ராக்கெட்டில் ஏறிய தக்காளி விலை, காய்கறிகள் விலையனைத்தும் எக்குத்தப்பாக உயர்கிறது – பருவமழை காலங்கடந்து வந்ததே காரணமா?

செய்தி சுருக்கம்:
வழக்கமாக மே மாதத்தில் துவங்கியிருக்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த வருடம் ஜூன் இறுதியில் மெதுவாக ஆரம்பித்து ஒரு ஒழுங்கில்லாமல் பெய்து இந்தியாவின் பல விவசாயம் சார்ந்த மாநிலங்களில் குறைவான மழைபொழிவையே தந்துள்ளது. இதன் காரணமாக இந்த பருவமழையை நம்பி நடவு செய்யப்பட்ட பயிர்கள் போதிய மழை இல்லாமல் மகசூல் பெருமளவு குறைந்துள்ளது, மேலும் பல இடங்களில் நடவு செய்யப்பட இருந்த பயிர்கள் இரண்டு மாதம் கழித்து நடப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் கடந்த ஜூன் ஆரம்பத்தில் இருந்து காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது, இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு மார்கெட்டில் தக்காளியின் ஒரு கிலோ விலை 150 ஆக இருக்கிறது, பலமடங்கு விலை அதிகரித்துள்ள அத்தியாவசிய காய்கறிகள் பொதுமக்களின் தினசரி உணவு தேவைகளை குறைக்க வைத்துள்ளது.
நாடெங்கிலும் பருவமழை பாதிப்பால் தேவையான உற்பத்தியை எட்ட முடியவில்லை, எனவே வரும் அக்டோபர் மாதம் வரை இந்த விலையுயர்வு நீடிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர். அதிகமான விலையுயர்வை சந்தித்து வருகின்ற தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட், இஞ்சி மற்றும் மிளகாய் போன்றவை சில்லறை சந்தையில் பணவீக்கத்தை அதிகரிக்கும் காரணிகளாக உள்ளன. இப்படிப்பட்ட திடீர் விலையேற்றம் இந்திய பொருளாதார சந்தையில் பெரும் மாற்றத்தை விளைவிக்க கூடும், சொல்லப்போனால் ஜூன் மாதம் முதல் உயர்ந்து வருகின்ற காய்கறிகளின் விலைவாசியானது, இந்த ஆண்டு RBI, கடன்களின் மீதான வட்டிவிகிதங்களை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை வெகுவாக பாதிக்கவுள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ஏமாற்றிய பருவமழை:
எப்பொழுதுமே மே மாதத்தில் களைகட்டியிருக்க வேண்டிய குற்றால சீசன் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ஜூன் மாத இறுதியில் ஆரம்பித்து வெகுவாக சோபிக்காமல் மந்தமாக இருந்து வருகிறது. காய்கறிகள் விலை உயர்வு இந்த பருவமழை துவங்கிய பின் போடப்பட்ட விளைச்சல் சந்தைக்கு வரும் வரை நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற இடங்களில் பருவமழையை எதிர்பார்த்து காலம் தாழ்த்தி பயிர்களை நடவு செய்துள்ளனர், மேலும் சில இடங்களில் நடவு செய்திருந்த பல்வேறு பயிர்கள் போதிய மழையின்றி சில பகுதிகளில் அழிந்தது என்றால் அதிகபட்ச மழையாலும் சில இடங்களில் நாசமாகியுள்ளது இந்த ஆண்டு.
சில்லறை வணிக விற்பனை துறையில் Consumer Price Index (CPI) எனப்படும் நுகர்வோர் ஆரம்ப விலை நிர்ணயம் என்பது 2023 ஆரம்பத்தில் 6% ஆக இருந்தது வந்தது தற்போது இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 12 மடங்கு உயர்ந்து 6.5% ஆகியுள்ளது ஏழு மாத உயர்வும் ஒரே மாதத்தில் எட்டப்பட்டு உள்ளது. வருடாவருடம் எடுக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு பார்க்கும் போது வழக்கமாக கோடையின் தாக்கம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பருவமழை விளைச்சல் சந்தைக்கு வந்துவிடும், அதனால் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வந்துவிடும். பருவமழை குளறுபடியால் விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது, இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தான் விளைச்சல்களை எடுக்க முடியும் என்பதால் அக்டோபர் வரை விலைவாசி உயர்ந்துகொண்டு தான் இருக்கும் என்கின்றனர். பெரும்பாலும் நிறைய நாட்கள் இருப்பு வைத்திருக்க முடியாத காய்கறிகளான தக்காளி வெங்காயம் போன்றவற்றின் விலையானது வரலாறு காணாத உயர்வை அடையப்போவதை நாம் வேடிக்கை பார்க்கலாம், இன்னும் இரண்டு மாதங்கள் விலை குறைய வாய்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைவாசி இப்படி எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது நடக்கவுள்ள தேர்தலில் பிரதிபலிக்கும், அதுமட்டுமல்லாது இது சில்லறை வணிக சந்தையில் பெரும் பணவீக்கத்தை உருவாக்கி பொதுமக்களின் வருமானத்தை பதம் பார்த்து பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்திய பொருளாதாரத்திலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. நம் இந்திய ரிசர்வ் வங்கி தொழில் நிறுவனங்களின் கடன் மீதான வட்டிவிகித குறைப்பு அறிவிப்பை வழக்கமாக இந்த காலாண்டு இறுதியில் வெளியிடும், ஆனால் இந்த வருடம் இந்த விலைவாசி உயர்வு காரணமாக நெருக்கடியில் உள்ள RBI டிசம்பர் வரை எதையும் அறிவிக்காமல் மவுனம் காத்து தள்ளிப்போட வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காய்கறிகளின் உற்பத்தி பாதிப்பு மற்றும் விலையேற்றம் என்பது இனி சமையல் உணவுகளிலும் விலையேற்றத்தை கொண்டுவரும், எனவே RBI வட்டி விகிதம் குறைக்கும் முடிவில் பொறுமையாக தான் இருக்கும் என்கின்றனர்.
சிவப்புத்தங்கமான தக்காளி:
காய்கறிகள் எல்லாவற்றிலும் அதிக மவுசு தக்காளிக்கு தான், இது இல்லாமல் சமையலும் ருசிக்காது, ஆனால் தக்களியோ மொத்தவிலை விற்பனை மண்டிகளில் பல மடங்கு விலையுயர்ந்த நிலையில் சில்லறை சந்தையில் கிலோ 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் ஏறிவரும் விலையை பார்த்து தக்காளியை சமையலில் சேர்ப்பதை வெகுவாக குறைதுவிட்டனர் பலர்.
தக்காளி உற்பத்தியில் மூன்றாவது மாநிலமான கர்நாடகா விவசாயிகள் சொல்லும்போது மழைப்பொழிவு குறைந்தது, வெப்பம் அதிகமானது மற்றும் தக்காளி செடியை தாக்கி அழிக்க கூடிய நோய் அதிகமாக பரவியதால் இந்த ஆண்டு எதிர்பார்த்த விளைச்சலை எடுக்க முடியவில்லை என்றும், கடந்த வருடங்களை காட்டிலும் குறைவான நிலத்தில் தான இந்த ஆண்டு தக்காளி பயிரிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். உற்பத்தி குறைவு என்பதால் மட்டுமல்ல பயிரிடப்பட்ட நிலத்தின் அளவும் இந்த ஆண்டு குறைந்துள்ளது, அதனால் தான் விநியோகம் பெருமளவு பாதிக்க பட்டுள்ளது. 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தின் மூலம் வழக்கமாக 80% உற்பத்தியை தரக்கூடிய நிலங்களில் இருந்து 30% உற்பத்தி மட்டுமே இந்த ஆண்டு வந்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, இந்த வருட பருவமழை மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் வழக்கமான மழைப்பொழிவை விட 90% அதிகமாக பெய்துள்ளது, அதேசமயம் கிழக்கு மற்றும் தென் மாநிலங்கள் வழக்கத்தை விட 47% குறைவான மழைப்பொழிவு பெற்றுள்ளது. இந்திய காய்கறி சந்தையின் பெருமளவு வரத்துகள் மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் இருந்து வருபவை, இந்த ஆண்டு பயிர்களை மழை மூழ்கடித்து நாசம் செய்துள்ளது. அந்த பகுதிகளில் பலவாரங்கள் வராமல் ஏமாற்றிய பருவமழை திடீரென ஒருவாரத்தில் ஒரு மாதத்திற்கான மழையை பெய்துள்ளது. டெல்லியில் மட்டும் ஒரே நாளில் 108மிமீ மழை பதிவாகியுள்ளது.
உற்பத்தி பாதிப்புகள், காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றம் இவற்றை கொண்டு பார்க்கும் போது ஜூலை மாத இறுதியில் சில்லறை வணிக பணவீக்கம் இந்த ஆண்டின் அதிகபட்ச உயர்வான 6.5 % ஆக உயர வாய்ப்புள்ளது, இது RBI நிர்ணயித்திருந்த இலக்கான 2% முதல் 6% வரையான பணவீக்கம் என்ற அளவினை தாண்டிவிடும். இதனால் 2024 மே வரை கடன் மீதான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் RBI செய்யாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் பருவமழை ஆரம்பித்தபின் பயிரிடப்பட்ட காய்கறிகள் இன்னும் சில வாரங்களில் சந்தைக்கு வந்துவிடும், அதன்பின்னரே விலை குறைய வாய்ப்புள்ளது, எனவே வரும் அக்டோபர் இறுதி வரை விலை இப்படியே தொடரும் என காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.
பின்னணி:
ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சங்கதிகளை தொடர்பு கொண்டுள்ளது, தற்போது இந்திய சில்லறை வணிகத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் பல்வேறு வகையில் நம் நாட்டு பொருளாதாரத்தில் தலையீட்டை கொண்டுள்ளது, இரண்டு மாதம் தள்ளிப்போன பருவமழையால் சாமான்யன் முதல் ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதாரம் வரை சிக்கலில் மாட்டியுள்ளோம். ஒரு நேர சமையலுக்கு ஆகும் செலவு நம்மை யோசிக்க வைக்கிறது.
சோதனைக்காலமென நினைத்து விரைவில் மீண்டு வருவோம், விளைச்சல் சரியாகி பணவீக்கம் 6% கீழ் குறைந்தால் மட்டுமே RBI தொழில் நிறுவனங்களின் வட்டிவிகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளது, அது வரை விலையுயர்வு தவிர்க்க முடியாததே.
விவசாயிகளும், விற்பனையாளர்களும் காய்கறி ஸ்டாக்கிஸ்ட்களும் தற்போதைய காய்கறிகளின் விலைவாசி வரும் அக்டோபர் வரை குறைய வாய்ப்பில்லை என்கின்றனர், பருமழையை சார்ந்து போடப்பட்டுள்ள பயிர்கள் விளைந்து சந்தையை வந்தடையும் வரை இந்த விலையேற்றத்தை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.