fbpx
LOADING

Type to search

உடல் நலம்

சூப்பர் ஏஜர்கள்: முதுமையிலும் அவர்கள் மூளை ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

பல பத்தாண்டுகள் தன்னை விட இளையவரான ஒருவருக்கு இருக்கக்கூடிய நினைவாற்றல் கொண்ட 80 வயதுக்கு மேற்பட்ட ‘சூப்பர் ஏஜர்கள்’ (super agers), அதாவது திறன்மிகு வயதானோர், பலரை இக்காலத்தில் காணமுடிகிறது. நினைவாற்றல் திறன் பொதுவாக வயதுக்கேற்பக் குறையும். வயதானோரின் அறிவாற்றல் குறைவை நன்கு புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் சூப்பர் ஏஜர்களின் மூளைகளையும் நடத்தைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானி எமிலி ரோகல்ஸ்கி, மாற்றமேயில்லாத தினசரி பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்காமல் இருப்பது மூளையின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்கிறார்.

தம்மை விட 20 முதல் 30 வயது குறைவானவர்களைப் போல் கூர்மையான மூளையைக் கொண்ட ‘சூப்பர் ஏஜர்’களின் ரகசியங்களைப் பற்றி சிறிதுசிறிதாக அறிந்துவருகிறோம். கூர்மையான மூளையைக் கொண்ட 85 வயதான அறிவாற்றல் மிக்க “சூப்பர் ஏஜர்” கரோல் சீக்லர் புகழ்பெற்றவர். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக சூப்பர் ஏஜிங் ஆராய்ச்சித் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு குழுவில் அவர் உள்ளார். இத்திட்டம் 14 ஆண்டுகளாக உயர்ந்த நினைவாற்றலுடன் கூடிய வயதானவர்களை ஆய்வு செய்து வருகிறது.

இந்தத்திட்டம் சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஃபீன்பெர்க் மருத்துவக் கல்லூரியில் (Northwestern University Feinberg School of Medicine) உள்ள அறிவாற்றல் நரம்பியல் (cognitive neurology) மற்றும் நினைவாற்றலிழப்பு நோய்க்கான (Alzheimer’s Disease) மெசுலம் மையத்தின் (Mesulam Center) திட்டம். சூப்பர் ஏஜர்கள் என்று அழைக்கப்படும் ஆறு பேர் உட்பட 24 முதியோர் இறந்தபின் அவர்கள் மூளைகள் பிரேதப் பரிசோதனையில் ஆராயப்பட்டன. சூப்பர் ஏஜர்களின் மூளை அவர்களை விட கிட்டத்தட்ட 60 வயது குறைவானவர்களின் மூளையில் இருந்ததை விட பெரிய நியூரான்களைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூப்பர் ஏஜர்கள் கொண்டிருக்கும் அருமையான நினைவுத்திறனுக்கும் பெரிய நியூரான்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் புரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சூப்பர் ஏஜர் என்று அழைக்கப்படும் ஒருவர், குறைந்தபட்சம் எண்பது வயதுடையவர்; குறைந்தபட்சம் முப்பது வயதுக்குக் குறைவான ஒருவரின் நினைவாற்றல் திறனைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். சூப்பர் ஏஜர்கள் அவர்களின் வயதினருக்கான “பொதுவான” நினைவாற்றல் திறன் வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள். சூப்பர் ஏஜர்களின் மூளை வேறுபாடுகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு நபர் ஏன் சூப்பர் ஏஜர் ஆகிறார் அல்லது ஆகவில்லை என்பதற்கான உயிரியல் கூறுகள் இருக்கலாம். வாழ்முறைப் பழக்கவழக்கங்கள் ஒரு நபர் சூப்பர் ஏஜராக மாறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம்.

நமக்குப் பழக்கமானவற்றை விட்டு வெளியேறுவது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் இளமையாக இருப்பதற்கு முக்கியமானது என்பதை ஆராய்ச்சிகள் பல காட்டுகின்றன. சூப்பர் ஏஜர்கள் இசைக்கருவியை வாசிப்பது, புதிய மொழியைப் பேசுவது போன்ற ஏதேனும் ஒரு புதிய திறமையில் தேர்ச்சி பெறுவதற்கும் அசௌகரியங்களைத் தாங்குவதற்கும் இயல்பாகவே விரும்பலாம். புதிய விஷயங்களில் நிபுணத்துவம் பெற சூப்பர் ஏஜர்களது வயது தடையாக இருப்பதில்லை. தங்களுக்குப் பழக்கமான செயல்பாடுகளில் இருந்து விலகி அவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.

மனதைக் கூர்மையாக வைத்திருப்பதையும், தினசரி ஒரே சலிப்பளிக்கும் வழக்கத்தைப் பின்பற்றாமல் இருப்பதையும் அவர்களுடைய பொதுவான குணங்களாகக் காணமுடிகிறது. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் அவர்கள் “தங்களுக்கு விருப்பமானதைச்” செய்கின்றனர்.

