அமெரிக்க மக்கள் தொகையில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைகிறதா? ‘ஜென் இசட்’ கடைசி வெள்ளை இனமாகிறதா? அதிர்ச்சித் தகவல்!

உலகின் மூன்றாவது மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு அமெரிக்கா. வட அமெரிக்கக் கண்டத்தில், அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளை உள்ளடக்கிய ஐம்பது மாநிலங்களையும், ஒரு குடியரசு மாவட்டத்தையும் கொண்டுள்ள அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 331 மில்லியன் ஆகும். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் தெரிய வந்துள்ளது. கி.பி. 1776 ஆம் ஆண்டுக்குப் பின் வெள்ளை இன மக்கள்தொகை முதன்முதலாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாக அதிகரித்துள்ளது என்றும் வேறு எந்தக் கண்டத்தைச் சேர்ந்தவர்களையும் விட ஆசியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்றும் அந்தக் கணக்கின்படி தெரியவந்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் 1997 – 2012 க்கிடையில் பிறந்தவர்களை ஜெனரேஷன் இசட் என்று அழைப்பார்கள். அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் அமைந்த புதிய ஆய்வின்படி, வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கடைசி மக்கள் தொகையாக இந்த ஜெனரேஷன் இசட் பிரிவினரே இருப்பார்கள் எனத் தெரியவந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
2012 க்குப்பின் பிறந்தவர்களில் பாதிக்கும் குறைவாகவே வெள்ளையர்கள் இருக்கிறார்கள் என்றும் 2045 ஆம் ஆண்டளவில் அமெரிக்க நாடு பெரும்பான்மை கருப்பர்கள் மற்றும் சிறுபான்மை வெள்ளையர்கள் என்ற நிலையில் இருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின்படி 1980இல் 80 சதவீதமாக இருந்த வெள்ளையர்கள் 2020ஆம் ஆண்டில் 59 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது கருப்பின மக்கள் தொகை வளர்ச்சியால் நிகழவில்லை என்றும் அந்த இனத்தின் மக்கள் தொகை கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து 12 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகவே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை ஹிஸ்பானிக், ஆசிய மற்றும் பிற கலப்பு இன மக்களின் தொகை முறையே 19 சதவீதம், 6.3 சதவீதம் மற்றும் 3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வின்படி ஹிஸ்பானிக் அல்லாத வெள்ளையர்களில் 77 சதவீதம் பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 67 சதவீதம் பேர் 55 லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 55 சதவீதம் பேர் 35-லிருந்து 44 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பாதிக்கும் மேல் பதினெட்டில் இருந்து இருபத்து நான்கு வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 47 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 25 சதவீதம் பேர் ஹிஸ்பானிக், 13 சதவீதம் பேர் கருப்பின மக்கள், 5.4 சதவீதம் பேர் ஆசிய மக்கள் மற்றும் மீதம் இருப்பவர்கள் கலப்பின மக்கள் எனவும் தெரிய வந்துள்ளது. அதேவேளை, இந்தத் தரவுகள் முற்றிலும் நம்பகமானது எனக் கூற இயலாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது அமெரிக்க மக்கள் தங்கள் இனத்தை சுயமாக அடையாளம் காணும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது கலப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய் அல்லது தந்தையின் இனம் அல்லது இரண்டு பேருடைய இனங்களையும் அடையாளம் காணமுடியும். அதேபோல் அமெரிக்க அரசால் வெள்ளையர்கள் எனக் கருதப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களுக்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படிவங்களை நிரப்புவதில் விருப்பமில்லை. கடந்த 2020ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது இணையம், தொலைபேசி மற்றும் காகித வினாத்தாள் மூலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினர் டெக்ஸாஸ் உள்ளிட்ட சிவப்பு மாநிலங்களுக்கு ஹிஸ்பானிக் வாக்காளர்களை இறக்குமதி செய்வதற்கு ஜனநாயகக் கட்சியினர் லாக்ஸ் எல்லைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். பொதுவாகவே இந்த ஹிஸ்பானிக் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள சில வலதுசாரிகள் தங்களது நாட்டில் நிகழும் பிற இனங்களின் குடியேற்றங்கள் தங்களைச் சொந்த நாட்டில் இருந்து அப்புறப்படுத்தும் நிலைக்குத் தள்ளுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
அமெரிக்காவின் வெள்ளை இன மக்கள்தொகை குறைதல் என்பது சமீப காலமாக ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அங்கே சில பத்திரிகைகள் இது வெள்ளை இனத் தேசியவாதிகளால் பரப்பப்படும் இனவாதச் சதிக் கோட்பாடு என்று கூறுகின்றன. இருப்பினும் அதே பத்திரிகைகள்தான் வெள்ளை அப்போகாலிப்ஸ்க்கான கவுண்ட்டவுன் என்னும் தலைப்பில் கட்டுரைகளை எழுதிக் கொண்டாடின என்பதும் குறிப்பிடத்தக்கது.
“இப்படிப் பத்திரிகைகளும் பண்டிதர்களும் வெள்ளையின மக்களின் தொகை குறைவதைக் கொண்டாடினாலும் அச்சப்பட்டாலும் வெள்ளையர்களே இந்நாட்டின் பெரும்பகுதியாக நெடுங்காலம் இருப்பார்கள்”, என்கிறார் சமூகவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆல்பா. மேலும் “ஒரு வகையில் நாங்கள் இங்கு ஒரு புதிய, மாறுபட்ட மற்றும் முக்கியமான சமூகத்தை உருவாக்குகிறோம் என்பதே உண்மை. அதில் வெள்ளையர்களே மிகப் பெரும் பகுதியாக இருப்பார்கள். ஒரு நாளும் அவர்கள் மறையப் போவதோ இடமாற்றம் செய்யப் போவதோ இல்லை”, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.