டைட்டானிக் சுற்றுலாவில் சுவடில்லாமல் போன நீர் மூழ்கி கப்பல், தேடுதல் வேட்டை ஆரம்பம்.

செய்திச் சுருக்கம்
டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலா நீர்மூழ்கியின் சமிக்ஞை தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக ஓசன் கேட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அதில் பயணித்த நபர்களை தேடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
அறிவியலும் தொழில்நுட்பமும் உச்சநிலையை அடைந்தாலும் சில விஷயங்கள் இன்றும் மர்மமாகவே உள்ளது, அதில் ஒன்று தான் ஆழ்கடல் என்னும் அதிசயம். டைட்டானிக் என்னும் மாபெரும் கப்பலின் சிதைவடைந்த பகுதியை பார்வையிட சென்ற சிறிய வடிவிலான நீர்மூழ்கிக் கப்பலின் சமிக்ஞை இரண்டு நாட்களாக பெறப்படவில்லை என அந்நிறுவனம் தற்போது தெரிவிதுள்ளது. தொழில்நுட்பக் கோளாரின் காரணமாக இது நடந்திருக்கலாம் என யூகிக்கப் படுகிறது. மேலும் உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐந்து முக்கிய நபர்கள் அதில் பயணித்திருப்பதால் இச்செய்தி உலக அரங்கில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி
அது முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டம். சுமார் நூறு வருடங்களுக்கு முன் ஆர்.எம்.எஸ் டைட்டானிக் என்னும் சொகுசுக் கப்பல் தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து துவங்கியது. அது சென்றடைய வேண்டிய இடம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம். டைட்டானிக், உலகின் தலைசிறந்த கப்பல் எனவும், எத்தகைய இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டாலும் எந்த ஒரு விபத்தும் ஏற்படாத வகையில் டைட்டானிக் வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்தக்கப்பலின் வடிவமைப்புப் பொறியாளர்கள் பெருமை பேசினர். ஏப்ரல் 14, 1912 ல் துவங்கிய பயணம் அடுத்த ஒரே நாளில் ஒரு கோர விபத்தில் சிக்கியது, அட்லாண்டிக் கடலில் உள்ள பனிப்பாறையில் பயங்கரமாக மோதியதில் கப்பலின் அடிபாகத்தில் ஓட்டை விழுந்து தண்ணீர் புகுந்து மெல்ல மெல்ல கடலுக்குள் முழுகியது. இப்பெரும் விபத்து மனிதகுலத்திற்கு ஒரு பாடமாக அமைந்தது இயற்கைக்கு முன் மனிதனின் படைப்பு வெறும் தூசு தான் என மீண்டும் புரியவைத்தது. காலங்கள் சென்றது, பின்னர் வந்த அறிவியல் ஆய்வாளர்கள் கடலுக்குள் இருக்கும் டைட்டானிக்கை சென்று ஆய்வு செய்யவேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால் பல காலம் டைட்டானிக் முழுகிய இடம் ரகசியமகவே இருந்தது வந்தது. அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிய வடிவிலான நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி வந்தனர். 1985ஆம் ஆண்டு கடல்சார் புவியியல் ஆய்வாளரான ராபர்ட் பல்லாரட் பல முயற்சிக்குப் பிறகு டைட்டானிக் இருக்கும் இடம் நோவா ஸ்கோடியாவுக்கு கிழக்கே உள்ள நியூபவுண்ட்லேண்ட் என்று கண்டுபிடித்தார். அப்போது தான் முதன்முறையாக கடலுக்கு அடியில் இருக்கும் டைட்டானிக்கின் புகைப்படம் உலகத்திற்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வசூலை வாரிக்குவித்தது டைட்டானிக் திரைப்படம். மேலும் உலக மக்கள் அனைவருக்கும் டைட்டானிக் கப்பலின் வரலாறை அழகாக மனதில் பதியவைத்தது.
தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனிதன் தன் இயல்புக்கு மீறிய விஷயங்களையும் செய்யத் துவங்கினான். பிரபஞ்சத்தை தாண்டியும், கடலின் ஆழத்தையும் தொட்டுப்பார்த்தான். பின்னர் சில நிறுவனங்கள் அதனை ஒரு சாதாரண சுற்றுலா பயணமாக மாற்றி வருமானம் பார்த்தது. அப்படி ஒரு சேவையை தான், ஓசன் கேட் என்னும் நிறுவனம் செய்துவருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கிவரும் இந்நிறுவனம், சிதைவடைந்த டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்திற்கு பயணிகளை அனுப்பும் வேலையில் ஈடுபடுகிறது. அதற்குகட்டணமாக இரண்டுலட்சத்தி ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்களை வசூலிக்கிறது.
கடந்த ஜூன் 18 ஆம் தேதி அன்று கனடா ஆய்வு கப்பலான போலார் ப்ரின்ஸ் உடன் ஓசன் கேட் நிறுவனத்தின் சிறுரக நீர்மூழ்கியான டைட்டன் பயணித்தது. பயணம் துவங்கிய ஒரு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடத்தில் டைட்டன் மூழ்கி சமிக்ஞையை துண்டித்துக்கொண்டது. அதில் இங்கிலாந்தின் தொழிலாதிபரான ஹாமிஷ் ஹார்டிங்க், பிரெஞ்ச் புத்தாய்வாளரான பால் ஹென்றி, பாகிஸ்தான் தொழிலாதிபரான ஷாஷாடா தாவூத் மற்றும் அவர் மகன் சுலேமான் தாவூத் ஆகியோர் பயணித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்தாவது நபர் யாரென்று இன்னும் தெளிவாகவில்லை எனவும், ஓசன் கேட் நிறுவத்தின் தலைமை அதிகாரியான ஸ்டாக்டோன் ரஷ் ஆக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்து டைட்டன் நீர்மூழ்கி சுமார் பனிரெண்டாயிரத்து அறநூறு அடி ஆழம் பயணித்து டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை அடையும். அங்கு பார்வையாளர்களுக்கு சிதைவடைந்த நிலையில் உள்ள கப்பல் சுற்றிக்காட்டப்படும். மேலும் விஞ்ஞானிகளும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இதில் சில சமயங்களில் பயணிப்பர். உடைந்த டைட்டானிக் கப்பலின் மேல் படர்ந்துள்ள தாவரங்களையும், நுண்ணுயிரிகளின் ஆராய்ச்சி மாதிரிகளையும் எடுத்து வந்து ஆராய்ச்சிகக்குப் பயன்படுத்துவார்கள்.
டைட்டன் நீர்மூழ்கியானது அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணத்திலும் ஐந்து பேர் செல்ல ஏதுவாக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு முதல் பத்து மணிநேரம் வரை கடலுக்குள் மூழ்கி இருக்கும் திறன் படைத்தது. டைட்டன் மூழ்கியில் அதிகபட்சமாக சுமார் தொண்ணூற்றி ஆறு மணிநேரம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கும். அதனால் காணாமல் போன டைட்டனை நான்கு நாட்களுக்குள் கண்டுபிடித்தாக வேண்டும் என்று ஓசன் கேட் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
“டைட்டன் மூழ்கியில் ஒரு கவலைக்கிடமான பிரச்சனை என்னவென்றால், கடலுக்கு கீழே சென்று விட்டு திரும்பும்போது எந்த ஒரு இடையூரிலும் சிக்காமல் மேலே வரவேண்டும். அதற்கு கடலுக்குள் இருக்கும் மீன் வலை, நெகிழி மூட்டை ஆகியவற்றில் சிக்கிக்கொள்ளதாவாறு டைட்டனை இயக்கவேண்டும்” என்று ஓசன் கேட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்டாக்டோன் ரஷ் ஒரு போட்கேஸ்ட் நிகழ்வில் பகிர்ந்துள்ளார். ஒருவேளை இதுதான் விபத்திற்கு காரணமாக இருக்குமோ.