fbpx
LOADING

Type to search

சிறப்புக் கட்டுரைகள் பல்பொருள் மொழி

தமிழிணையம்: தமிழக அரசின் ஆன்லைன் நூலகம் பொதுமக்களையும், மாணவர்களையும் சென்றடைய தடுமாறுகிறதா?

செய்தி சுருக்கம்:

தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு மதுரையில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என்ற பிரம்மாண்ட ஆறடுக்கு நூலக கட்டிடத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு என திறந்து வைத்துள்ளது.

மதுரைக்கு ஒரு புதிய அடையாளம்:

சென்ற வாரத்தில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பலத்த எதிர்பார்ப்புகள் மற்றும் உற்சாகத்திற்கு மத்தியில் தமிழக அரசு திறந்து வைத்தது.

ஆறு தளங்களை கொண்டு பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள இந்த நூலகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த 4 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பிடித்துள்ளன. கோவில் நகரமான மதுரையில் மற்றுமொரு கல்வி கோவிலுக்கான அடையாளமாய் இந்த நூலகம் விளங்கவுள்ளது. மக்களுக்கு உபயோகமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகின்ற பட்டதாரிகளுக்கும், ஆராய்ச்சி கட்டுரை எழுதுவோருக்கும் இந்த நூலகம் மிகுந்த பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், காரைக்குடி, மானாமதுரை போன்ற பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் இந்த நூலகத்தால் பயனடைவர்.

ஆனாலும் தற்போது உள்ள இளைய தலைமுறையினர் ஆன்லைனில் அதிகமாக படிக்கின்ற வழக்கத்தை கொண்டுள்ளனர், எனவே வளர்ந்து வரும் இளம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்ற “Tamil Digital Library” யால் ஸ்கேனிங் செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களின் தொகுப்பை கொண்ட தமிழிணையம் வலைத்தளத்தினை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டியது அவசியம் ஆகிறது, அதற்கான விளம்பர யுக்திகளை தற்கால கலாச்சாரப்படி சமூக வலைதளங்களில் ஈவெண்ட்கள் நடத்துவதன் மூலம் கொண்டு செல்ல யோசிக்க வேண்டும்.

தமிழிணையம் டிஜிட்டல் நூலகம் தற்போது அரிதான பழைய ஓலைச்சுவடிகளையும், பழைய புத்தகங்களையும் பாதுகாக்கும் வகையில் அமிலத்தன்மையை நீக்கி பதப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது, மேலும் அவர்கள் ஜப்பானியர்களின் டிஸ்யூ பேப்பர் முறையை பின்பற்றியும் பதப்படுத்தலை மேற்கொள்கின்றனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

தமிழகத்தில் இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டில் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்னும் உலகத்தரம் வாய்ந்த நூலக கட்டிடம் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் சுமார் 172 கோடி திட்ட மதிப்பீட்டில் எட்டடுக்குமாடி தளங்களை கொண்டுள்ள மிகப்பிரம்மாண்டமான நூலகமாகும். இதில் மொத்தம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக தொகுப்புகளை வைத்துள்ளனர், இந்த நூலகம் ஆசியாவிலேயே உள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.

இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் பொது நூலகங்களை வைத்திருக்கும் மாநிலங்களில் நம் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது, மொத்தம் 4634 அரசு பொது நூலகங்கள் இங்கு பயன்பாட்டில் உள்ளன. இரண்டாவது இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது, அங்கு மொத்தம் 6797 அரசு நூலகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பொது நூலகங்களை கொண்ட முதல் மாநிலமாக கேரளா விளங்குகிறது, கேரளாவில் மொத்தமாக 8415 போது நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கணக்கெடுப்பு 2019 ஆம் ஆண்டில் நியூ டெல்லியிலுள்ள கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கி வருகின்ற ராஜா ராம்மோகன் ராய் நூலக மேலாண்மை அமைப்பினால் எடுக்கப்பட்டது.

வருங்கால இளையதலைமுறை: 

ஆனாலும் நம் தமிழ்நாடு அரசு இதுபோன்ற நூலக கட்டிடங்கள் திறப்பதும் சரி, புத்தகங்களை பரிசளிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பதும் சரி, மேலும் 38 மாவட்டங்களிலும் அரசே முன்னின்று புத்தக கண்காட்சிகள் நடத்துவதாக மற்ற மாநிலங்கள் முன் பெருமை பட்டாலும் சரி, இவற்றினால் யாதொரு பெரும் பயனும் தற்போதைய இளையதலைமுறை மாணவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்ற உண்மையை அரசு உணர வேண்டும். தற்கால கல்வி முறைகள் அனைத்துமே ஆன்லைன் எனப்படும் அப்ளிக்கேஷன், வலைதளம் போன்ற வடிவங்களில் தான் பெரும்பாலும் உள்ளன, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், அதற்கான தரவுகளையும், தகவல்களையும் இணையம் வழியாகவே தேடிப்படிக்க பழகிவிட்டனர். அவர்கள் ஒரு அச்சடிக்கப்பட்ட புத்தகத்தை கையில் ஏந்திப்பிடித்து படிப்பது அரிதான செயலாகி விட்டது, விரைவில் இந்த பழக்கம் வழக்கொழிந்து போய் விடும் விஷயமாக மாறியுள்ளது என்பதை அரசு மறந்துவிட்டதா? தற்போதைய இளம் தலைமுறையின் ஆன்லைன் கல்வி முறை பழக்கம் என்பது கால மாற்றத்தின் கட்டாயம். எனவே அரசு இந்த கருத்துக்களை மனதில் கொண்டு அதற்கேற்ற வகையில் ஆன்லைன் நூலகத்தை விரிவு படுத்த வேண்டும்.

தமிழக அரசின் மெத்தனப்போக்கு அதனுடைய ஒரேயொரு ஆன்லைன் நூலக தளமான Tamil Digital Library ஐ எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதை பார்த்தாலே புரிந்துவிடும், இந்த ஆன்லைன் நூலகத்தில் இருந்த மின் புத்தகமாக மாற்றி பதிவேற்றப்பட்ட, 20000க்கும் மேற்பட்ட மிகவும் அரிதான புத்தகங்களின் தொகுப்பை தற்போது துவங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு வழங்கியுள்ளது, அங்கு மிகவும் பழமையான ஓலைச்சுவடிகளையும், அரிதான புத்தகங்களையும் சேதமடையாமல் காக்கும் வகையில் அமிலத்தன்மையை நீக்கி பதப்படுத்தும் வழிமுறைகளையும், ஜப்பானியர்களின் தொழில்நுட்பமான டிஸ்யூ பேப்பர் முறையில் சேகரித்து வைக்கும் வசதியை கொண்டும் அவை பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன.

ஆன்லைன் நூலக திட்டம்:

தமிழக அரசின் Tamil Virtual Academy என்ற ஆன்லைன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இந்த தமிழ் டிஜிட்டல் நூலகம் உள்ளது, இது 2001 இல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் Tamil Virtual University என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை பெயர் மாற்றம் மட்டும் கண்டு, பெரிதாக யாதொரு வளர்ச்சியும் அடையாமல் இயங்கி வருகின்றது.

அச்சுத் துறையின் மீதான ஆர்வத்தில் அதன் மீது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டிருக்கும் A.விவேகானந்தன் என்பவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் “நம் மாநில அரசாங்கம் இந்த ஆன்லைன் நூலகத்தை இன்னும் அதிகமாக விளம்பரப்படுத்த வேண்டும், அதன் மூலம் மட்டுமே அதிகமான பயனாளர்களை கவர முடியும். என்னைப்போன்ற தன்னார்வ ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆன்லைன் நூலகமானது மிக முக்கியமான வரப்பிரசாதம் ஆகும், இங்கு நமது உபயோகத்திற்கு எண்ணற்ற நூல்கள் பதிவேற்றப்பட்டு நமக்காக காத்து கொண்டுள்ளன. இந்த ஆன்லைன் நூலகத்தை அணுகும் வாய்ப்பு மட்டும் எனக்கு கிடைத்திருக்கா விட்டால், என்னால் “Bharathi as a Translator” என்கிற பாரதியாரின் சகோதரர் C.விஸ்வநாதன் எழுதிய புத்தகத்தையோ அல்லது “Grammatic Damulica” என்கிற இலத்தீன் மொழியில் இயற்றப்பட்ட தமிழ் இலக்கண ஆராய்ச்சி நூலையோ படித்திருக்க முடியாது. லத்தீன் மொழியில் இயற்றப்பட்ட தமிழ் இலக்கண நூலானது முதன் முதலில் பைபிளை தமிழில் மொழிபெயர்த்து தந்த Bartholomaus Ziegenbalg என்பவரால் இயற்றப்பட்டதாகும்.

புத்தகங்களின் புதையல்:

2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாளில் “Tamil Virtual University” என்கிற பெயரில் துவங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்காக தமிழ் வழியிலான கல்வியை ஆன்லைனில் வழங்குவதும், தமிழ் கணிப்பொறி நிரலாக்க மொழியை உருவாக்கும் முயற்சியை ஊக்குவித்தல் போன்றவை இருக்கின்றன. தற்போது இந்த பல்கலைக்கழகம் ஆன்லைனில் சான்றிதழ் படிப்பகளும், டிப்ளமா படிப்புகளும் மற்றும் பட்டபடிப்புகளும் வழங்கி வருகின்றது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்த பல்கலைக்கழகம் 2010 ஆம் ஆண்டு “Tamil Virtual Academy” பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

2001, மே மாதம் நிகழ்ந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக இந்த ஆன்லைன் நூலகத் திட்டம் செயல்பாடுகள் ஏதுமின்றி முடங்கியது. 2002 இல் ஆன்லைன் தரவுகளாக அனைத்து அரசு பதிப்பக புத்தகங்களையும் பிரதி எடுத்து பதிவேற்றி விடலாம் என்ற அகாடமியின் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது, அந்த சமயத்தில் கூட இதன் பெயரில் மாற்றம் செய்தார்களே தவிர வேறெந்த முன்னெடுப்புகளும் அரசால் எடுக்கப்படவில்லை. 

2015 ஆம் ஆண்டில் அகாடமியின் இயக்குனராக இருந்த T. உதய சந்திரன் என்பவரின் சீரிய முயற்சியால் இந்த ஆன்லைன் நூலக பணிகள் மும்முரப்படுத்தப்பட்டன, உதயசந்திரன் தற்போது அகாடமியின் Chair Person ஆக உள்ளார். 2015 இல் மின் புத்தக தொகுப்பை உருவாக்க தஞ்சாவூர் சரஸ்வதி நூலகம், சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகம், அரசு கையெழுத்து பிரதிகள் காப்பகம், Dr. உ. வே. சாமிநாத ஐயர் நூலகம், அரசு ஆவணக்காப்பகம், அகழ்வாராய்ச்சித்துறை மற்றும் MGR அரசு திரை மற்றும் தொலைக்காட்சி பயிலகம் போன்ற இடங்களிலிருந்து புத்தகங்களை முதல்கட்டமாக பிரதி எடுக்கும் பணியை துவங்கியது. எதிர்பாராத விதமாக சென்னையில் 2015 இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இந்த பணி இன்னும் துரிதமானது. அரசாங்கத்திற்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பல அரிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த பழமையான புத்தகங்களுக்கு இந்த பெருவெள்ளம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட அதீத வெள்ளப்பெருக்கு சம்பவம் நம்மிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் ஓலைச்சுவடிகளையும் வெகுவிரைவில் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இருந்தது.

2015 க்கு பின்னர் நான்கு ஆண்டு காலத்தில் மட்டும் 30000 புத்தகங்களின் 53 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒவ்வொரு பக்கங்களையும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் நூலகத்தை ஆரம்பிக்க தேவையான ஸ்கேனிங், புத்தகங்களை சேகரித்தல் போன்ற வேலைகளில் ஓரளவு வெற்றி கண்டபின் மின்மயமாக்கப் பட்ட அனைத்து மின் புத்தகங்களையும் (e-book) உலக தமிழர்கள் அனைவரும் பார்வையிடும் வகையில் தமிழக அரசால் ஒரு தனித்த இணையதள முகவரி ஆன்லைன் நூலகத்திற்கென உருவாக்கப்பட்டது.

“தமிழிணையம் டிஜிட்டல் நூலகம்” என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதன் url முகவரி www.tamildigitallibrary.in ஆகும். 

துவங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை இந்த வலைத்தளத்திற்கு 5 கோடிக்கு மேலான பார்வையிடல்களும், 21 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தக பதிவிறக்கங்களும் நிகழ்ந்துள்ளன என்று தமிழ் விர்சுவல் அகாடமியின் தற்போதைய இயக்குனர் SR. காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பின்னணி:

இன்றைய நிலவரப்படி இந்த ஆன்லைன் நூலகத்தின் Database எனப்படும் சேமிப்புக் கிடங்கில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிதான புத்தகங்கள், 3300 தேசிய மயமாக்கப்பட்ட புத்தகங்கள், தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 1200 புத்தகங்கள் உள்ளன. மேலும், 16000 திற்கும் மேலான சங்ககால நூல்கள் மற்றும் கிட்டத்தட்ட 4000 வகையான அரசாங்க தரவுகள் ஆகியவை உள்ளிடப்பட்டுள்ளன. நம் தாய் தமிழ்நாட்டில் உவே சாமிநாத ஐயர் மற்றும் பலரது முயற்சிகளால் தொகுக்கப்பட்ட பணையோலையில் எழுதப்பட்ட நூல்களும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை கூறும் நூல்கள் அனைத்துமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் நூலகத்தினை எந்நாளும், எந்நேரமும் எந்த தேசத்தை சேர்ந்தவரும் எளிதாக அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

படிப்பறிவு மட்டுமே சிறந்த குடியாட்சியை தீர்மானிக்கும்:

தற்போது வரையில் மொத்தமாக 86000 மின் புத்தகங்கள் இந்த ஆன்லைன் தளத்தில் நம் பயன்பாட்டிற்காக உள்ளன, இன்னும் ஒரு சில மாதங்களில் மேலும் ஒரு லட்சம் புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும் என்று இந்த இணையதளத்தின் நிர்வாகி “சித்தனை” என்பவர் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்த தகவலின்படி, “இந்த ஆன்லைன் நூலகமானது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும். இலக்கியம், மதம், வரலாறு, உடல்நலம், மனநலம், அறிவியல் மற்றும் கலாச்சாரத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் இதில் சேகரித்து வைத்துள்ளோம்” என்று கூறினார். அவர் கூறியுள்ள கருத்துகள் படி நம் தமிழ் மொழியின் சங்ககால இலக்கிய நூல்களையும், சிறுவர் கதைகளையும், தமிழ் கலைக் களஞ்சியங்ககளான இயல், இசை மற்றும் நாடக தமிழ் வளர்ந்த விதங்களையும், தமிழ் மொழியின் ஆதி அகராதிகளையும் உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாக இது விளங்கி வருகின்றது.

அரசு இதன் விளம்பரங்களில் கவனம் செலுத்தி இன்னும் அதிகமான பயனாளர்களை கவர முடிவு செய்யவேண்டும் என்பதே அனைவரது விருப்பங்களும். இதை படிக்கும் நீங்களும் சந்தர்ப்பம் வாய்த்தால் இந்த ஆன்லைன் நூலகத்தின் இணையதள முகவரிக்கு ” www.tamildigitallibrary.in ” ஒரு முறை விசிட் அடித்து பார்க்கவும், தாங்கள் வசிக்கும் பகுதி மாணவர்களுக்கு இதைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பதிவை குழுக்களில் பகிரவும். நன்றி.

தொடர்புடைய பதிவுகள் :

Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *