fbpx
LOADING

Type to search

இந்தியா பல்பொருள்

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திருப்பதி பாலாஜி கோயில்கள்! பான்-இந்தியா கடவுளாகும் வெங்கடாஜலபதி!!

செய்தி சுருக்கம்:

உலகின் மிகப் பணக்கார கோவிலான திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரு திருப்பதி கிளையை நிர்மாணிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் நல்ல திருப்பங்கள் அறங்கேறும் என்பது இந்து மக்களின் பெரும்பாலானோரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் விளைவாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தியா மற்றும் உலகமெங்கிலும் இருந்து திருப்பதியை நோக்கிப் படையெடுக்கின்றார்கள். 

பெரியோர் முதல் சிறியோர் வரை திருப்பதி வெங்கடாஜலபதி இஷ்ட தெய்வமாக விளங்கி வருகிறார். தொழிலதிபர்கள் பலபேருக்கு பிஸினஸ் பார்ட்னராக திருப்பதி பாலாஜியை சேர்த்துக் கொண்டு லாபத்தில் அவருக்கும் பங்கு கொடுக்கின்றனர். இப்படி நம்மவர்களின் நம்பிக்கையோடும் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்துவிட்ட திருப்பதி கோயில் குறித்த முக்கியமான செய்தி இது. 

வருடத்திற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்த மக்களுக்கு இனி தங்கள் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அவரை தரிசிக்கும் வாய்ப்பை திருப்பதி தேவஸ்தானம் வழங்கவிருக்கிறது! 

ஆம். உலகின் மிகப் பணக்கார கோவிலான திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரு திருப்பதி கிளையை நிர்மாணிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

பின்னணி:

1933 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையானது (TTD), திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவில், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோவில் மற்றும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி கோவில்களை போன்ற ஒரு சில கோவில்களை மட்டுமே நிர்வகித்து வந்தது.

ஆனால் இன்று திருப்பதி தேவஸ்தானம், இந்தியா முழுவதும் வெங்கடாஜலபதிக்கென்று 58 கோயில்களை நிறுவியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் அமைந்துள்ளன.

ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி தேவஸ்தானம் நிர்மாணித்த முதல் கோயில் ரிஷிகேஷில் உள்ள பாலாஜி கோயில் ஆகும். இது 1969 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 2019 இல் கன்னியாகுமரியில் ஒரு பாலாஜி கோயிலை நிர்மாணித்ததன் மூலம் இந்தியாவின் வட மற்றும் தென் கோடிகளில் திருப்பதி வெங்கடாஜலபதி தனது பாதங்களை ஊன்றினார். கடந்த ஜூன் 8 அன்று ஜம்முவில் ஒரு பாலாஜி கோவில் திறக்கப்பட்டது.

குஜராத்தில் காந்திநகர் , சத்தீஸ்கரில் ராய்பூர் மற்றும் பீகாரில் மேலும் மூன்று கோவில்களை கட்டுவது குறித்து திருப்பதி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது , பீகாரின் நிதிஷ் குமார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. 

தேவஸ்தான அறக்கட்டளை சமீபத்தில் மகாராஷ்டிராவில் திருப்பதி பாலாஜி கோவிலை அடியொத்த கோவில் ஒன்றை அமைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தது, மாநில அரசு நவி மும்பையில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. சுமார்  70 கோடி ரூபாயை திருப்பதி தேவஸ்தானம் கோவில் கட்டுமானத்திற்காக செலவிடும்.

இப்பொழுது திருப்பதியில் இருந்து அருள்பாலிக்கும் ஏழுமலையானின் சர்வ வல்லமையை இந்தியாவின் அனைத்து பக்தர்களின் வீட்டு வாசலுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது அமையும் என்று திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய் வீ சுப்பா ரெட்டி கூறியுள்ளார். மேலும் திருப்பதி தேவஸ்தானம் தென்னிந்தியாவில் உள்ள சிறிய கிராமங்களிலும் சிறிய கோவில்களைக் கட்ட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளாராம். 

எனவே விரைவில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்காரர்களும் அதிக அலைச்சலின்றி தங்கள் சொந்த திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசித்துப் பேறு பெறலாம். 

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *