சூரியனின் வெளிப்புற வெப்பத்தின் இரகசியம் வெளிப்பட்டது!

செய்தி சுருக்கம்:
சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் கொரோனா என்று அழைக்கப்படுகிறது. இதன் வெப்பநிலை சூரியனின் மேற்புற பரப்பைக் காட்டிலும் மிகவும் அதிகமாக இருப்பதன் காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் ஆகும். பாரன்ஹீட்டில் 10 ஆயிரம் டிகிரி ஆகும். ஆனால் அதன் வெளிப்புற வளிமண்டலமானது 10 லட்சம் டிகிரி செல்சியஸ், அதாவது 18 லட்சம் பாரன்ஹீட் வெப்பநிலை கொண்டிருக்கிறது. வெப்ப ஆதாரத்தைக் காட்டிலும் தொலைவில் இருக்கும் வெளிப்புற வளிமண்டலத்தின் வெப்பநிலை சூரியனைக் காட்டிலும் குறைவாகவே இருக்கவேண்டும். ஆனால், அது வெப்ப ஆதாரமான சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையைக் காட்டிலும் மிகவும் அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மிகவும் முயற்சித்து வந்தார்கள். தற்போது அந்த இரகசியம் வெளிப்பட்டுள்ளது.
பின்னணி:
சூரிய குடும்பத்தின் மையமாக விளங்குவது சூரியனே. இது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் நிரம்பிய வெப்பமும் பிரகாசமும் கொண்ட நட்சத்திரமாகும். சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள். இது பூமியிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. 13 லட்சம் பூமி உருண்டைகளின் மொத்த கனஅளவை சூரியன் கொண்டுள்ளது. சூரியன்தான் அக்குடும்பத்திலிருக்கும் ஒரே ஒரு நட்சத்திரமாகும். சூரிய குடும்பத்திலிருக்கும் பெரிய கோள் வியாழன். சூரியன், வியாழனை விட மூன்று மடங்கு அகன்றது; பூமியைக் காட்டிலும் 100 மடங்கு அகலம் கொண்டது.
சூரியன், பூமியைப் போன்று திடமான மேற்பரப்பு கொண்டதல்ல. பூமியிலிருந்து நாம் காணும் சூரியனின் பகுதி போட்டோஸ்பியர் ஆகும். சூரியனை சுற்றி வாயு மண்டலம் உள்ளது. சூரியனின் ஈர்ப்பு சக்தியால் அதனை கிரகங்கள் சுற்றி வருகின்றன.
சூரியனுக்கு துணை கோளான நிலவு கிடையாது. ஆனால் 8 கிரகங்களும் 5 குள்ள கிரகங்களும், பல்லாயிரம் எரிகற்களும், கோடிக்கணக்கான வால் நட்சத்திரங்களும் உள்ளன.
சூரியன் மேற்பரப்பின் வெப்பநிலையைக் காட்டிலும் அதன் வெளிப்புற காற்றுமண்டலத்தின் வெப்பநிலை ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் கடந்த 80 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள்.
விண்கலங்களும் ஆராய்ச்சியும்
சூரியனை ஆராய்வதற்காக 1970ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஜெர்மனி, அமெரிக்கா கூட்டாக ஹீலியோஸ் 1 மற்றும் 2 ஆகிய விண்கலங்களை அனுப்பின. இந்த இரண்டும் சூரியனின் காந்த மண்டலத்தை பதிவு செய்தன. 1990 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட யூலிசஸ் என்ற விண்கலமும் இதை பதிவு செய்தது. ஆனால், ஹீலியோஸே யூலிசஸை விட சூரியனுக்கு அண்மையில் சென்ற விண்கலங்களாகும். யூலிசஸ், பெரும்பாலும் பூமியின் சுற்றுப் பாதையையும் தாண்டியே சூரியனை ஆய்வு செய்தது.
பார்க்கர், சோலார் பிரோப், சோஹோ, ஏஸ், ஐரிஸ், விண்ட், ஹினோடு, சோலார் டைனமிக்ஸ் ஆப்சர்வேட்டரி, ஸ்டீரியோ போன்ற விண்கலங்கள் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளன.
2018ம் ஆண்டு நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனின் காந்த புலத்தைக் குறித்து இன்னும் அதிகமாய் ஆராய்ச்சி செய்தது.
சோலார் ஆர்பிட்டர்
சூரியனை ஆராய்வதற்காக ஐரோப்பா, சோலார் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது 2020 பிப்ரவரி மாதம் பாதையில் நிறுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் புறஊதா கதிர்களை பயன்படுத்தி படமெடுக்கக்கூடிய எக்ஸ்ட்ரீன் அல்ட்ராவயலட் இமேஜர் என்னும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
பூமியில் இருக்கும் வானியல் தொலைநோக்கிகளும் உயர் அடர்த்தி கொண்ட படங்களை எடுக்கமுடியும் என்றாலும், சூரியன் வெளியிடும் தீவிர புறஊதா கதிர்களின் அலைவீச்சு பூமியின் வளிமண்டலத்தால் வடிகட்டப்படுவதால் அப்படங்களைக் கொண்டு சூரியனின் புறஊதா கதிர்களை ஆய்வு செய்ய இயலவில்லை.
சூரிய குடும்பத்தின் முதல் கோளான புதன் தன் சுற்றுப் பாதையில் சூரியனுக்கு மிக அருகே 4 கோடியே 70 லட்சம் கி.மீ. தொலைவு வரைதான் செல்லக்கூடும். ஆனால் சோலார் ஆர்பிட்டர் விண்கலம் அதைவிட நெருக்கமாக, அதாவது சூரியனுக்கு அருகே 4 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடியது.
சோலார் ஆர்பிட்டர் நிலைநிறுத்தப்படும்போது 1720 கி.கி. நிறை கொண்டதாக இருந்தது. இதில் 10 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய நடுக்கோட்டிற்கு மேலாக 33 டிகிரி கோணத்தில் இது நிறுத்தப்பட்டுள்ளது.
சூரியன் அதிக ஆற்றலுள்ள புற ஊதா கதிர்களை வெளியிடுவதால் அவற்றை கண்டுபிடிக்கக்கூடிய காமிராவுடன் இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. சோலார் ஆர்பிட்டர் முதன்முதலாக 2020 ஜூன் மாதம் சூரியனின் படத்தை அனுப்பியது. 2022 மார்ச் மாதம் 25ம் தேதி, சோலார் ஆர்பிட்டர், புதன் கிரகத்தைக் காட்டிலும் சூரியனுக்கு அருகே சென்றது. கடந்த ஆண்டு (2022)அக்டோபர் மாதம் வீடியோ பதிவு செய்துள்ளது.
வெப்பத்தின் இரகசியம்
சோலார் ஆர்பிட்டர் விண்கலம் அனுப்பியுள்ள படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், சூரியனின் மேற்பரப்பில் வேகமாக பயணிக்கும் காந்த அலைகள் சுழல்வதையும், அந்த அலைகள் மிக அதிக ஆற்றலை உற்பத்தி செய்வதாகவும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவின் அதிக வெப்பநிலைக்கான காரணம் வெளிப்பட்டுள்ளது.
சூரியனில் மெதுவாக அசையும் காந்த அலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் முன்பே அறிந்திருந்தனர். ஆனால், அந்த வேகம் கொண்ட காந்த அலைகளால் அதிகமான வெப்பத்தை உருவாக்க இயலாது. தற்போது சோலார் ஆர்பிட்டர் அனுப்பியுள்ள படங்கள், வீடியோக்களினால் சூரியனின் மேற்பரப்பில் வெகுவேகம் கொண்ட காந்த அலைகள் சுழல்வது தெரியவந்துள்ளது. அவ்வளவு வேகம் கொண்ட காந்த அலைகள் உருவாக்கும் வெப்பமே சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் அதிக வெப்பமாக இருக்கக் காரணம் என்ற இரகசியம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.