாலுக்கு ஆறு இன்ச் அளவு கொண்ட ஒரு புதுவகையான உலோகம் போன்ற பொருள் விழுந்துள்ளது. அந்த பொருளை கைப்பற்ற அங்கு வந்த போலீசார் “இது சமீபத்தில் வானில் நிகழ்ந்த Eta Aquariids எனப்படும் Meteor showers மூலம் விண்ணிலிருந்து விழுந்த பொருள்” என்று கூறியுள்ளனர். அந்த meteor shower விண்கல் பொழிவை பூமியின் சில பகுதிகளிலும் ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது.
இம்மாதிரியான நிகழ்வுகள் மனிதர்கள் மீது தாக்கும்படி நிகழாதவாறு வேறு எங்காவது நிகழ்ந்து கொள்ளட்டும் என்று வேண்டிக்கொள்வோம். Space Debris எனப்படும் விண்வெளிக் குப்பைகள் பெருகிவருவதும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.