‘த்ரெட்ஸ்’ செயலியின் இலச்சினை தமிழ் எழுத்தான ‘கு’ வடிவில் உள்ளதா?

மெட்டா நிறுவனத்தின் ‘த்ரெட்ஸ்’ என்னும் செயலி இந்த ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. ட்விட்டர் போன்றே ‘டெக்ஸ்ட்’ அதாவது எழுத்து மூலம் கருத்தைப் பகிரும் சமூக வலைத்தளமான இது ‘ட்விட்டர் கில்லர் செயலி’ எனத் தற்போது அழைக்கப்படுகிறது. ஏன் தெரியுமா? டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அவரது கைக்கு ட்விட்டர் வந்த பின்னர் ஊழியர்கள் பணி நீக்கம், ‘ப்ளூ டிக்கிற்கு’ கட்டணம், ‘ட்வீட்களுக்கு’ கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை விதித்தார் மஸ்க். அதிகாரப்பூர்வப் பயனர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளையும், சந்தா செலுத்தாதவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மட்டுமே படிக்க முடியும் என்றும் புதிதாக ட்விட்டர் கணக்கைத் தொடங்கியவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்ற கெடுபிடியும் ட்விட்டர் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதற்குப் பயனர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மிகுந்த அதிருப்தியுடனும் இருந்தார்கள்.
இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் ட்விட்டருக்குப் போட்டியாகக் களத்தில் இறங்கின. ஆனால் எல்லாவற்றையும் முந்திக்கொண்டு மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்னும் செயலியை அறிமுகப்படுத்திவிட்டது. ட்விட்டரில் ஒரு பதிவுக்கு 280 எழுத்துக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் த்ரெட்ஸ்ஸில் 500 எழுத்துக்கள் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தச் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் தொடர்புடன் இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட முதல் 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் அதாவது ஒரு கோடி பயனர்களை உலகம் முழுவதும் இருந்து பெற்றதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். இன்ஸ்டாகிராம் குழுவால் வடிவமைக்கப்பட்ட புகைப்பட மற்றும் வீடியோ பகிர்வுப் பயன்பாட்டில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் நேரடியாக இந்த த்ரெட்ஸில் உள்நுழைய முடியும். ஐந்நூறு எழுத்துக்கள் கொண்ட இடுகைகளைப் பகிர்வது மட்டுமின்றி படங்கள் மற்றும் ஐந்து நிமிட வீடியோக்களையும் கூட இதில் பதிவிடலாம்.
எலான் மஸ்கின் ட்விட்டர் சமூக வலைத்தளம், பயனர்களுக்குப் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வரும் நிலையில் மெட்டா நிறுவனத்தின் இந்தப் புதிய செயலி ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக அமையலாம் எனத் தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையே இந்தப் புதிய செயலியின் இலச்சினை அதாவது லோகோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி அதைக் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு வகையான கருத்துக்களையும் முன் வைப்பதற்கும் இடமளித்துள்ளது.
த்ரெட்ஸின் இலச்சினை தமிழ் எழுத்தான ‘கு’ போன்று இருப்பதாகத் தமிழகத்தைச் சார்ந்த நெட்டிசன்கள் கூற, கேரளத்து நெட்டிசன்களோ மலையாளத்தின் ‘த்ரா’ என்ற உச்சரிப்புடன் வரும் எழுத்தை 90 டிகிரிக்கு திருப்பிப் பார்த்தால் இந்தச் செயலியின் லோகோ போல இருக்கும் என்று புதுவிதமானப் புரளியைக் கிளப்புகிறார்கள். ‘த்ரெ’ என்பது த்ரெட்ஸ் செயலியின் முதல் எழுத்தின் ஆங்கில உச்சரிப்பிலும் ஒலிப்பதால் அவர்கள் இன்னும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி சிலர் நகைச்சுவையாக இந்தச் செயலியின் இலச்சினை இனிப்புப் பதார்த்தமான ‘ஜிலேபி’ போன்று இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் த்ரெட்ஸ் செயலியின் இலச்சினை ‘@’ என்னும் எழுத்துருவைப் போலத் தெரிவதாகக் கூற, சிலருக்கு இது காது போலத் தெரிவதாகக் கூறுகிறார்கள்.
நெட்டிசன்கள் பலரும் இச்செயலியின் இலச்சினை குறித்து பலவிதமாக விவாதித்து வரும் இந்த வேளையில் மெட்டா நிறுவனமோ இது குறித்து எந்தப் பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.
அதே வேளையில் ட்விட்டரின் அறிவுசார் சொத்துக்களைத் திருடி அதன் மூலம் மெட்டா நிறுவனம் இந்தச் செயலியை உருவாக்கி இருப்பதாகவும் இது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவனம் சார்பில் அலெக்ஸ் ஸ்பைரோ என்ற வழக்கறிஞர் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மெட்டா நிறுவனம் ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு அவர்கள் மூலம் ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களைத் திருடியே த்ரெட்ஸ் செயலியை உருவாக்கி இருக்கிறது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக அதன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்களை மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான ஆண்டி ஸ்டோன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத் தலைவரான எலான் மஸ்க், “‘போட்டி என்பது நல்லதுதான். ஆனால் ஏமாற்றுவது சரியில்லை” எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து த்ரெட்ஸ் செயலியை எலான் மஸ்க் தன்னுடைய ட்விட்டருக்கு எதிரான சவாலாகவும் அச்சுறுத்தலாகவுமே பார்க்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.