வெண்பா: தமிழ்க் கலாச்சாரத்தோடு கூடிய சமையல் வீடியோ விளையாட்டு

சமையல் பற்றிய விளையாட்டு என்றவுடன் பொதுவாக நமக்குத் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பல்வேறு விதமான ‘ரியாலிட்டி ஷோக்கள்’ நினைவுக்கு வரலாம். இரக்கமற்ற நடுவர்களுடன் அவர்களுடைய சவால்களைச் சமாளிக்கும் கோமாளிகளாக மாறும் பங்கேற்பாளர்கள் ஞாபகத்தில் வரலாம். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதுதான் ‘வெண்பா’.
வெண்பா என்பது ஒரு சமையல் வீடியோ விளையாட்டு. இந்தியாவை விட்டு வெளியேறிக் கனடாவில் வாழ்க்கை நடத்தும் வெண்பா என்னும் தமிழ்ப் பெண் தனது கணவர் பாவலனுடனும் பொருளாதாரச் சிக்கலுடனும் தனது ஒரே மகனான கவினை அந்த வெளிநாட்டுச் சூழலில் வளர்ப்பதற்குச் செய்த தியாகங்களை மையமாகக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுதான் இது. தன் தாயின் சமையல் செய்முறைப் புத்தகத்தை மீட்டெடுத்து அவள் தன் மகனுக்கு எப்படி சமைக்கக் கற்றுக் கொடுக்கிறாள் என்பதும் இதில் சொல்லப்படுகிறது.
இதில் நீங்கள் 1980களில் தனது குடும்பத்துடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்த ஒரு இந்தியத் தாயாக விளையாடலாம். இதில் இடம்பெறுபவர்கள் பல்வேறு உணவுகளைச் சமைப்பார்கள். தங்களது குடும்பத்தின் கதைகளை அறியும் போது இழந்த சமையல் குறிப்புகளை எல்லாம் மீட்டெடுப்பார்கள். ஆக, இது தமிழ் உணவு வகைகளையும் கனடாவில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தின் அழகான கதையையும் வழங்குகிறது. இந்த விளையாட்டை நீங்கள் விளையாடும் போது ஒவ்வொரு முறையும் ஒரு உணவைச் சமைப்பீர்கள். அப்போது நீங்கள் அதன் செய்முறையையும் பார்ப்பீர்கள். ஆனால் அதன் ஒரு பகுதி மட்டுமே உங்களுக்குத் தெரியும். ஏனெனில், அதன் மற்றொரு பகுதி கிழிந்திருக்கும். விளையாடும் நீங்கள் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட வழியில் உணவைச் சமைக்க அந்த செய்முறைக் குறிப்பிலிருந்து துப்புகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டும். ஆகவே இது சமையல் புதிரோடு விளையாடக்கூடிய ஒரு வீடியோ கேம்.
இந்த வீடியோ விளையாட்டை விசாய் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. எம்எஸ் விண்டோஸ், நின்டெண்டோ சுவிட்ச், பிளே ஸ்டேஷன் 5, எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ்-எக்ஸ்/எஸ் ஆகியவற்றில் ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. முதன்முதலில் ‘ஹோல் கேம்ஸ்’ திருவிழாவில் ஒரு வருடத்துக்கு முன் இந்த வீடியோ கேம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘டிரிபைகா கேம் ஷோகேஸில்’ கேமின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது.
இதை உருவாக்கியவர் டொராண்டோவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர் அபி. இவரது தமிழ்க் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஆராயும்போது காதல், இழப்பு, அன்பு பற்றிய அழகான மற்றும் ஆழமான கதையைச் சொல்வதற்காகவே இந்தப் புதிய கேமை உருவாக்கி இருக்கிறார் எனத் தோன்றுகிறது. அதே நேரத்தில் இது அவருடைய சுயசரிதை அல்ல. எண்பதுகளில் இந்தியாவில் இருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஒரு பெண்ணின் பெயரால் இந்த வீடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் வெண்பா. ஒவ்வொரு அத்தியாயமும் அவரது தாயின் சமையல் புத்தகத்தின் அடிப்படையிலான உணவுகளில் கவனம் செலுத்துகிறது. அந்தப் புத்தகம் அவரது அன்னையின் அன்புக் கரங்களால் எழுதப்பட்டவை. நாளடைவில் அவை கறைபட்டு கிழிந்து போயிருக்கின்றன.
வெண்பா மற்றும் அவருடைய கணவர் பாவலன் ஆகிய இருவருக்கும் போதுமான கல்வியறிவு இருந்தபோதும் பொருத்தமான கனடியன் அனுபவம் இல்லை என்னும் நிராகரிப்பு கடிதங்களும் அவர்களின் மகன் கவின் வீட்டில் தமிழை விட ஆங்கிலத்தில் அதிகம் பேசுவதும் தன்னுடைய நண்பர்கள் தன்னைக் கெவின் என்று அழைப்பது போலவே வீட்டில் அனைவரும் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கலாச்சாரத்துடன் உணவும் கதையும் நகரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கேம் புலம்பெயர்ந்தவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் உடனடியாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதை உருவாக்கிய அபி என்ன கூறுகின்றார் தெரியுமா? குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் பேசாமல் இருக்கலாம். தங்களது பெற்றோர்கள் பார்த்து ரசித்த திரைப்படங்களையோ, நிகழ்ச்சிகளையோ, இசையையோ ரசிக்காமல் போகலாம். ஆனால் அவர்களைக் கடந்து செல்ல முடியாத ஒரு விஷயம் உள்ளது. அதுதான் உணவு. சொல்லப்படாத, சொல்லமுடியாத அனைத்தையும் அதன் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லிவிடலாம். இந்த விளையாட்டில் வெண்பா தனது மகன் கவினுக்குச் சமையல் குறிப்புக்களைக் கற்றுக் கொடுக்கிறாள். அவள் தன்னையும் தனது மகனையும் இணைக்க மீதமுள்ள கடைசிப் பாலமாக உணவைப் பயன்படுத்துகிறாள். உதாரணமாக, இரவு உணவிற்குக் கவின் பீட்சாவை ஆர்டர் செய்ய வலியுறுத்தும்போது வெண்பாவோ அரைத்த அரிசி மற்றும் தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து புட்டு செய்கிறாள். உருளை வடிவக் குக்கரில் அதை வேக வைக்கும்போது கவினுடைய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அது ராக்கெட் ஷிப் போல் தெரிகிறது என்கிறாள். இப்படி உணவுடன் தன்னையும் தன் மகனையும் இணைத்துக் கொள்கிறாள். ‘நான் இந்த விளையாட்டை ஆராய்ச்சி செய்தபோது எங்கள் தென்னிந்திய உணவுகளில் எவ்வளவு அறமும் அறிவும் வரலாறும் ஆழமும் உள்ளது என்பதை உணர்ந்தேன்’ என்று கூறிய அபி இந்த வெண்பா நம் சொந்தக் குடும்பங்களில் நாம் காணும் பல தாய்மார்களின் கலவையைப் போன்றவர் என்று கூறியிருக்கிறார். இளம் பருவத்தில் தனது தலைமுறைக்கும் பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட கலாச்சார இடைவெளியைத் தான் அனுபவித்ததாகக் கூறும் அபி, வெண்பா என்பது கலாச்சாரத்தின் வேர்களை அறிவது மற்றும் எங்கிருந்து, ஏன் வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்வது என்றும் ஒவ்வொரு வயதினரும் விளையாடக்கூடிய ஒரு உலகளாவிய விளையாட்டு என்றும் கூறுகிறார். மொத்தத்தில் இந்த வெண்பா உங்களுக்கு வீடியோ கேம் விளையாடும் உணர்வைத் தராது. மாறாக நிஜ மனிதர்களின் வாழ்க்கையை உணர வைப்பதாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்கிறார் சென்னையில் பிறந்து பன்னிரண்டு வயதில் தனது பெற்றோருடன் கனடாவுக்குக் குடிபெயர்ந்த அபி.