மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கும் ஏற்றுமதிக்கும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்க விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் டெஸ்லா நிர்வாகிகள் இந்தியாவுக்கு வருகை தந்து இந்தியாவில் கார்கள் மற்றும் பேட்டரிகள் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவுதல் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்தியாவில் கணிசமான முதலீட்டை செய்ய விரும்புவதாகக் கூறினார். இதையடுத்து புதுதில்லியில் உள்ள அரசு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இந்த மாதம் மீண்டும் தொடங்கப் போவதாகவும் அதன் ஒரு பகுதியாக டெஸ்லா பிரதிநிதிகள் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் கோயல் மற்றும் எலான் மஸ்க் இடையே நடந்த மெய்நிகர் சந்திப்பைத் தொடர்ந்து இது நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜூலை 13ஆம் தேதியன்று டெஸ்லா தனது வாகன உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கிலியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து ஊக்கத் தொகைகள் மற்றும் வரிச் சலுகைகளைப் பற்றி மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதித்தது. ஆனால் குறைந்த வரிகளுக்கான டெஸ்லாவின் கோரிக்கைகள் உள்நாட்டு உற்பத்தியின் முதலீடுகளை பாதிக்கும் என்ற காரணத்தினால் மத்திய அரசு அதை ஏற்கவில்லை. அதற்கு மாற்றாக மின்சார கார்களை வேகமாக வளர்ந்து வரும் இந்தியச் சந்தையில் தயாரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் டெஸ்லா தனது தற்போதைய மாடல்கள் அனைத்தையும் அதிக தள்ளுபடியில் விற்பனை செய்தது. மேலும் அதன் நீண்ட கால வெற்றி மின்சார வாகனங்களின் விலையைக் கடுமையாகக் குறைக்கும் எனவும் அவற்றின் உற்பத்திச் செலவை 50 சதவீதம் குறைக்கும் எனவும் ‘ரோபோ டாக்ஸி’ போன்ற பல மாடல்களை உருவாக்க உதவும் எனவும் அது தெரிவித்தது.
டெஸ்லா தற்போது கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸில் மின்சார கார்களை உற்பத்தி செய்கிறது. வட அமெரிக்காவிற்கு வெளியே பெர்லின் மற்றும் ஷாங்காயில் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஷாங்காயில் உள்ள ஆலை மிகப்பெரியது. இது வாகன உற்பத்தியாளரின் உலகளாவிய திறனில் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் அதன் இரண்டாவது காலாண்டில் 2.7 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். இந்தியா மற்றும் பல்வேறு தெற்காசிய நாடுகளில் டெஸ்லா, கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசியாவில் உற்பத்தி செய்ய அந்த நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் சீனாவின் உற்பத்திப் பெருக்கத்தை அதிகரிக்க அவர் விரும்பவில்லை எனவும் தெரிகிறது. ஏனெனில் சீனாவின் மின்சார வாகனங்களின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 30% ஆக இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான உற்பத்தியில் சில தளர்வுகளை அது வலியுறுத்துகிறது. இந்திய அரசும் இந்தியாவில் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டதோடு அதற்கான ஆதரவையும் வழங்குகிறது. அதேவேளை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சீனாவில் காரைத் தயாரித்து இந்தியாவில் விற்க வேண்டாம் என்று டெஸ்லா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது மேலும் இந்தியாவில் உற்பத்தித் தொழிற்சாலை ஏற்படுத்தி இங்கேயே தயாரித்து விற்கவும் ஏற்றுமதி செய்யவும் அனைத்து உதவிகளையும் ஆதரவையும் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
இந்தியாவில் டெஸ்லாவின் 24 ஆயிரம் டாலர் மதிப்பிலான மின்சார கார் அதன் தற்போதைய மாடல்3 செடானைவிட 25 சதவீதம் மலிவாக இருக்கும். இதே கார் சீனாவில் 32 ஆயிரத்து இருநூறு டாலருக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனம் முழுமையாக அசம்பிள் செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 40% இறக்குமதி வரியை மட்டுமே எதிர்பார்க்கிறது. இந்தியாவில் தற்போது 40 ஆயிரம் டாலருக்குக் குறைவான கார்களுக்கு 60 சதவீதமும் அதற்குமேல் விலையுள்ள கார்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரியும் விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதுகுறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், “உலகிலேயே எந்தப் பெரிய நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிக அதிகம்”, எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது இந்தக் கருத்தை அப்போது இந்திய அரசு நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்கள் மூலம் இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.
தற்போது உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவில் மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்கள் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இந்திய அரசு பல சலுகைகளை அறிவித்த பின்பும் மின்சார வாகனச் சந்தை இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. ஆனால் 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து புதிய வாகன விற்பனையில் குறைந்தது 65 சதவீதமாவது மின்சார வாகனமாக இருக்க வேண்டும் என்னும் இலக்கை கொண்டிருக்கிறது இந்திய அரசு.
உலகின் மிகப்பெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் வாகனச் சந்தை உலகின் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்ற நிலையில் டெஸ்லாவின் இந்த மின்சார வாகனத் தொழிற்சாலை ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என அழைக்கப்படும் சென்னையில் தொடங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.