அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்த விவேக் ராமசாமி யார்? எலான் மஸ்க்கால் அங்கீகரிக்கப்பட்ட இவரைப் பற்றிய முழு விவரங்கள் இதோ..!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடந்த முறை வென்ற ஜோ பைடன் மற்றும் கடந்த முறை தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப் இருவரும் போட்டியிட தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் திடீரென்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி என்பவரது பெயர் அடிபடத் தொடங்கியது.
யார் இந்த விவேக் ராமசாமி? வெறும் 38 வயதான இவர் பெரும் சொத்துக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? அமெரிக்காவின் ஆகப்பெரிய பணக்காரரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுபவருமான டொனால்ட் ட்ரம்பை இவர் எதிர்க்கும் அளவிற்கு உருவான வரலாறு என்ன? எலான் மஸ்க் இவரை ஆதரிக்கின்றாரா? வாருங்கள் பார்க்கலாம்..
போன தலைமுறையில்தான் அமெரிக்க சென்ற குடும்பம்!
இவர்கள் குடும்பம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டது. விவேக்கின் தந்தை ராமசாமியும், தாயார் கீதாவும் பணி காரணங்களுக்காக அமெரிக்க குடிபெயர்ந்துள்ளனர். விவேக்கின் தந்தை ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்திலும் தாயார் மனநல மருத்துவராகவும் பணியாற்றியுள்ளனர்.
1985 ஆம் ஆண்டு ஓகியோ மாகாணத்தில் பிறந்தவர் விவேக். 2007 ஆம் ஆண்டு ஹார்வார்ட் யுனிவர்சிடியில் தனது பயாலஜி படிப்பை முடித்திருக்கிறார். யேல் சட்டக் கல்லூரிக்குச் சென்று அறிஞர் பட்டமும் பெற்றிருக்கிறார். கல்லூரி காலங்களில் ஒரு சிறந்த ராப் பாடகராக அறியப்பட்டாராம் விவேக்..!
பெரும் செல்வந்தர் ஆனதெப்படி?
2014 ஆம் ஆண்டு ரோவியன்ட் என்ற மருந்து உற்பத்தி ஆலையை தொடங்கி, பழைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்த மருந்து உற்பத்தி துறையில் புதிய அலையை ஏற்படுத்துகிறார் விவேக். மருந்து உற்பத்தித் துறையில் புதிய தொழில் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் புகுத்துவதில் விவேக் நிபுணராக இருந்துள்ளார்.
இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டே புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இவரது புகைப்படம் வெளியானது. 5 மில்லியனை 3 பில்லியனாக ஆக்கிய திறமைசாலி என்று போர்ப்ஸ் பத்திரிக்கை இவரைப் புகழ்ந்திருந்தது. அப்போது விவேக்கிற்கு வயது வெறும் 30 தான்.
பிறகு 2021 ஆம் ஆண்டு தன் நண்பர்களின் துணையோடு ஸ்ட்ரைவ் அஸ்ஸெட் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்தைத் துவங்கி நடத்தி வருகிறார். குறுகிய காலத்தில் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு மிகப்பெரிய அளவில் பொருளாதரத்தை பெருக்கியவர் விவேக் ராமசாமி.
அரசியல் ஆர்வம்..!
2017 முதலே வலதுசாரி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் விவேக். கருப்பின வாழ்வு குறித்த இயக்கம் மற்றும் அமெரிக்க எல்லைப் பிரச்சனைகளில் விவேக் குரல்கொடுத்து வருகிறார். அமெரிக்காவில் எந்த துறையாக இருந்தாலும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துபவர் விவேக்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியில் இருந்து டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட இருக்கின்றார்கள். இருப்பினும் விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே துணை அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பது இங்கே கவனிக்கப்படவேண்டியது.
எலான் மஸ்கின் ஆதரவு!
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், விவேக் ராமசாமியை அமெரிக்க அதிபர் தேர்தலில் நம்பிக்கை நட்சத்திரம் என்றும், மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என்றும் கூறி, விவேக் ராமசாமியின் பேட்டியைக் கேட்குமாறு மக்களை வலியுறுத்தினார்.
இது அமெரிக்க மக்களிடையே விவேக் ராமசாமியின் பிம்பத்தைப் பலமடங்கு பெருக்கியது. அனைவரது பார்வையும் விவேக் பக்கம் திரும்பி உள்ளது. அவர் பேச்சை பல்லாயிரம் பேர் உற்றுக் கவனிக்கத் தொடங்கி உள்ளனர்.
பொருளாதார ரீதியான பலத்துடனும், எலான் மஸ்க் போன்ற ஆகப்பெரிய ஆளுமைகளின் ஆதரவுடனும் இருக்கும் விவேக் ராமசாமி அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.