fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம்

இந்தியாவின் ‘தார்’ பாலைவனம் ஒரு நூற்றாண்டுக்குள் மறைந்துவிடுமா? திடுக்கிட வைக்கும் ஆய்வு முடிவுகள்

காலநிலை மாற்றத்தால் இந்தியாவின் பெரிய பாலைவனமான ‘தார் பாலைவனம்’ இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலும் மறைந்துவிடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

 உலகின் இருபதாவது பெரிய பாலைவனம் மற்றும் உலகின் ஒன்பதாவது பெரிய வெப்பமண்டலப் பாலைவனமான ‘பெரிய இந்தியப் பாலைவனம்’ என்று அழைக்கப்படும் ‘தார்’ பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாகிஸ்தான் நாட்டிலும் இப்பாலைவனம் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இப்பாலைவனத்தை, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கிறார்கள். இப்பாலைவனத்தின் பெரும்பகுதி அதாவது 61 சதவீதம் ராஜஸ்தானிலேயே உள்ளது. மக்கள்தொகை அதிகம் உள்ள பாலைவனமும் இதுதான்.

பொதுவாகப் புவி வெப்பமடைதலால் பூமியிலுள்ள பாலைவனங்கள் வளரும் என்றே பெரும்பாலான ஆய்வுகள் கணித்துள்ளன. உதாரணமாக, சகாரா பாலைவனம் 2050ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 6000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் வடமேற்கில் அமைந்துள்ள வறண்ட பாலைவனமான ‘தார் பாலைவனம்’ தெற்காசியப் பருவமழையால் முற்றிலும் மறைந்துவிடும் என்னும் ஆய்வு முடிவுகள்  ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. 

இந்த ஆய்வு முடிவுகள் கடந்த 50 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தெற்காசியாவின் வானிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது என எர்த் ஃபியூச்சர் இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மழைப் பொழிவின் மாற்றங்கள், பருவமழையின் கால நீட்டம், கடல் மேற்பரப்பின் வெப்பநிலை ஆகியவற்றை விஞ்ஞானிகள் இதற்காக  ஆய்வு செய்திருக்கிறார்கள். இதில் பருவமழைப் பொழிவு ஏற்கனவே மேற்குநோக்கி நகர்ந்துள்ளது எனவும் மழைப்பொழிவு வடமேற்குப் பகுதிகள் சிலவற்றில் 50 சதவீதம் வரை அதிகரித்து ஈரப்பதமான கிழக்குப் பகுதிகளில் சிலவற்றில் குறைந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அடுத்த நூற்றாண்டில் பருவமழையானது மேற்கு நோக்கி 500 கிலோ மீட்டர் தொலைவில் நகர்வதால் தார் பாலைவனம் வழக்கமான மழை பொழிவை விட இரு மடங்கு அதிகமாகப் பெறும் எனவும் தெரிய வருகிறது. இது குறித்துக் காட்டன் பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர் பூபேந்திரநாத் கோஸ்வாமி கூறுகையில் ‘இந்த கண்டுபிடிப்புகள் எதிர்மறையானவை’ எனக் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக மக்கள் பருவநிலை மாற்றம் ஈரமான பகுதியை மேலும் ஈரமாக்கும் என்றும் வறண்ட பகுதியை மேலும் வறண்டதாக மாற்றும் என்றே நினைப்பார்கள். ஆனால் இந்தியப் பெருங்கடல் சீரற்ற வெப்பத்துடன் இருப்பதால் கிழக்கை விட மேற்குப் பகுதிகள் வேகமாக வெப்பமடைகிறது. இந்த ஏற்றத்தாழ்வானது ஒரு முக்கியமான குறைந்த காற்றழுத்தப் பகுதியை மேற்கு நோக்கி நகர்த்தும். இதன் விளைவாக பருவமழை பொழிவு நிச்சயம் பாதிக்கப்படும். அதாவது தெற்காசியப் பருவமழை நிலத்தைத் தாக்கும் இடத்தில் வெப்ப ஒருங்கிணைப்பு மண்டலம் பாதிக்கப்படும். இதனால் வரவிருக்கும் தசாப்தங்களில் தார் பாலைவனத்தில் பெருமழை வெடிப்பு உண்டாகும். 

