பாதுகாப்பான காற்று மாசு அளவென்பது ஒரு மாயை! எல்லாமே மூளைக்கு தீங்குதான்!!

செய்திச் சுருக்கம்:
உண்மையில் பாதுகாப்பான காற்று மாசு என்று ஒன்று இல்லை. அனைத்து அளவிலான காற்று மாசுக்களும் வளர்இளம் பிள்ளைகளின் மூளையை பாதிக்கிறது என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகமெங்கும் காற்று மாசு நாளுக்கு நாள் பெருகிவரும் இச்சூழலில் அனைத்து அரசாங்கங்களும், ஆய்வு நிறுவனங்களும் காற்றில் கலந்துள்ள மாசின் அளவை பாதுகாப்பானது என்றும் பாதுகாப்பான நிலையை மீறிய ஆபத்தான அளவு என்றும் வகைப்படுத்தி வந்துள்ளன.
பொதுமக்களும் செய்திகளில் காட்டப்படும் அளவுகளைக் கொண்டு தாங்கள் குடியிருக்கும் நகரம் பாதுகாப்பான அளவின் கீழ்தான் உள்ளது என்ற மாயையில் வாழ்ந்து வருகின்றனர்.
உண்மையில் பாதுகாப்பான காற்று மாசு அளவு என்று ஒன்று இல்லை என்பதே தற்போதைய ஆய்வு முடிவாகும். USC இன் கெக் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், தினசரி காற்று மாசுபாடு இளம் பருவத்தினரின் மூளை வளர்ச்சி முறைகளை மாற்றும் என்று கண்டறிந்துள்ளனர்.
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு காற்று மாசுபாடு பெரும் பங்களிப்பதாக அறியப்படுகிறது. அதனால்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) போன்ற அமைப்புகள் காற்றில் உமிழப்படும் மாசுக்களுக்கு வரம்புகளை நிர்ணயித்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக பாதுகாப்பானது என்று நம்பப்பட்டு வந்த மாசு அளவுகள் கூட மூளை உட்பட பல உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.
இப்போது, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மற்றும் EPA மூலம் நிதியளிக்கப்பட்ட USC இன் கெக் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சி, EPA ஆல் பாதுகாப்பானதாகக் கருதப்படும் சில மாசுகளின் அளவுகள் கூட காலப்போக்கில் மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன என்று கண்டறிந்துள்ளது.
சுற்றுச்சூழல் இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, வளர்இளம்பருவத்தினரின் மூளை அறிவாற்றல் வளர்ச்சி (ஏபிசிடி) ஆய்வில் 9,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து மூளை ஸ்கேன் தரவைப் பயன்படுத்தியது. இது வளர்இளம்பருவத்தினரின் மூளை ஆரோக்கியம் குறித்த மிகப்பெரிய நாடு தழுவிய ஆய்வாகும்.
அதிக காற்று மாசடைந்த சூழலில் இருக்கும் குழந்தைகள் பல்வேறு மூளைப் பகுதிகளுக்கு இடையிலான இணைப்பில் மாற்றங்களைக் கொண்டிருந்தனர். மூளையின் சில பகுதிகளில், அவர்கள் இயல்பை விட அதிகமான இணைப்புகளைக் கொண்டிருந்தனர்; மற்ற பகுதிகளில், அவர்கள் குறைவாக இருந்தனர்.
“மூளை வளர்ச்சியின் இயல்பான பாதையில் இருந்து எந்த திசையிலும் ஒரு விலகல்-மூளை நெட்வொர்க்குகள் அதிகமாக இணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது போதுமான அளவு இணைக்கப்படாவிட்டாலும் – தீங்கிழைக்கும்” என்று டெவின் எல். கோட்டர், MSc (கெக் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் நரம்பியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் முதன்மை ஆய்வாளர்) கூறியுள்ளார்.
மூளையின் ஒவ்வொரு பகுதிகளுக்கிடையேயான நரம்புத் தொடர்பு, நமது வாழ்க்கையின் சூழலை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதையும், நமது சுற்றுப்புறத்தையும் சூழ்நிலையையும் நாம் எப்படி உணர்கிறோம் என்பதையும் தீர்மானிக்கிறது. இது உண்மையில் நமது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லவும் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் நமக்கு அடிப்படையாக் இருக்கிறது.
இத்தகைய முக்கியமான மூளையின் அடிப்படையான கட்டமைப்பானது, குழந்தைகளுக்கு 9 மற்றும் 12 வயதிற்கு இடையில் உருவாகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“அமெரிக்கா முழுவதும் காற்றின் தரம், EPA தரத்தின்படி ‘பாதுகாப்பானது’ என்று அறிவிக்கப்படிருந்தாலும், இந்த காற்றானது மனித மூளையில் உள்ள நரம்புத் தொடர்புகளை வெகுவாக பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இது இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களின் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சிப் பிரச்சனைகளுக்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என்பது உறுதி” என்று மேகன் எம். ஹெர்டிங், PhD, கெக் (ஸ்கூல் ஆஃப் மெடிசினில் மக்கள் தொகை மற்றும் பொது சுகாதார அறிவியலின் இணை பேராசிரியர் மற்றும் ஆய்வின் மூத்த எழுத்தாளர்) கூறியுள்ளார்.
மூளையின் நரம்பியல் இணைப்பில் மாற்றங்கள் என்னென்ன?
காற்று மாசுபாட்டிற்கும் மூளை வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காக, ஹெர்டிங், கோட்டர் மற்றும் அவர்களது சகாக்கள் ABCD ஆய்வில் 9,497 பங்கேற்பாளர்களை உட்படுத்தினார்கள். அவர்கள் அனைவரது MRI ஸ்கேன்களை ஆய்வு செய்தனர். 9 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து அடிப்படை மூளை ஸ்கேன்கள் சேகரிக்கப்பட்டன, அதில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டார்கள்.
இந்த ஸ்கேன் தரவுகள் காலப்போக்கில் மூளை இணைப்புகள் எவ்வாறு உருமாறின என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு தெளிவான ஒரு வரைபடத்தை வழங்குகிறது. குறிப்பாக, உணர்ச்சிவசப்படுதல், கற்றல், நினைவாற்றல் மற்றும் பிற சிக்கலான செயல்பாடுகளில் ஈடுபடும் மூளையின் முக்கிய பகுதிகளான அமிக்டாலா மற்றும் ஹிப்போகாம்பஸ் போன்ற பகுதிகளைப் பற்றி ஆய்வாளர்கள் மேலும் அறிய உதவுகிறது.
அடுத்து, ஒவ்வொரு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் வீட்டிலும் காற்றின் தரத்தை வரைபடமாக்குவதற்கு ஆராய்ச்சியாளர்கள் EPA மற்றும் பிற தரவைப் பயன்படுத்தினர், இதில் நுண்ணிய துகள்கள் (PM2.5), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) மற்றும் தரைமட்ட ஓசோன் (O3) ஆகியவை அடங்கும்.
காலப்போக்கில் மூளை இணைப்பில் ஏற்படும் மாற்றங்களுடன் காற்று மாசு அளவு எவ்வாறு தொடர்புடையது என்பதை ஆராய அவர்கள் மேம்பட்ட புள்ளிவிவரக் கருவிகளைப் பயன்படுத்தினர். ஆய்வாளர்கள் அறிய விரும்பியது இதுதான் : இளம் மூளைகள் அதிக மாசுபாட்டிற்கு ஆட்படும்போது வித்தியாசமாக வளர்கின்றனவா?
PM2.5 எனப்படும் நுண்ணிய துகள்கள்களுக்கு அதிகமாக ஆட்படும் குழந்தைகளின் மூளைகளில் அதன் பகுதிகளுக்குள் அதிக அளவிலான இணைப்புகள் அதிகரித்துள்ளது தெரிகிறது. அதே நேரத்தில் NO2 க்கு அதிக அளவில் ஆட்படுதல், குறைவான இணைப்புகள் உருவாவதைக் காட்டுகிறது. O3 க்கு அதிகமாக ஆட்படுதலானது மூளையின் வெளிப்புற கார்டெக்ஸ் பகுதியில் அதிக இணைப்புகள் உருவாவதையும், ஆனால் கார்டெக்ஸ் மற்றும் அமிக்டாலா மற்றும் ஹிப்போகாம்பஸ் போன்ற பிற பகுதிகளுக்கு இடையே குறைவான இணைப்புகள் உருவாகி இருத்தலையும் காட்டுகிறது.
இந்த ஆய்வில் மூளையின் உருமாற்றத்தை பாதிக்கும் பிற காரணிகளான குளிர்காலம் மற்றும் கோடை மாதங்களில் காற்று மாசுபாடு மாறுபடுவது, பாலினம், இனக்குழு, பெற்றோர் கல்வி நிலை, வீட்டு வருமானம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற இடம் மற்றும் பருவநிலை ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர்.
காற்றின் தர விதிகளை மேலும் கடுமையாக்குவது
இந்த ஆய்வின் முடிவுகள் காற்றின் தரத்திற்கான பரிந்துரைகளை அமைக்கும் போது சுவாச சம்பந்தமான நுரையீரல் பிரச்சனைகளை மட்டும் கவனத்தில் கொள்வதற்கு மேலாக , மூளையின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ள கட்டுப்பாட்டாளர்களை வலியுறுத்தும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் PM2.5 க்கான வழிகாட்டும் தரநிலைகளை EPA முன்மொழிந்தாலும், வருடாந்திர NO2 க்கான வழிகாட்டுதல்கள் 1971 இல் முதன்முதலில் அமைக்கப்பட்டதிலிருந்து இன்று வரை மாறவில்லை.
“சராசரியாக, அமெரிக்காவில் காற்று மாசுபாட்டின் அளவு என்னவோ மிகவும் குறைவாகத்தான் உள்ளது, ஆனாலும் நாங்கள் இன்னும் மூளையில் காற்று மாசால் ஏற்படும் குறிப்பிடத்தக்க விளைவுகளைப் பார்க்கிறோம். இவ்வாய்வு முடிவுகள் சட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்கும் ஆட்சியாளர்களும் ஆய்வு நிறுவனங்களும் தரநிலைகளை உருவாக்கும்போதும் தற்போதைய தரநிலைகளை மேலும் வலுவாக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று ” என்று கோட்டர் கூறினார்.
கோட்டர், ஹெர்டிங் மற்றும் அவர்களது சகாக்கள் இத்தகைய காற்று மாசுபடுத்திகளின் இரசாயன அமைப்புகள் மூளையில் எப்படி, ஏன் தீங்கு விளைவிக்கின்றன என்பதை உற்று நோக்கி கண்டறிய உறுதி பூண்டுள்ளனர், அவர்களது ஆய்வு முடிவுகள் காற்று மாசு குறித்த விதிமுறைகளை மேலும் செம்மைப்படுத்த உதவும். அவர்கள் தொடர்ந்து மூளையின் ஆரோக்கியத்தைப் பகுப்பாய்வு செய்ய ஏபிசிடி ஆய்வின் தரவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
”நீண்ட காலத்திற்கு, இது மனநோயாளியின் ஆபத்தை ஏற்படுத்துமா? இது மக்களின் மன ஆரோக்கியத்தின் பாதையை எவ்வாறு பாதிக்கிறது? என்பதைக் கண்டறியவேண்டும்” என்று ஹெர்டிங் கூறினார்.