குட்டித் தூக்கம் உடலுக்கும் மூளைக்கும் நல்லதென்று தெரியுமா உங்களுக்கு?

பூனைத் தூக்கம், கோழித் தூக்கம், கண்ணயர்தல், மதியத் தூக்கம், பகல் நேரத் தூக்கம், குட்டித்தூக்கம் என்று பலவாறு கூறப்படும் சில மணித்துளித் தூக்கத்தை ‘பவர் நாப்’(Power Nap) என்று சொல்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் குட்டித் தூக்கமானது வயதானாலும் நமது மூளையைப் புத்துணர்வோடும் ஆரோக்கியத்தோடும் வைத்திருக்க உதவுவதோடு மட்டுமின்றி உடல் சோர்வையும் நீக்கும் என்கிறார்கள் லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரி மற்றும் உருகுவே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். “நேரத்தைத் தூங்கிக் கெடுப்பது நல்லதா?” என்று நீங்கள் கேட்கலாம். ‘இது கும்பகர்ணத் தூக்கமல்ல, குட்டித் தூக்கம். இது தூங்கிக் கெடுப்பது அல்ல, தூங்கிக் காப்பது’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வாருங்கள் என்னதான் விஷயம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
“உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு” என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. சாப்பிட்ட பின் வரும் தூக்கமானது மிக அலாதியானது. ஆனால் எல்லோருக்கும் அந்நேரத்தில் தூங்குவதற்கான வரம் கிடைப்பதில்லை. பொதுவாகப் பதினைந்து நிமிடங்கள் முதல் முப்பது நிமிடங்கள் வரை தூங்குவதைத்தான் குட்டித்தூக்கம் என்று சொல்கின்றார்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்தக் குட்டித் தூக்கத்திற்குப் பெயர் போனவர் உலகையே நடுங்க வைத்த பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் போனபர்ட். நீண்ட நேரம் தூங்கிப் பழக்கமில்லாத அவர், போரின் போது கிடைக்கும் இடைவெளியில் குதிரையில் அமர்ந்தபடியே கூட தூங்குவாராம். வின்ஸ்டன் சர்ச்சில், ஐன்ஸ்டீன், மார்கரெட் தாட்சர் என குட்டித்தூக்கப் பிரபலங்கள் ஏராளம். இவர்கள் எல்லோரும் சாதித்ததற்கு குட்டித் தூக்கமும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ, என்னமோ?
குட்டித் தூக்கம் போடுதல் ஒரு காலத்தில் உலக மக்கள் மத்தியில் ஏன் நம் தமிழகத்திலும் ஒரு வழக்கமாகவே இருந்திருக்கிறது. எப்போது தொழில்நுட்பமும் நகர்ப்புறமாதலும் அசுர வளர்ச்சி பெற்றதோ அதன்பின் இந்த குட்டித்தூக்கத்தின் அவசியத்தை உலகம் சிறிது சிறிதாக மறந்தே போனது. ஆனால் சமீபகால ஆராய்ச்சிகள் இதன் முக்கியத்துவத்தை மீண்டும் உலகிற்கு எடுத்தியம்ப ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகள் குட்டித் தூக்கத்தின் அவசியத்தை உணர ஆரம்பித்திருக்கின்றன.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையானது இந்த மதியவேளை குட்டித்தூக்கம் மாரடைப்பைக் குறைக்கிறது என்று கூறுகிறது. ஸ்லீப் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், 2006 -2010ம் ஆண்டிற்கு இடையிலான காலகட்டத்தில் ‘மெண்டலியன் ராண்டமைசேஷன்’ என்ற உத்தியைப் பயன்படுத்தி இங்கிலாந்தைச் சேர்ந்த நாற்பதிலிருந்து அறுபத்தொன்பது வயதுக்குட்பட்ட முப்பத்தையாயிரத்து எண்பது பேரிடம் டிஎன்ஏ சோதனை மற்றும் மூளையை ஸ்கேன் செய்தபோது, பிற்பகல் வேளையில் ஐந்து முதல் பதினைந்து நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் குட்டித்தூக்கம் மிகுந்த பயனளிக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மேலும் முப்பது சதவீதத்திற்கும் மேலாக உழைப்புத் திறனும் நூறு சதவீத விழிப்புணர்ச்சியும் குட்டித் தூக்கத்தால் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
குட்டித்தூக்கம் தகவலை உள்வாங்கவும், சேமிக்கவும், தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தவும் உதவுகிறது என்கிறார் ரெஸ்டாக் என்னும் ஆராய்ச்சியாளர். அவர் நடத்திய ஆய்வில் குட்டித்தூக்கம் எடுத்துக்கொண்ட மாணவர்கள் நன்றாகக் கற்றுக் கொண்டதைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்.
குட்டித் தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல நாடுகள் ‘உலக சியஸ்டா தினம்’ அதாவது உலக குட்டித்தூக்க தினத்தைக் கொண்டாடுகின்றன. சியஸ்டா என்னும் ஸ்பானிய வார்த்தைக்கு ‘குட்டித்தூக்கம்’ அல்லது ஆறாவது மணி என்று அர்த்தம். பொழுது விடிந்து ஆறு மணி நேரம் கழித்து மதிய உணவு உண்ட பின் தூக்கம் வரும் என்பதைக் குறிப்பதாக அவ்வார்த்தை அமைந்திருக்கிறது. இவற்றை எல்லாம் உணர்ந்த சில பன்னாட்டு நிறுவனங்கள் ‘பவர் நாப்’ முறையைத் தற்போது செயல்படுத்த ஆரம்பித்திருக்கின்றன.
நம் நாட்டில் இதெல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் என்றுதானே கேட்கிறீர்கள்? நடக்கலாம். அரை மணி நேரத்துக்குள்ளான குட்டித்தூக்கம் நிச்சயம் மூளையையும் உடலையும் புத்துணர்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒன்று. இதையே பகல் முழுக்க செய்து கொண்டிருப்பது உடலுக்கு நல்லதல்ல என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்களே!
இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டபோது அடிக்கடி குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு அதிக உடல் எடை, உறுப்புகளின் செயல்திறன் பாதிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நீண்ட நேரம் தூங்குவது வயதானவர்களுக்கு டிமென்ஷியாவின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவற்றின்படி தினமும் இரவில் குறைவான மணிநேரம் தூங்குபவரை விட பகலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தூங்கும் வயதானவர்களுக்கு அல்சைமர் வருவதற்கான வாய்ப்பு நாற்பது சதவீதம் அதிகம் என்பதும் அறியப்படுகிறது. மேலும் இரவுத் தூக்கத்தைக் கெடுக்காத மதியத் தூக்கமே உடலுக்கு நல்லது என்றும் இரவுத் தூக்கத்தைப் பகல் தூக்கம் ஈடு செய்யாது என்றும் ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன. எனவே இரவில் தூங்காமல் பகலில் தூங்கிக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம். ஏழு மணி நேர இரவுத் தூக்கம் மிக மிக அவசியம்.
ஆக, பூனையைப் போல் தூங்குவீர்களோ, கோழியைப் போல் தூங்குவீர்களோ, பகலில் அரை மணி நேரம் தூங்கி எழுந்திருங்கள். குட்டித் தூக்கம் பெரிய தூக்கமாக மாறிவிடக்கூடாது என்பதில் மட்டும் கவனம் தேவை.