இந்த அசாதாரணமான மழைப்பொழிவு இந்த நூற்றாண்டின் இறுதியில் தார் பாலைவனத்தை பசுமையாக மாற்றும். அதேவேளை கனமழை நிகழ்வுகளின் இந்த அதிகரிப்பு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவே ஒரு நாளில் பத்து சென்டிமீட்டருக்கும் அதிகமான தண்ணீரை வெளியேற்றுவது, விவசாய நிலங்களைப் பாதுகாப்பது மற்றும் நகரங்களைச் சீரமைப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டால் இந்த கனமழை அதிகரிப்பு ஒரு மிகப்பெரும் ஆசீர்வாதமாக அமையும் என்கிறார் கோஸ்வாமி. மேலும் கொள்கை வகுப்பாளர்கள் நீரைச் சேமித்து வைக்க குளங்கள் வெட்டும் திட்டங்களையும் வறண்ட நிலத்தில் உற்பத்தியை அதிகரிக்கும் செயல்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் இந்தக் காலநிலை மாற்றம் இந்தியாவின் மறுபக்கத்தில் ஏற்படும் விவசாய இழப்பைத் தடுக்க உதவும் என்கிறார் அவர். மேலும் உலகின் முதல் நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்தை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செழிக்க வைத்ததைப் போல இந்தக் காலநிலையும் செழிக்க வைக்கலாம் என்கிறார் கோஸ்வாமி. 

அதேவேளை உட்டா மாநிலப் பல்கலைக்கழகக் காலநிலை விஞ்ஞானி ஷிஹ்-யு வாங் என்ன கூறுகின்றார் தெரியுமா? இந்தக் கனமழை நிகழ்வுகளுடன் அதனால் ஏற்படும் அபாயங்களையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்கிறார். பாகிஸ்தானில் அண்மையில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பேரழிவை அவர் சுட்டிக்காட்டுகிறார். அங்குள்ள மக்கள் சுமார் ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர் வறுமையில் தள்ளப்பட்ட பயங்கரத்தை நினைவு கூர்கிறார். 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைச் சேதப்படுத்திதையும் அவர் இங்கே குறிப்பிடுகிறார். 

உலகமே வெப்பமான எதிர்காலத்தை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிலவும் இந்தக் குறுகிய காலநிலை மாற்ற மண்டலங்களை இன்னும் தீவிரமாக ஆராய வேண்டியதன் அவசியத்தை இந்தப் புதிய ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சில விஞ்ஞானிகளுக்கு இந்தக் காலநிலை மாற்றம் பருவநிலையில் ஏற்படும் மற்ற பெரிய அளவிலான மாற்றங்களை விட முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் இந்த மாற்றம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மிகப் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று கூறும்  ஷிஹ்-யு வாங் போலவே ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோக்ராபியின் காலநிலை விஞ்ஞானி ஷாஸ்-பிஸ்-ஷூ என்பவர், “இந்த ஆய்வு முடிவு கிரேட் இந்தியப் பாலைவனத்தில் நிகழ இருக்கும் வெள்ள அபாய முன்னறிவிப்பு. இந்தக் காலநிலை மாற்றம் சுமார் ஒரு பில்லியன் மக்களைப் பாதிக்கப்போகிறது” என்று எச்சரிப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய பதிவுகள் :

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளிப்பது எப்படி - மனுக்களின் மீதான நடவடிக்கை எவ்வாறு இருக்க...
ஜனநாயக ஆட்சியும் செங்கோல்களின் வரலாறும்!
எல்லோரையும் அனுமதிக்க முடியாது! பிரிக்ஸ் (BRICS) நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராகும் விதிகளை கடுமைய...
விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்...
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
இந்தியாவின் உள்நாட்டில் தயாராகும் நீண்டதூர நிலப்பரப்பு ஏவுகணை! 400 கி.மீ தூரத்தில் விமானங்கள் மற்றும...
ஆளில்லா 'ட்ரோன்' விமானங்கள், அமெரிக்கா இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏன்?
சாதி மத பாகுபாட்டால் நரகங்களாக மாறிக்கிடக்கும் இந்திய நகரங்கள்! பாகுபாடு மிகுந்து, காலச்சக்கரத்தில் ...
இந்தியாவில் தங்க நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு! சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு ...
இந்தோனேசியா மற்றும் இலங்கையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களை திருப்பி தர முடிவு செய்திருக்...
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *