மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் – இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியிடம் கோரிக்கை!

செய்தி சுருக்கம்:
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்துமாறு இலங்கையின் தமிழ் சிவில் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மோடிக்கு நன்றி!
இந்த வாரம் இலங்கை ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ளார். அதை முன்னிட்டு, திங்களன்று (ஜூலை 17) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தில், இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி சமயத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கைக்கு “மகத்தான ஆதரவை” வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் உள்கட்டமைப்பு மற்றும் பிற இணைப்புத் திட்டங்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். யாழ்ப்பாணம்-கொழும்பு ரயில் நெட்வொர்க், வட இலங்கையில் உள்ள பலாலி மற்றும் சென்னை இடையேயான விமானங்கள் மற்றும் தமிழ்நாடு-யாழ்ப்பாண படகு சேவை ஆகியவை இதில் அடங்கும்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், “எமது மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை” என கடிதத்தை வழங்கியவர்கள் மற்றும் கையொப்பமிட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“இந்த திட்டங்கள் மற்றும் பல உத்தேசித்துள்ள முதலீட்டு திட்டங்கள் தமிழ் மாகாணங்களின் தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்தை மீளுருவாக்கம் செய்வதற்கும் மிகவும் அவசியமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நிச்சயமாக உதவும்” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பிராந்தியத்தின் நிலை!
இலங்கையின் வடகிழக்கு பகுதி எப்போதும் தரமான கல்விக்குப் பெயர்போனது. இப்பிராந்தியம் தான் வழங்கும் கல்வியைப் பற்றியே எப்போது பெருமை பேசிவந்த பகுதியாகும். இன்று அதன் அப்பெருமை பெரும் வீழ்ச்சியடைந்து உள்ளது.
இதுமட்டுமின்றி பல்வேறு காரணங்களைக் காட்டி தமிழ் மாகாணங்களில் விளை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக விவசாய உற்பத்தியானது படு பாதாளத்திற்குச் சென்று விட்டது.
இதற்கான தீர்வாக இவர்கள் முன்வைப்பது என்ன?
அனைத்துத் துறைகளையும் திறம்படத் திட்டமிடவும் நிர்வகிக்கவும் மாகாண மட்டத்தில் அணுகக்கூடிய தமிழ் நிர்வாகத்தின் தேவை இருப்பதாக பெரும்பான்மையான மக்களும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பல முன்னணி உறுப்பினர்களும் கருதுகின்றனர்.
தற்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட மாகாண அரசாங்கம் இருப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.
13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும், தமிழ் மாகாணங்களில் – செயல்படும் – மாகாண சபைகளை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவுருத்தி வருகிறது. அதை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும்.
அந்த நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்கூட்டியே மாகாண சபைத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு மோடி வலியுறுத்த வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள்
யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு ஆயர் ஜோசப் ரஸ்ஸியா, யாழ் விகாராதிபதி பீ.ஜே.ஜெபரத்தினம், யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கே.பிரேமகுமார், யாழ்.பல்கலைக்கழகத்தின் கோசாலை மாத்தன், திருகோணமலை மூலோபாய கற்கை மையத்தின் ஏ ஜதீந்திரன், யாழ் வர்த்தக சங்கத் தலைவர் ஆர் ஜெயசேகரம் மற்றும் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் தலைவர் எஸ் லலீசன்ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
பெரும்பான்மையான மக்களுக்கு மாகாண மட்டத்தில் ஒரு தமிழ் நிர்வாகம் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது என்று இக்கடிதம் வலியுறுத்துகிறது. மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இயக்குவதற்கு ஒரு உள்ளூராட்சி நிர்வாகத்தின் அவசியத்தை இக்கடிதம் குறிப்பிடுகிறது.
பாரதப் பிரதமரின் தலையீட்டால் நன்மை விளைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.