Walnut Health Benefits in Tamil

வால்நட் என்னும் அக்ரூட்டின் மருத்துவப் பயன்கள்
வால்நட் என்பது ஜுக்லன்ஸ் ரீஜியா (Juglans regia) குடும்பத்தைச் சேர்ந்த மரப் பழங்களின் விதையாகும். இந்த விதையின் பருப்பு ஒரு உணவுப்பொருள். இந்தியாவில் இப்பருப்பு அக்ரூட் எனப்படுகிறது.
அக்ரூட் பருப்பில் ஒமேகா-3 கொழுப்புகளும் (omega-3 fats) ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களும் (antioxidants) நிறைந்துள்ளன. அக்ரூட் சாப்பிடுவது மூளையின் நலத்தை மேம்படுத்தக்கூடும் என்றும் இதயநோயையும் புற்றுநோயையும் தடுக்கக்கூடும் என்றும் பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் காட்டுகின்றன.
அக்ரூட் பருப்பு ஊட்டந்தரும் உணவுப் பொருள். அது 65% கொழுப்புச்சத்தாலும் 15% புரதத்தாலும் ஆனது. அக்ரூட்டில் குறைவான அளவே மாவுச்சத்து உள்ளது; அதிலும் பெரும்பாலானது நார்ச்சத்தே. மற்ற விதைகளைப் போலவே அக்ரூட் பருப்புகளில் உள்ள பெரும்பாலான கலோரிகள் கொழுப்பிலிருந்துதான் வருகின்றன. இதனால் அக்ரூட் ஆற்றலடர்த்தியான, அதிக கலோரிகள் கொண்ட உணவாக விளங்குகிறது. அக்ரூட்டில் கொழுப்புச்சத்தும் கலோரிகளும் நிறைந்திருந்தாலும் அவை உடல் பருமனை அதிகரிக்காது என்று ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.
அக்ரூட் பருப்புகளில் லினோலெனிக் அமிலம் எனப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலம் ஏராளமாக உள்ளது. உடல்நலத்துக்கு மிக உதவும் ஒமேகா-3 கொழுப்பான ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் அக்ரூட் பருப்புகளில் மட்டுமே கணிசமான அளவு உள்ளது. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் இதயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது அழற்சியைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
அக்ரூட் பருப்புகளில் பல கனிமங்கள் உள்ளன. அவற்றுள் சில இதய நலத்தையும் நோயெதிர்ப்பு ஆற்றலையும் மேம்படுத்தும் செம்பு; உடல் எலும்புகளில் உள்ள ஒரு கனிமமான பாஸ்பரஸ்; வளர்சிதை மாற்றம், எலும்பு உருவாக்கம், ஆக்சிஜனேற்ற அழிவிலிருந்து (oxidative stress) பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இன்றியமையாத மாங்கனீஸ் ஆகியவை.
அக்ரூட்டில் உயிர்ச்சத்து (வைட்டமின்) பி9 என்று அழைக்கப்படும் ஃபோலிக் அமிலம், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும் உயிர்ச்சத்து பி6, காமா-டோகோஃபெரோல் என்று அழைக்கப்படும் உயிர்ச்சத்து ஈ-இன் சிறப்பு வடிவம் ஆகிய உயிர்ச்சத்துக்கள் உள்ளன.
இவற்றைத் தவிர அக்ரூட் பருப்புகளில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களான தாவரச் சேர்மங்கள் பல உள்ளன. இதயநோய் மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கக்கூடிய எல்லாஜிக் அமிலம்; இதயநலத்துக்கு உதவக்கூடிய கேட்டசின்; உடல் கடிகாரத்தை சீராக்க உதவும் மெலடோனின்; நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானான ஃபைடிக் அமிலம் ஆகியவை அவற்றுள் சில.
அக்ரூட் பருப்புகளில் இதயநலத்தை மேம்படுத்தும் கொழுப்புகளும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களும்அதிகம் உள்ளதால் அக்ரூட்டை தவறாமல் அளவோடு உண்பது உடல் நலத்தைப் பல வகைகளில் மேம்படுத்தும். இந்தப் பருப்புகளை உணவில் எளிதில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது பல வகையான உணவுகளில் சேர்த்தும் உண்ணலாம். உடல்நலம் காக்க நாம் தவறாமல் உண்ணவேண்டிய மிகச்சிறந்த உணவுப் பொருள்களில் அக்ரூட் ஒன்று.