வயதுக்கேற்ப மாறும் தற்கொலைக்கான காரணங்கள்! காலம் மாறுகையில் காரணங்களும் மாறுகின்றன!! – ஆய்வு சொல்வதென்ன?

தற்கொலை என்பது உண்மையில் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒன்று! தற்கொலை முடிவுகள் அவர்களை மட்டுமல்ல, அவர்களைச் சுற்றி இருக்கும் அனைவரையும் பாதிக்கும் இவ்வுலகில் மனித இனத்தைத் தவிர வேறு எந்த உயிரினமும் தற்கொலை செய்வதாக அறியப்படவில்லை. ஆய்வாளர்களுக்கும் மனிதர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்து குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.
உலகில் தினமும் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதாவது ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் சராசரியாக இறக்கின்றனர். தினமும் ஆறு லட்சம் பேர் தற்கொலைக்கு முயல்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே தற்கொலை என்பது உண்மையில் ஒரு பெரிய சமூகப் பிரச்சனைதான். மனிதர்கள் தற்கொலை முடிவை நோக்கிச் செல்வதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டியது சமூக ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும்.
தற்கொலை குறித்த புதிய ஆய்வு
ஜர்னல் ஆஃப் அஃபெக்டிவ் டிசார்டர்ஸில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, தற்கொலை செய்துகொள்ளக்கூடிய நபர்களின் வயதைப் பொறுத்தே தற்கொலைக்கான காரணங்கள் அமைகின்றன என்று நிறுவியுள்ளது.
பொதுவாக மனச்சோர்வு உடைய மனிதர்கள் தற்கொலை முடிவை நோக்கிச் செல்கின்றார்கள் என்பது பொதுவான ஒரு அறிதல். இதிலும், ஒன்றில் சிக்கிக்கொண்ட உணர்வு மற்றும் சமூகத்துடனான பிரச்சனையை தீர்க்க முடியாத தன்மை போன்றவை பெரிதும் தற்கொலைக்குத் தூண்டுவதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
அதிலும் இந்த ஒன்றில் மாட்டிக்கொண்ட உணர்வு இளம் வயதினருக்கும் சமூகத்துடனான முரண்பாட்டு உணர்வு சற்றே வயது முதிர்ந்தவர்களுக்கும் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
ஒன்றில் மாட்டிக்கொண்ட உணர்வு (Feeling of Entrapment)
தவறான உறவுகளில் சிக்கிக்கொள்ளுதல், தங்களால் சகித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் வாழ நிர்பந்திக்கப்படுதல் போன்றவை நம்பிக்கையின்மை மற்றும் உதவிக்கு யாருமில்லை என்ற உணர்வை ஒருவருக்கு ஏற்படுத்துகிறது.
இனி நம்மைக் காப்பாற்றுவார் யாருமில்லை. நமக்கும் இந்த சூழலில் இருந்து வெளியேற வழிதெரியவில்லை என்ற எண்னம் ஒருவரை தற்கொலையை நோக்கி நகர்த்துகிறது.
சமூக சிக்கல்களைத் தீர்க்கும் திறனற்றுப் போதல் ( Poor Soscial Problem-Solving Skills)
தங்களைச் சுற்றியிருக்கும் சமூக பிரச்சனைகளை அடையாளம் காணவும் அதற்கான தீர்வுகளை செயல்படுத்தவும் இயலாத தன்மை ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுகிறதாம்.
ஒரு கடினமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் ஒருவர் தனக்கிருக்கும் தொடர்புகள் மற்றும் நண்பர்கள் மூலம் அந்த சூழலை எதிர்கொள்ளவும், தீர்க்கவும் முயல்வார். எந்த தொடர்பும் இல்லாதவர்கள் அல்லது பலவீனமான தொடர்புகளைக் கொண்டவர்கள் நம்பிக்கை இழந்து தற்கொலை முடிவை எடுக்கிறார்.
முந்தைய ஆய்வுகள் தெரிவிப்பதென்ன?
இதற்கு முன்பு நடத்தபெற்ற ஆராய்ச்சிகள், சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் தற்கொலை நடத்தை ஆகியவற்றுக்கு இடையேயான உறவை ஆய்வு செய்துள்ளது, ஆனால் இந்த காரணிகள் ஒருவரது வயதைச் சார்ந்த வாழ்வை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றி அதிகம் ஆராயவில்லை.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனச்சோர்வு காரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்ற பொதுவான கருத்தை மட்டுமே முந்தைய ஆய்வுகள் வெளிக்கொணர்ந்தன.
இந்த புதிய ஆய்வு செய்யப்பட்டது எப்படி?
மனநல மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளி, மனநல கிளினிக்குகளுக்கு வரும் வெளி நோயாளிகள் இந்த ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மேலும், விளம்பரங்கள் மூலமாகவும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது.
இவ்வாறாக மன அழுத்தத்துடன் வாழ்ந்துவரும் 1,162 பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டனர். பங்கேற்பாளர்களின் உளவியல் நோயறிதல்கள் முறையான ஆய்வுகளின் மூலம் செய்யப்பட்டன, அவர்களுக்கு இருக்கும் மனச்சோர்வின் தீவிரம் மற்றும் மருத்துவப் பிரச்சனைகள் கணக்கில் கொள்ளப்பட்டன.
ஆய்வு முடிவு தெரிவிப்பதென்ன?
சிக்கிக் கொண்ட உணர்வு மற்றும் மோசமான சமூக பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவை தற்கொலை நடத்தையுடன் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்புடையவை என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இருப்பினும், இந்த காரணிகளுக்கும் தற்கொலை நடத்தைக்கும் இடையிலான தொடர்பு ஒருவரது ஆயுட்காலம் முழுவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
குறிப்பாக, இளம் வயதினரின் தற்கொலை ஒன்றில் சிக்கிக்கொண்ட உணர்வுடன் மிகவும் வலுவாக தொடர்புடையது, அதே சமயம் மோசமான சமூக பிரச்சனை தீர்க்கும் திறன்கள் வயதானவர்களில் தற்கொலை நடத்தையுடன் மிகவும் வலுவாக தொடர்புடையது.
பெண்கள் சிக்கிகொண்ட உணர்வுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், ஆண்கள் மோசமான சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நமது வட்டத்தில் தற்கொலைகளைத் தடுப்பது பற்றி ஆய்வு சொல்வதென்ன?
மனச்சோர்வு உள்ள நபர்கள் ஒருவிதமான சிக்கிகொண்ட உணர்வுகள் மற்றும் மோசமான சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களைக் கொண்டிருப்பார் என்று இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தின.
இந்த காரணிகளுக்கும் தற்கொலை நடத்தைக்கும் இடையிலான உறவை ஆராயும்போது வயது மற்றும் பாலினத்தை கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஆய்வின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
சிக்கிக்கொண்ட உணர்வுகளைக் குறைப்பது மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் மனச்சோர்வு உள்ள நபர்களிடம் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தடுக்கலாம் என்று ஆராய்ச்சி குழு பரிந்துரைக்கிறது.
நமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வேலை பார்க்கும் வட்டத்தில் மனச்சோர்வுடைய நபர்கள் நிச்சயம் இருப்பார்கள். சற்றே கவனம் எடுத்துப் பார்க்கையில் இத்தகைய நபர்களை எளிதில் அடையாளம் காணமுடியும் அதற்கென்று எல்லோரும் மனோதத்துவம் பயில வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.
நமது மொபைல் போன்களிலிருந்து சற்றே கண்களை விலக்கி உடன் இருப்பவர்களிடம் பேசினாலே போதுமானது. உடன் வாழ்பவர்களிடம் நம்பிக்கையை விதைப்பதும் அவர்களுக்கு உயிர் வாழ்வதற்கான உந்துதலை அளிப்பதும் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரின் கடமையாகும்.