மெதுவாக இயங்கும் பிரபஞ்சம் : முற்காலத்தை விட ஐந்து மடங்கு மெதுவாக இயங்குவதாக ஆய்வு முடிவு!

செய்தி சுருக்கம்:
காலம் மெதுவாக இயங்குகிறது என்றதும் நம்முடைய பகல் இரவு நேரங்கள் நீளப் போகிறதோ என்று கருத வேண்டாம்.. நாம் இங்கு பார்க்க போவது அண்டவியல் காலத்தை பற்றி.
அண்டவியல் கால விரிவாக்கம் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு, ஆரம்பகால பிரபஞ்சத்தை விட இப்போது மிக மெதுவாக நிகழ்வதாகத் தெரிகிறது. உண்மையில் பிரபஞ்சம் மிக இளமையாக இருந்த பொழுது காரியங்கள் மிக மெதுவாக நடந்ததாகத் தெரிந்தது. வானியல் பொருட்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதன் மூலம் காலம் முன்பை விட மிக மெதுவாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
காலம் மெதுவாக இயங்குகிறது என்ற கருத்து நமக்கு புதிதாக இருக்கலாம். பிக் பேங் தியரி எனப்படும் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் விரிவடைந்து கொண்டே செல்லும் இந்த பிரபஞ்சம் அதன் அருகில் உள்ளவற்றை ஏற்கனவே நமக்கு வெளிக்காட்டி விட்டது. இப்பொழுது நாம் பார்த்து வருவது அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள விஷயங்களைத்தான்.
பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் இருந்து பூமியில் இருக்கும் நமக்கு அவை வெளிப்படுவதால், அவற்றின் செயல்பாடுகள் மிக மெதுவாக இருப்பதாக நமக்கு தோன்றுகிறது. மிக சிக்கலான இந்த கோட்பாடு புரிந்து கொள்ளவும் சற்று கடினமானதுதான்.
உதாரணமாக, நமக்கு அருகில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிளானது அதிவேகத்தில் செல்வது போல தோன்றும் நமக்கு, வானத்தில் தொலைவில் உண்மையாகவே அதிவேகத்தில் செல்லும் விமானம் மெதுவாக செல்வது போல தோற்றமளிக்கும்.
இதன் காரணமாகவே பிரபஞ்சத்தில் மிக வெகு தொலைவில் நிகழும் காரியங்கள் நமக்கு அருகில் இருக்கின்ற பிரபஞ்ச நிகழ்வுகளோடு ஒப்பிடுகையில் மிக மெதுவாக நடப்பது போல நமக்கு தெரிகின்றன.
1990 களில் இருந்து பிரபஞ்ச நிகழ்வுகளை கவனித்து வரும் வானியல் இயற்பியலாளர்கள் தொலைதூர சூப்பர் நோவாக்களின் இந்த தாமதமான காலப்போக்கை கண்டறிந்தனர்.
இங்கே நாம் குவாசர்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அண்டவெளியின் மையத்தில் காணப்படும் ஒளி நிறைந்த பகுதியே குவாசர்கள் ஆகும். இவை அதிக ஆற்றலை வெளியேற்றும் சூடான பிளாஸ்மாவால் சூழப்பட்ட துளைகளாகும்.
பிரபஞ்சம் தொடங்கி சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு தொலைவில் இருக்கும் ஆரம்ப குவாசர், அதைவிட அருகில் இருக்கும் ஆரம்ப குவாசரை விட ஐந்து மடங்கு மெதுவாக இயங்குவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வானவியலில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு வியப்பாக இருக்கும் இதுபோன்ற தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விரைவாக சென்றுவிடுகிறதே என்று கவலை கொள்ளும் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை!!