அதிகம் போலிச் செய்திகளை பகிர்பவர்கள் யார்? ஆய்வு முடிவு தெரிவிப்பது என்ன?

செய்தி சுருக்கம்:
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில், போலிச் செய்திகளும் போலிப் பிரச்சாரங்களும் அதிகம் பகிரப்பட்டு வருவதன் காரணம் என்ன? ஒரு செய்தி நமது செல்பேசியில் வந்து சேர்ந்தவுடன் அது உண்மையா பொய்யா என்று கணநேரம் கூட சிந்திக்காமல் உடனே அதை மற்றவருடன் பகிர்பவர்கள் யார் யார்?
பிரான்டியர்ஸ் ஆப் சைக்காலஜி என்ற ஆய்விதழ் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு முடிவில் இத்தகைய போலிச் செய்திகளை பகிர்வதில் உளவியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
அதாவது, உணர்ச்சி ஸ்திரமின்மை காரணமாக அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள் அதிகமாக போலிச் செய்திகளை பகிர்வதாகவும், அதிக பகுத்தறிவு சிந்தனைகள் கொண்டவர்கள் இந்த போலிச் செய்திகளை உடனடியாக அடையாளம் காண்பதுடன் பகிர்வதையும் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கொந்தளிப்பான மனநிலை கொண்டவர்கள், அதிகம் சதிக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள், நிகழ்கால அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளின் மீது நம்பிக்கை இழந்தவர்கள் ஏதேனும் ஒரு எதிர்மறையான செய்தியை பார்க்க நேரில் அதை உடனடியாக பொதுத்தளத்தில் பகிர்ந்து விடுகின்றனர்.
தான் கண்ட செய்தி உண்மையா பொய்யா என்று சீர்தூக்கிப் பார்க்கும் பார்க்கும் பகுத்தறிவு மனநிலை இவர்களுக்கு இருப்பதில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல கண்டதும் ஒரு செய்தியை பரப்புவது, அரசியல் அமைப்புகள் மற்றும் பொருளாதார அமைப்புகள் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தச் செய்யும்.
எனவே எந்த வகையான நபர்கள் பகிர்கிறார்கள், எந்த வகையான நபர்கள் போலிச் செய்திகளைக் கண்டறிய முடியும் என்பதைக் கண்டறியக்கூடிய குறிப்பிட்ட உளவியல் மாதிரிகள் உள்ளனவா என்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் 82 இளங்கலை மாணவர்களை சேர்த்து ஆன்லைனில் பல பணிகளை முடிக்கச் சொல்லி கூறினார்கள். இதில் பங்கேற்பாளர்களுக்கு குற்றம், பொருளாதாரம், கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய உண்மையான மற்றும் சில போலியான செய்திகளின் பட்டியல் வழங்கப்பட்டது. இந்த செய்திகள் முக்கிய சமூக அரசியல் நிகழ்வுடன் தொடர்புடையது.
பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு செய்தியையும் கவனமாக படித்து அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்படி அவர்கள் பகிர்ந்தால் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், அல்லது வாட்ஸ்அப் போன்ற எந்த தளத்தை பயன்படுத்துவார்கள் என்றும் கேட்கப்பட்டது.
இந்த பங்கேற்பாளர்களின் அறிவாற்றல் திறனை மதிப்பிடுவதற்கான சைக்கோ மெட்ரிக் தேர்வுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தன. உணர்ச்சி ஸ்திரத்தன்மை மற்றும் பகுத்தறிவு சிந்தனை போன்றவையும் அளவிடப்பட்டிருந்தன.
ஆய்வின் முடிவில் நன்கு படித்தவர்கள் விவரமானவர்கள் என்று அறியப்படக்கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் கூட அதிகமான போலிச் செய்திகளைப் பகிர்வது கண்டறியப்பட்டது. குறைந்த உணர்ச்சி ஸ்திரத்தன்மை உடைய நபர்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை பொருட்படுத்தாமல் உடனடியாக பகிர்கிறார்கள்.
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகியவை போலிச் செய்திகளை பகிர்வதற்கான முதன்மை தளங்களாக விளங்கி வருகின்ற. சுகாதாரம் மற்றும் குற்றச்செய்திகள் குறித்த போலிகள் பேஸ்புக் தளத்தில் அதிகம் பகிரப்படுகின்றன.
ஒரு செய்தியை நாம் கண்டடையும்போது அதிலிருந்து உணர்ச்சிகளை முற்றிலுமாக வடிகட்டி விட்டு செய்தியை மட்டும் பிரித்தறிய வேண்டியது அவசியமாகும். அச்செய்தியை பகிர்வதற்கு முன் அந்த செய்தியை உருவாக்கியவர்களின் நோக்கத்தை நாம் மதிப்பிட வேண்டும்.
பொறுப்பற்ற முறையில் போலிச் செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்வது சமுதாயத்தின் சமநிலையை குலைக்கும் ஒரு செயல்பாடாகும். சென்ற தலைமுறையினர் சமூக வலைதளங்களுக்கு புதியவர்கள். ஆனால் தற்போதைய தலைமுறை உண்மையை சீர்தூக்கி பார்த்து நடந்து கொள்ளக் கூடிய ஒரு புதிய தலைமுறையாக மலர வேண்டும்.