நீங்கள் சைவ உணவு பிரியரா? இடுப்பு கவனம்!

செய்தி சுருக்கம்:
இங்கிலாந்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம் சமீபத்தில் பெரிய அளவில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி, தொடர்ந்து இறைச்சி சாப்பிடுகிறவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு இடுப்பு முறிய 50 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
முதியவர்களுக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்படுவது அதிகமாகியிருக்கிறது. இடுப்பு எலும்பு முறிந்தால் முதியவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் அவர்களது அன்றாட நல்வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகிறது.
முன்னர், சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறியும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது. தற்போது பாலின வேறுபாடின்றி சைவ உணவு உண்ணும் ஆண், பெண் இருபாலருக்கும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட அசைவ உணவு சாப்பிடுகிறவர்களை காட்டிலும் 50 சதவீதம் வாய்ப்பு அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைவ உணவினால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாயினும், சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் உடல்நிறை குறியீடு குறைவாக இருப்பதாலும், புரோட்டீன் என்னும் புரதச் சத்து குறைவின் காரணமாகவும் முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பின்னணி:
குறிப்பாக ஒருவருக்கு வயதாகும்போது எலும்பு வலு இழக்கத் தொடங்குகிறது. இதை ஆஸ்டியோபோரோசிஸ் என்று கூறுகிறார்கள். எலும்புகளிலுள்ள தாதுகளின் அடர்த்தியும் எலும்பின் நிறையும் குறையும்போது, எலும்புகள் அமைக்கப்பட்டுள்ளவிதம் மாறுபடும்போது எலும்புகள் வலு இழக்கின்றன. இதனால் இடுப்பு எலும்பு முறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது. பெரும்பாலும் இளம் வயதினர், ஏணி போன்ற உயரமான பொருள்களிலிருந்து விழுந்து அல்லது வாகன விபத்தில் சிக்கி இடுப்பெலும்பு முறிவால் பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. இவர்களுள் பெரும்பாலானோர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராவர். வீட்டில் அல்லது வெளியே விழுவதால் இவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிகிறது.
இடுப்பு எலும்பு முறிந்தால் வலி மிகவும் அதிகமாக இருக்கும். அதற்காகவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இடுப்பு எலும்பு முறிந்து சிகிச்சையில் இருப்போருக்கு படுக்கைப் புண், இரத்தம் கட்டுதல், நிமோனியா உள்ளிட்ட வேறு பாதிப்புகளும் ஏற்படக்கூடும். முதியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிந்து சிகிச்சை பெறும்போது, நீண்டகாலம் படுக்கையில் இருக்கவேண்டியதிருப்பது அவர்கள் மனநிலையையும் பாதிக்கும்; இது உடல் சுகம்பெறுவதை தாமதப்படுத்தும்.
இறைச்சியும் இடுப்பும்
இடுப்பெலும்பு முறிவு குறித்த ஆய்வு திட்டத்தில் 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இணைக்கப்பட்டவர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை இறைச்சி சாப்பிடுகிறவர்கள், வாரத்திற்கு ஐந்து முறைக்கு குறைவாக இறைச்சி சாப்பிடுகிறவர்கள், மீன் சாப்பிட்டு இறைச்சி சாப்பிடாதவர்கள், பால் சார்ந்த உணவு பொருள்கள் மட்டும் சாப்பிட்டு மீனோ, இறைச்சியோ சாப்பிடாதவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆய்வில் பங்கேற்றனர். இவர்களுக்கு உணவை பற்றிய தகவல் வழங்கப்பட்டிருந்தது. 2021ம் ஆண்டு வரை இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் தகவல்கள் மருத்துவமனையின் பதிவேட்டிலிருந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டது.
பிஎம்ஐ எனப்படும் உடல் நிறை குறியீடும் இடுப்பு எலும்பு முறிவில் முக்கிய ஆதாரமாக கூறப்படுகிறது. ஒருவரது உயரத்திற்கும் உடல் எடைக்கும் இடையே உள்ள விகிதம் பிஎம்ஐ எனப்படுகிறது. ஒருவருடைய உடல் எடையை கிலோ கிராமில் குறித்துக்கொண்டு, அவரது உயரத்தை மீட்டரில் குறித்துக்கொண்டு, எடையை உயரத்தின் வர்க்கத்தால் வகுத்தால் உடல் நிறை குறியீடு கிடைக்கும். இதைக்கொண்டே ஒருவரது உடல் எடை தேவைக்கு குறைவாக உள்ளதா, அதிகமாக உள்ளதா, உடல் பருமன் என்ற நிலையை எட்டியிருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக பிஎம்ஐ 25 கிகி/மீ கொண்டவரோடு ஒப்பிடும்போது பிஎம்ஐ 20 கிகி/மீ கொண்டவருக்கு இடுப்பு எலும்பு முறிவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகமாகும்.
நான்கு லட்சத்துக்கும் அதிகமானோரில் ஏறக்குறைய மூவாயிரத்து ஐந்நூறு பேர் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். மொத்த அளவில் இதன் விகிதாச்சாரம் 1 சதவீதத்துக்கும் குறைவாக, அதாவது 0.8 சதவீதமே இருந்தது.
இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டோரில் சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கையே அதிகம் காணப்பட்டது. தொடர்ந்து இறைச்சி உண்பவர்களுக்கும், எப்போதாவது இறைச்சி உண்பவர்களுக்கும் இடையே எவ்வித மாற்றமும் தென்படவில்லை. மீன் மட்டும் சாப்பிகிறவர்களுக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்படும் வாய்ப்பு 8 சதவீதம் அதிகமாக இருந்தது. இன்னொரு ஆய்வானது 2050ம் ஆண்டில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவோரின் எண்ணிக்கை இருமடங்காகக்கூடும் என்று கணிக்கிறது.
புரதம் என்னும் பாதுகாப்பு
எலும்புகள் இயங்குவதால் ஏற்படும் வழக்கமான அழுத்தங்களை சமாளிப்பதற்கும், எலும்புகள் ஆரோக்கியமாக பராமரிக்கப்படவும் ஊட்டச்சத்துகள் அவசியம். கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துகள் எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியவை. இவற்றுடன் உணவு மூலம் உடலில் சேரும் புரோட்டீன் என்னும் புரதச் சத்தும் மிகவும் அவசியமாகும். எலும்பில் தாது சத்துகளின் அடர்த்தியை அதிகரிப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக புரத சத்து உணவுகளை சாப்பிடுவதன் நன்மையை பல ஆய்வுகள் சுட்டிகாட்டியிருக்கின்றன. இது இடுப்பு எலும்பு முறியும் அபாயத்தை குறைக்கிறது. குறிப்பாக, மாதவிடாய் நிற்றல் என்னும் மெனோபாஸ் பருவத்தில் எலும்புகளை பலமாக காத்துக்கொள்ள புரத சத்து உதவும்.
முக்கிய ஊட்டச்சத்துகளின் சமநிலை குறித்து அறிந்துகொள்வதோடு, உணவின் தரத்தை சரியாக புரிந்துகொள்வதும் வரும் காலங்களில் எலும்பு ஆரோக்கியமாக இருப்பதற்கான உணவுகளை சாப்பிடுவதற்கு வழி செய்யும்.