கச்சா எண்ணெய்ப் பரிவர்த்தனைகளைத் தேசிய நாணயங்களில் தீர்க்க இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து தங்கள் கச்சா எண்ணெய்ப் பரிவர்த்தனைகளை அந்தந்த நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தித் தீர்த்து வைப்பதன் மூலம் மிகவும் அற்புதமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. முக்கியமான இந்தப் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹாம் பயன்படுத்தப்படும் என்றும் இது சர்வதேச வர்த்தக இயக்கவியலில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணையை வாங்குவதற்கானப் பரிவர்த்தனையில் இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனமானது அதன் இந்திய ரூபாயைச் செலுத்தும் என இந்திய அரசாங்கம் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப் (ஐஓசி.என் எஸ்) நிறுவனம் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனிக்குப் பணம் செலுத்தியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதியன்று இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாகத் தேசிய நாணயங்கள் சம்பந்தப்பட்ட முதல் பரிவர்த்தனையானது ஆகஸ்ட் மாதம் பதினான்காம் தேதியன்று தொடங்கியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கியால் எளிதாக்கப்பட்ட உள்ளூர் நாணயத் தீர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இது வழி வகுக்கிறது.
இதனால் பரிவர்த்தனை நேரம் மற்றும் செலவுகள் பெருமளவு குறையும் என்றும் இடைநிலை நாணயங்களின் தேவையை நீக்குவதன் மூலம், இரு நாடுகளும் அந்நியச் செலாவணிக்கான செலவினங்களில் சேமிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இரு நாடுகளின் மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும். மேலும் தேசிய நாணயங்கள் அடிப்படையிலான இந்தப் பரிவர்த்தனைகள் பொருளாதாரப் பின்னடைவை நீக்குவதற்கும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, உள்ளூர் நாணயங்களில் உள்ள எந்த உபரி நிலுவைகளும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் உட்பட பல்வேறு உள்நாட்டுச் சொத்துக்களில் முதலீடு செய்யப்படலாம்.
பொதுவாக, வெளிநாடுகளுடன் இந்தியா வர்த்தகம் செய்யும்போது, அதற்கானப் பணப்பரிவர்த்தனைகள் முழுதும் அமெரிக்க டாலரில்தான் நடைபெறும். ஏனென்றால், உலக வர்த்தகத்தில் அதிகம் அங்கீகரிக்கப்படும் பணம் அமெரிக்க டாலர்தான். ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால், ரஷ்யாவால் டாலரில் கட்டணம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக, ரஷ்யா தன் நாட்டுப் பணமான ரூபிளில் வர்த்தகம் மேற்கொள்ளும்படி கோரியது. ஆனால் ரூபிளின் மதிப்பு உலகச் சந்தையில் சரியாகக் கணிக்கப்படும் நிலையில் இல்லை. அதுமட்டுமல்ல, ரஷ்யாவின் ரூபிள் எளிதாகக் கிடைப்பதும் இல்லை. அதனால், இந்தியாவால் ரஷ்யாவுடன் ரூபிளில் வர்த்தகம் செய்ய இயலவில்லை. இந்திய ரூபாயில் வாங்கிக் கொள்ள ரஷ்யாவும் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை ரஷ்யாவுக்கு இந்திய ரூபாயின் மீது இருந்த நம்பிக்கையைக் குறைத்ததுதான் காரணம். இந்நிலையில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து தங்கள் கச்சா எண்ணெய்ப் பரிவர்த்தனைகளை அந்தந்த நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தித் தீர்த்து வைக்கப் போவதாக முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் வர்த்தகத்திற்கான இந்தப் பரிவர்த்தனையானது இன்னும் இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு வழி வகுக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் பரிவர்த்தனைகளில் ஒன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கியமான தங்க ஏற்றுமதியாளரிடம் நிகழ்ந்த 25 கிலோகிராம் தங்கம் அதாவது சுமார் 128.4 மில்லியன் ரூபாய் அதாவது 1.54 மில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைதான். இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களில் மிக முக்கியமானவையாகத் தங்கம், ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஆகியவை இருப்பதால், அத்தகைய வர்த்தப் பரிவர்த்தனையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதுவதற்கு தற்போதைய உள்ளூர் நாணயத் தீர்வு முறை மிகவும் உதவும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டு, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகமானது இருபது பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் இருந்தது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த எண்ணெய் அல்லாத வர்த்தகத்தில் 42 சதவீதமாகும். கச்சா எண்ணையை அதிக அளவில் வாங்குவதால் வர்த்தப் பற்றாக்குறை அதிகரித்து வந்த நிலையில் இந்தியா சமீப காலமாக, சர்வதேசப் பரிவர்த்தனைகளில் அதன் தேசிய நாணயமான இந்திய ரூபாயின் பயன்பாட்டை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 வங்கிகளுடன் இணைந்து, இந்தியா உள்நாட்டு வங்கிகளில் சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை நிறுவியுள்ளது, இது தேசிய நாணயங்களில் வர்த்தகத்தை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்நிலையில் உலகளாவிய வர்த்தக அரங்கில் தனது தடத்தை விரிவுபடுத்துவதைத் தொடர்ந்து இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துடன் உள்ளூர் நாணயப் பரிவர்த்தன முறையை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச வர்த்தகத்தின் போக்கை மறுவடிவமைக்கக்கூடிய புதுமையான வர்த்தக நடைமுறை என்றும் உலகளாவிய வணிகப் பரிவர்த்தனைகளுக்கு இது ஒரு முன்னுதாரணம் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.