fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம்

பல் ஆரோக்கியமின்மை மூளையைப் பாதிக்குமா?

    பொதுவாகப் பற்களைச் சுத்தமாக வைத்திராவிட்டால் சொத்தைப்பல், பற்சிதைவு, ஈறுகளில் இரத்தம் கசிதல், துர்நாற்றம் வீசுதல் ஆகியவை ஏற்படுமென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா? ஆனால் பற்களைச் சுத்தமாக வைத்திராவிட்டால் மூளைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்  குறிப்பாக மூளையையும் பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். 

பற்களின் எண்ணிக்கை மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோயின் அளவு ஆகியவை மூளையின் இடது ஹிப்போகாம்பஸில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பற்களில் ஏற்படும் நோய்கள் மூளைச் சுருக்கத்துடன்  தொடர்புடையவை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். பற்கள் ஆரோக்கியமின்மையானது மூளையின் அளவு குறைவதற்கு ஏதுவாகும் என்றும் அல்சைமர் நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

அல்சைமர் நோய் என்பது மூளைக் கோளாறாகும். இது நினைவாற்றல், சிந்திக்கும் திறன் மற்றும் எளிமையான பணிகளைச் செய்யும் திறன் ஆகியவற்றை மெதுவாக அழிக்கக்கூடியது. சமீபத்தில் அல்சைமர் நோயால் இறந்தவர்களின் மூளையை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அதில் பற்சிதைவு மற்றும் பல் சொத்தைகளால் உருவான பாக்டீரியாக்களின் டிஎன்ஏ இருப்பதை உறுதி செய்துள்ளார்கள். ஜின்ஜிபெயின்ஸ் என்ற என்சைம்ஸ் அதிலிருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள். இவை மனித புரோட்டின்களில் கரையக்கூடியவை என்றும் அல்சைமர் நோயை மிகவும்  தீவிரப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தச் சோதனையானது எலிகளை வைத்தும் நடைபெற்றுள்ளது. எலிகளுக்கு அதிகளவு பாக்டீரியத்தைச் செலுத்தி இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய்க்கிருமிகள் மூளை வரை சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். போர்ஹைரோமனஸ் ஜின்ஜிவாலிஸ் என்னும் அந்தப் பாக்டீரியா மூளை வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் இது தீவிரமடைந்தால் அல்சைமர் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். 

பொதுவாக நம்முடைய வாயில் சுமார் 100 முதல் 200 வகையான பாக்டீரியாக்கள் மற்றும் 700 வகையான நுண்ணுயிரினங்கள் இருப்பதாகவும் நம் வாயில் சுரக்கும் எச்சில் நீரில் ஒரு மில்லி லிட்டருக்கு பத்து கோடி பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பாக்டீரியாக்கள் பற்கள், ஈறுகள், நாக்கு என வாயின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும். நாக்கின் மீதும் வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும். வாயிலுள்ள இந்தப் பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் வளரும். இதற்கு ஓரல் மைக்ரோபையோட்டா என்று பெயர். 

அதேவேளை நம் வாயில் உள்ள பாக்டீரியாக்களெல்லாம் நோய்க்கிருமிகளைப் பரப்புவன அல்ல. ஆனால் பற்களை பராமரிக்காத பட்சத்தில் இந்தப் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் சமநிலை இல்லாமல் போய் நல்ல பாக்டீரியாக்கள் குறையவும் கிருமிகளைப் பரப்பும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு மருத்துவத்தில் டைஸ்பையாஸிஸ் என்று பெயர். 

எடுத்துக்காட்டாக, நாம் சர்க்கரையை உண்ணும்போது டென்டல் பிளேக் என்னும் பற்குழிகளில் உள்ள சர்க்கரையைத் தின்னும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். இவை சர்க்கரையை ஆர்கானிக் அமிலமாக மாற்றக்கூடிய தன்மை வாய்ந்தவை. விளைவு, இந்த அமிலத்தன்மையைத் தாங்க முடியாமல் சில பாக்டீரியாக்கள் அழிந்து போகும். இதனால் பற்களின் எனாமல் தேய்ந்து போகும். இது தொடர்ந்தால் பற்சிதைவு மற்றும் பல் சொத்தை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். 

காணாமல்போகும் பற்கள் வயதான நோயாளிகளுக்கு அல்சைமர் நோய் அபாயத்தை அதிகரிக்கும். பல் இல்லாது போகும்போது உணவைச் சரியாக மென்று சாப்பிட முடியாததால் முறையற்ற செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும். இது தொடர்ந்தால் மூளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதன் செல்களை இழக்கத் தொடங்கிவிடும். பற்களின் இழப்பினால் அமெரிக்காவில் ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 65 மில்லியன் மக்கள் அறிவாற்றல் குறைபாடு கொண்டவர்களாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பல் இழப்பு கொண்ட பெரியவர்களுக்கு அல்சைமர் அதாவது அறிவாற்றல் குறைபாடு ஏற்படுவதற்கான ஆபத்து 1.48 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அல்சைமர்ஸ் மற்றும் ரிலேட்டட் டிசார்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா 2020 இல் நடத்திய ஆய்வின்படி 60 வயதுக்கு மேற்பட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசமான பல் ஆரோக்கியத்திற்கும் அறிவாற்றல் வீழ்ச்சிக்குமான தொடர்பை ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

பற்களின் சுத்தமும் அவற்றில் உள்ள மைட்ரோபயோடியாவும் மிகவும் முக்கியம். ஆரோக்கியமற்ற உணவு வகைகள், பற்கள் சுத்தமின்மை ஆகியவை மூலம் பாக்டீரியாக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஆகவே தினமும் இரு முறை பற்களைச் சுத்தம் செய்வது, குறிப்பாக, புளூரைடு பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்வது சாலச் சிறந்தது என்கிறது அமெரிக்கன் டெண்டல் அசோசியேஷன். பற்களில் வேறு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகுதல் நலம். ‘பல் போனால் சொல் போச்சு’ என்பதைத்தாண்டி ‘பல் போனால் மூளையும் போச்சு’ என்றாகிவிடும் போல! முதலில் பற்களைக் கவனிப்போம். மூளை இல்லாமல் எப்படி வாழ்வது?

தொடர்புடைய பதிவுகள் :

Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *