அரசுப் பள்ளிகளில் தமிழ்க் கொடை திட்டம்: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

செய்திச் சுருக்கம்:
ஆங்கிலத்தின் மீதும் ஆங்கிலப் பள்ளிகள் மீதும் மோகம் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்ற வகையிலும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து தமிழகத்தில் உள்ள 6218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்க் கொடை என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று மகாகவி பாரதியும் “தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்று பாவேந்தர் பாரதிதாசனும் தமிழை உயிராகவும் அமிழ்தாகவும் பாடியதை இன்றைய மாணவர்கள் அறிந்திருக்கிறார்களா அல்லது உணர்ந்திருக்கிறார்களா என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறிதான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழர்களின் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த, ஈடு இணையில்லாத செம்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை அறியாது செல்லும் இளம் தலைமுறையினரின் பாதையை எண்ணும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.
உலகில் உள்ள ஆறாயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளில் பழைமை வாய்ந்த மொழியாக, பண்பட்ட மொழியாக, இலக்கண இலக்கிய வளம் மிகுந்த மொழியாக, நாகரிகத்தை வளர்த்த மொழியாக, தாய்மைத் தன்மை கொண்ட மொழியாக, உயர்தனிச் செம்மொழியாக, இன்று வரை பேச்சு வழக்கில் இருக்கும் மொழியாகத் திகழும் தமிழ்மொழியைக் கற்பதற்கு இன்றைய மாணவர்களிடம் தயக்கம் ஏற்பட்டிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. தமிழின் பெருமை சரியாக அவர்களிடத்தில் உணர்த்தப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தாய்மொழிக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கக் காரணம்தான் என்ன? தாய்மொழியாம் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களும், தமிழில் பேசினால் அவமானம் என நினைக்கும் மாணவர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் என்று நினைத்துப்பாருங்கள்! வெளிநாடுகளில், குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழியிலேயே அனைத்துக் கல்வியையும் பெறுகிறார்கள். ஆனால் நாம் மட்டுமே நம் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வெட்கப்பட்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் சொக்கிக் கிடக்கிறோம். தாய்மொழியில் பெருமை கொள்ளாத சமுதாயம் நம் கண்முன்னே உருவாவதைக்கண்டு உண்மையில் நெஞ்சு கொதிக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் இந்த முயற்சி நிச்சயமாக மாணவர்கள் மத்தியில் தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் தமிழ்மொழி தொடர்பான துறைகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி:
தமிழ்மொழியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு 5.6 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் தலா ஒன்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 2023-2024 ஆம் கல்வியாண்டில் தமிழ்க் கொடை செயல்பாடுகள் மூன்று முறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை நடத்துவதற்கு ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒரு முதுகலை ஆசிரியரைப் பொறுப்பாளராக நியமிப்பதற்கு அந்தந்த மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தவறாமல் நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொறுப்பினை முதன்மைக் கல்வி அலுவலர்களே ஏற்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வழக்கமான பணிகளுடன் இந்தத் தமிழ்க் கொடை செயல்பாடுகளை நிகழ்த்துவதற்கான நேரத்தை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குத் தமிழ்மொழி தொடர்பான வினாடிவினா, பேச்சு, கட்டுரை, நாடகம், கவிதை, கதைசொல்லல், நடனம், பொம்மலாட்டம், ஓவியம், இசை போன்ற பல திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்று கூறப்படுகின்றது. இங்ஙனம் மாணவர்களின் தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டம் மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் ஆசிரியர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சிறந்த கல்வி என்பது ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது அல்ல. வாழ்க்கைக் கல்வியுடன் தாய்மொழிக் கல்வியையும் போதிப்பதுமாகும். இதனை உணர்த்தும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்புகள் மிகவும் பாராட்டத்தக்கவை என்றாலும் தனியார் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் மொழியின் மீதான பற்றை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. இத்தகைய செயல்பாடுகள் மாணவர்கள் தமிழின் பெருமையை அறியவும் தமிழை ஆழமாகக் கற்றுக் கொள்ளவும் வகுப்பறைக்கு வெளியே தங்களது அன்றாட நிகழ்வுகளில் அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தலைமுறை தாண்டி தமிழ்மொழி வாழ்வதற்கு அரசும் மக்களும் இணைந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தவேண்டும்.