விட்டமின் சி மாத்திரைகளை அதிகம் எடுத்தால் சிறுநீரகப் பிரச்சினைகள் உண்டாகும்! கவனம் தேவை!

விட்டமின் சி நம்முடைய உடலுக்குத் தேவையான மற்றும் அடிப்படையான ஒரு உயிர்ச்சத்து. நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் இந்த உயிர்ச்சத்தானது தொற்றுநோய்களில் இருந்து நம்மைக் காக்கவும் உதவுகிறது. விட்டமின் சி ஒரு ஆக்சிஜனேற்றியும் கூட. அதாவது உணவுப்பொருள்கள் செரிக்கப்படும்போது சிகரெட் புகை, கதிர்வீச்சு அல்லது மாசு ஆகியவற்றின் ஃப்ரீ ரேடிக்கல்களினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உதவும். இதனால்தான் தோல் பராமரிப்புப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கி இளமையான சருமத்தைப் பெறுவதற்கு விட்டமின் சி உதவுகிறது. அதேவேளை சப்ளிமென்ட்டாக விட்டமின் சி மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் அவை என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
நீங்கள் விட்டமின் சி மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவரென்றால் மிகுந்த கவனம் தேவை. விட்டமின் சி மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அது மிகுந்த ஆபத்தில் முடியும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவ வல்லுனர்கள். சமீபத்தில் டிக்டாக் பிரபலம் ஒருவர் தனது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் அதிகளவு விட்டமின் சி-யை எடுத்துக் கொண்டதாகவும் இதனால் தனது சிறுநீரகத்தில் கற்கள் உண்டானதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் அவர் ஐம்பது கிராம் விட்டமின் சி மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த மருத்துவர் ஆஷ்லே வின்டர், “அதிகமான விட்டமின் சி எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது. ஏனெனில் விட்டமின் சி நீரில் கரையக்கூடியது. அது உங்கள் உடலில் சேமிக்கப் படுவதில்லை. மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். அப்படி சிறுநீர் கழிக்கும்போது விட்டமின் சி-யானது ஆக்சலேட் ஆக மாறுகிறது. பின்னர் இது படிகமாகி சிறுநீரகக் கற்கள் உருவாக முக்கியமான காரணமாகிறது. இந்தச் சிறுநீரகக் கற்கள் சிறுநீர் வெளியேறுவதைத் தடுத்து மிகுந்த வேதனையைக் கொடுக்கும். அதே நேரம் சிறுநீரகங்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியதிருக்கும். சிலருக்கு இயற்கையாகவே இப்படி உருவாகும் சிறுநீரகக் கற்களைக் கரைக்க முடியும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சிறுநீரகக் கற்களை நீக்க முடியும். சில சமயங்களில் அதிகப்படியான விட்டமின் சி, சிறுநீரகச் செயலிழப்புக்குக் கூட வழிவகுக்கும். எனவே விட்டமின் சி அதிகமாக உட்கொள்வது மோசமான சிறுநீரகப் பிரச்சினையை உருவாக்குமே தவிர நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்காது. குடல் மாலாப்சாரப்ஷன் பிரச்சினைகளை ஏற்படுத்தும் சில உடல்நலக் குறைபாட்டிற்கும் மீத்தனாமைன் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளை எதிர்ப்பதற்குமே விட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளிலும் ஒரு நபருக்கு 500 மில்லிகிராமுக்கு மேல் அவை தேவைப்படாது” என்கிறார். மேலும் கொரோனா தொற்றுநோய்க் காலத்தின்போதும் அதன்பின்னும் அதிக அளவு விட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
இவரைப் போலவே மருத்துவ டையட்டிஷியனான டானா எல்லிஸ் ஹான்னஸ் என்பவர் அதிக அளவு விட்டமின் சி சப்ளிமென்ட்ஸ் எதற்கும் உதவுவதில்லை என்கிறார். மேலும் மக்கள் பொதுவாகத் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புவதாகவும் இதற்காகவே இவ்வகை மருந்துகள் சந்தைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதைப் போலவே 2020ஆம் ஆண்டில் விட்டமின் சி மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக விட்டமின் சி பெண்களுக்கு 75 மில்லி கிராம் அளவிலும் ஆண்களுக்கு 90 மில்லி கிராம் வரையிலும் பரிந்துரைக்கப்படுகிறது. இதைப் பெரும்பாலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். விட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, பிரஸ்ஸல்ஸ், ப்ராக்கோலி, முளைகட்டிய தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தாலே விட்டமின் சியின் தினசரி அளவை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளலாம். இந்த வகையான உணவுகள் விட்டமின்களுக்கான ஆதாரமாக இருப்பதோடல்லாமல் அவற்றில் இருக்கக்கூடிய கால்சியம் சிறுநீரகக் கற்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்துக் கொள்கின்றன என்று ஹாவர்ட் ஹெல்த் செய்தி வெளியிட்டுள்ளது.
நம்முடைய உடலில் காயங்களோ வீக்கமோ இருந்தால் அந்தச் சமயங்களிலும் விட்டமின் சி கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் ஒரு நாளில் 100 மில்லி கிராமுக்கும் அதிகமான வைட்டமின் சி எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அது பரிந்துரை செய்கிறது. இரும்புச்சத்துக் குறைபாடு மற்றும் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் விட்டமின் சியை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது எனவும் அது தெரிவிக்கிறது.
சப்ளிமெண்ட்ஸ் தேவைகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். எனவே ஒருவர் தனது ஆரோக்கியத்திற்கு அதிகமான விட்டமின்தான் தேவை என்ற அனுமானத்தை விட்டுவிட்டு தனது உடலுக்குத் தேவையானது என்ன மற்றும் சிறந்தது என்ன என்பதைச் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் சென்று ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
ஆன்லைனில் பார்த்து அறிந்து கொண்டு முடிவெடுப்பது, அருகில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு முடிவெடுப்பது ஆகியவை குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பைக் குடல் பிரச்சினைகளில் தொடங்கி மிக மோசமான மற்றும் விபரீதமானப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் முடிந்தவரை விட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.