அறிவியல் கண்ணோட்டத்தின்படி, ஒருவர் சூப்பர் ஏஜரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பல காரணிகள் உள்ளன. எண்பது வயதுக்கு மேற்பட்ட சூப்பர் ஏஜர்களைப் பொறுத்தவரை பின்வரும் விஷயங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன: அவர்களின் மூளையின் உருவரைவு (imaging), அவர்களின் மூளை அவர்களை விட இருபது முதல் முப்பது வயது குறைவாக இருக்கும் நபர்களுடைய மூளையைப் போல இருப்பதைக் காட்டுகிறது. அவர்களின் மூளை, புறணி (cortex) சுருங்குவதை எதிர்க்கிறது; அதாவது அவர்களின் மூளை, அவர்களது வயதையொத்தவர்களுக்கு பொதுவாக மூளை சுருங்கும்—திசுநலிவு (atrophy) என்று அழைக்கப்படும்—வழிகளில் சுருங்குவதில்லை. அவர்களின் மூளையில் வான் எகோனோமோ நியூரான்கள் எனப்படும் நூலுருளை நரம்புகள் அதிக அளவில் உள்ளன. அவர்களின் மூளையில் உள்ள இழைகள் நினைவாற்றலிழப்பு நோய் உருவாகும்படி சிக்கலாவதில்லை.

சூப்பர் ஏஜர் பங்கேற்பாளர்கள் இறந்த பிறகு ஆராய்ச்சித் திட்டத்திற்கு அளிக்கப்படும் சூப்பர் ஏஜர் மூளைகளின் புறணி, அறிவாற்றல்ரீதியாக சராசரியாக உள்ளவர்கள், ஆரம்பகட்ட நினைவாற்றலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சூப்பர் ஏஜர்களை விட 20 முதல் 30 வயது குறைந்த நபர்கள் ஆகியவர்களின் புறணியுடன் ஒப்பிடும்போது, கணிசமாகப் பெரியதான, ஆரோக்கியமான செல்களை கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சூப்பர் ஏஜர்கள் மற்றவர்களுடன் வலுவான சமூக உறவுகளைக் கொள்ள முனைகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் மூளையின் ஆழத்திலுள்ள கவனப்பகுதியின் அளவு சூப்பர் ஏஜர்களின் மூளைகளில் பெரிதாக இருப்பதே. இதுவே சூப்பர் ஏஜர்களது அதிகமான சமூகச் செயல்பாடுகளுக்கும் விழிப்புணர்வுக்கும் காரணமாகக் கருதப்படுகிறது.

சூப்பர் ஏஜர்ஸ் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறார்கள். வயதாகும்போது சுறுசுறுப்பாக இருப்பது என்பது மிக நல்ல ஒன்றாகும். உடல் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இருப்பதால் ஆக்ஸிஜன் கொள்திறன் அதிகரிக்கிறது. இது நம் உடல்நலத்திற்கு உகந்தது. உடற்பயிற்சி இதயநலத்திற்கு உதவுகிறது. தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் வயதானோர் கீழே விழும் அபாயத்தைக் குறைக்கின்றன.

திறன்மிகு வயதானோராவதற்கு (சூப்பர் ஏஜிங்கிற்கான) முதல் விதி, தொடர்ந்து ஒருவரது மூளை இழக்கும் நரம்புப் பாதைகளையும் இணைப்புகளையும் ஈடுசெய்யும் வகையில் புதிய நரம்புப் பாதைகளையும் இணைப்புகளையும் எப்போதும் உருவாக்குவது. சூப்பர் ஏஜிங்கிற்கான இரண்டாவது விதி, மூளை எப்போதும் சவால்களை விரும்பி ஏற்பது. இவ்விதிகளுக்கு ஏற்ப சூப்பர் ஏஜர்கள் எப்போதுமே புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைபவர்களாகவும் அசௌகரியங்களைப் பற்றிக் கவலைப்படாதவர்களாகவும் இருப்பவர்கள் என்பதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

சூப்பர் ஏஜர்கள் முதுமை பற்றிய நுண்ணறிவையும் ஆலோசனைகளையும் வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். நாம் அவர்களிடமிருந்து ஆரோக்கியமான வாழ்க்கை, செய்யக்கூடிய உடற்பயிற்சிகள், மூளையைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் அறிவாற்றல் செயல்பாடுகள் ஆகியவை பற்றிய விஷயங்களைக் கற்க முடியும். கூடுதலாக, சமூக நடவடிக்கைகளில் எவ்வாறு ஆர்வத்துடனும் தீவிரமாகவும் ஈடுபட வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக நாம் சூப்பர் ஏஜர்களை ஏற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய பதிவுகள் :

சிறுநீர்பாதைத் தொற்று பற்றி நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள்! தெரிவோம்… தெளிவோம்!!
திகட்ட திகட்ட பாலியல் இன்பம் பெற உதவும் ஹிப்னாசிஸ்
குறைவான உடலுறவுக்கும் டிமென்ஷியாவிற்கும் தொடர்பு உள்ளதா? புதிய ஆய்வில் தகவல்.
மனித உடலில் மெல்லக் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்! உங்கள் மூளைக்குள்ளும் செல்லும் பிளாஸ்டிக் க...
குழந்தைகளுக்குத் தலைவலியா? கண்ணில் பிரச்னை இருக்கலாம்!
தினசரி இந்த மூன்று உடற்பயிற்சிகளை பின்பற்றினால் போதும் - படுக்கையில் ஆண்கள் எளிதில் சாதிக்கலாம். உறு...
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
 உடலில் மென்மையான தசைநார்களை பெருக்கிக் கொள்வது அல்சைமர் நோயிலிருந்து நம்மை காக்கும்!-  ஆய்வு முடிவு...
அமில ரிப்ளக்ஸ் மருந்துகளைப் பயன்படுத்தினால் டிமென்ஷியா அதிகரிக்கலாம்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள...
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை எங்கே கொண்டு செல்கின்றன?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *