தூத்துக்குடி – இலங்கை படகு போக்குவரத்து தொடங்குமா?

செய்தி சுருக்கம்:
தூத்துக்குடியிலிருந்து கொழும்பு வரை பயணியர் கப்பலை மீண்டும் இயக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விமான கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் பயணிகள் சுற்றுலா செல்லவும், சரக்குகளை கொண்டு சென்று வர்த்தகத்தில் ஈடுபடவும் கப்பல் பயணம் உதவும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
2011 ஜூன் மாதம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து ஸ்கோட்டியா பிரின்ஸ் என்ற பயணியர் படகு இலங்கைக்கு இயக்கப்பட்டது. அப்போது மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன், 2011 ஜூன் 13ம் தேதி இப்படகு பயணத்தை தொடங்கி வைத்தார். ஸ்கோட்டியா பிரின்ஸ் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டது. மறுமார்க்கமாக கொழும்பிலிருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. பல காரணங்களால் 2011 நவம்பர் 18ம் தேதி அப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதுபோன்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும்படி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பின்னணி:
2011ம் ஆண்டில் ஸ்கோட்டியா பிரின்ஸ் கப்பலில் இலங்கைக்குச் சென்று வருவதற்கு ஐயாயிரம் ரூபாய் கட்டணம் என்றும், அந்தக் காலத்தில் சென்னையிலிருந்து விமானத்தில் கொழும்பு செல்வதற்கு ஒருவழிக்கட்டணம் மாத்திரம் ஆறாயிரம் ரூபாயாக இருந்தது என்றும் அப்போது கப்பலில் பயணித்தவர்கள் கூறுகின்றனர்.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன் துறை துறைமுகத்திற்கு பயணியர் கப்பலை இயக்க ஒரு தனியார் நிறுவனம் முன்வந்தது. அதற்குப் பதிலாக புதுச்சேரியிலிருந்து காங்கேசன் துறைக்கு கப்பலை இயக்க முடிவு செய்யப்பட்டது அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரிவான அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, அனுமதி கிடைத்ததும் போக்குவரத்து ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து காங்கேசன் துறை 250 கி.மீ தூரத்தில் உள்ளது. கப்பலில் செல்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாக பயணிக்கவேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தருணத்தில் தூத்துக்குடி கொழும்பு பயணியர் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவையும் வர்த்தக தொடர்பையும் வலுப்படுத்தும் என்றும் மக்கள் கூறுகின்றனர். முன்பு இயங்கிய ஸ்கோட்டியா பிரின்ஸ் பயணியர் கப்பல் ஒன்பது தளங்களை கொண்டதாக இருந்ததாகவும், அதில் பயணி ஒருவர் நூறு கிலோ எடை கொண்ட சுமையை கொண்டு செல்ல அனுமதி இருந்ததாகவும் கப்பல் முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியிலிருந்து ஆடைகளை கொண்டு செல்லும் வர்த்தகர்கள் இலங்கையிலிருந்து திரும்பும்போது கோப்பு, தேயிலை மற்றும் மசாலா பொருள்களை கொண்டு வந்தனர். மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுமாயின் இதுபோன்ற வியாபார வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடற்பயண பாரம்பரியம்
1914ம் ஆண்டு தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து நடந்தது. 1964ம் ஆண்டு தனுஷ்கோடி புயலில் அழிந்துபோகும்வரைக்கும் அப்போக்குவரத்து நடைபெற்றது. பாம்பன் பாலம் வழியாக தனுஷ்கோடி வரைக்கும் ரயிலில் சென்று, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கப்பலில் சென்று, பின்னர் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை ரயிலில் பயணிக்கவேண்டிய நிலை இருந்தது. புயலில் தனுஷ்கோடி அழிந்ததால் 1965ம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. இக்கப்பலின் பெயர் ராமானுஜம் ஆகும். 400 பயணியர் செல்லக்கூடிய இந்தக் கப்பல் வாரத்திற்கு மூன்று நாள் இராமேஸ்வரத்திலிருந்தும், மூன்று நாள் தலைமன்னாரிலிருந்தும் புறப்பட்டது. இக்கப்பல் போக்குவரத்தானது 1981ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
ஆன்மீக சுற்றுலா
இராமாயணத்தில் சீதையை கவர்ந்து சென்ற இராவணன் இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைத்ததாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அந்த அசோகவனம் தற்போது சீதா எலிய என்று அழைக்கப்படுகிறது. இந்த சீதை அம்மன் கோயில் நுவரெலியாவிலும் இராவணனின் அரண்மனை சிகிரியாவிலும் உள்ளது. நுவரெலியாவில் அமைந்துள்ள சீதை அம்மன் கோயிலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசு சிறப்பு தபால் தலை வெளியிட்டுள்ளது. இவற்றுடன் திரிகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலும் ஆன்மீக சுற்றுலா வருகிறவர்களுக்கு முக்கியமான தலங்களாகும். தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையே பயணியர் படகு போக்குவரத்து ஆரம்பிக்கப்படுமாயின் அது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தூத்துக்குடியிலிருந்து கொழும்பு செல்வோர் அங்கிருந்து இலங்கையை சுற்றிப் பார்க்கவும், இலங்கையிலிருந்து தூத்துக்குடி வந்து சேரும் சுற்றுலா பயணிகள் இங்கே தமிழ்நாட்டு சுற்றுலா தலங்களுக்குச் சென்று வரவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படுமாயின் சுற்றுலா வளர நல்ல வாய்ப்பு உள்ளது.
ஆய்வு பணி
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு இராமேஸ்வரம் – தலைமன்னார், ராமேஸ்வரம் – காங்கேசன்துறை ஆகிய வழித்தடங்களில் தொடங்க திட்ட அறிக்கை ஆயத்தம் செய்யப்படும் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தார். உரிய அனுமதி கிடைத்ததும் இராமேஸ்வரம் துறைமுகத்தில் கப்பல் அணையும் மேடை, பயணியர் தங்குமிடம், சோதனை மையங்கள் அமைக்கும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், நாகப்பட்டினம் உள்ளிட்ட வேறு இடங்களிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்வதற்குப் பதிலாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்து நடைபெற்ற தூத்துக்குடியிலிருந்து கொழும்பு வரையிலான பாதையில் பயணியர் கப்பலை இயக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கை துறைமுகங்கள் கழகத்திலிருந்து அதிகாரிகள் குழு கப்பலில் தூத்துக்குடிக்கு வந்து இங்கிருக்கும் நிலையை ஆய்வு செய்துள்ளனர். பாம்பன் பாலம் அருகே சேது வாய்க்கால் ஆழப்படுத்தும் பணியானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அந்தத் திட்டம் அனுமதிக்கப்படுமாயின் இராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து இலங்கையின் காங்கேசன் துறை மற்றும் யாழ்ப்பாணம் செல்வதற்கான தூரம் மிகவும் குறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
தூத்துக்குடியிலிருந்து கொழும்பு நகருக்கு பயணியர் கப்பல் இயக்குவதற்கு ஒரு கப்பல் குழுமத்தினர் ஆர்வத்துடன் இருப்பதாகவும், தூத்துக்குடி துறைமுகத்தின் அனுமதி கிடைத்தநிலையில் இலங்கை துறைமுக கழக அனுமதிக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் முன்புபோல் ஆயிரம் இருக்கை கொண்ட கப்பலாக அல்லாமல் முந்நூறு இருக்கைகள் கொண்ட பயணியர் படகை இயக்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.