பங்குசந்தை மோசடி – 135 டிரேடிங் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது செபி

செய்தி சுருக்கம்:
கடந்த புதன் கிழமையன்று (21-06-2023) இந்திய பங்குசந்தை ஒழுங்குமுறை ஆணையம் 135 டிரேடிங் நிறுவனங்களுக்கு ஆயிரத்து இருநூற்று அறுபது கோடி(1260000000.00) அபராதத்துடன் மேற்கொண்டு பங்கு பரிவர்த்தனைகளில் ஈடுபட இடைக்கால தடை விதித்துள்ளது.
பொதுமக்களிடம் தவறான தகவல் பரப்பி குறுநிறுவன பங்குகளில் கையாடல் செய்து பதினைந்து கோடியே மூன்று லட்சத்து அறுபதாயிரம்(15360000.00) ரூபாய் வரை லாபம் ஈட்டியதாக குற்றச்சாட்டு.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது:
தொடர் கண்காணிப்பின் மூலம் தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் கீழ்காணும் ஐந்து குறு-நிறுவனங்களின் பங்குகளில் முறைகேடு செய்துள்ளதாக செபி அமைப்பு கண்டறிந்துள்ளது.
1) Mauria Udyog (MAUR.BO)
2) 7NR Retail (NRRE.BO)
3) Darjeeling Ropeway (DARJ.BO)
4) GBL Industries (GBLI.BO)
5) Vishal Fabrics (VIFA.NS)
இன்றைய கணினி உலகில் பொதுமக்கள் அதிகளவில் அணுகி உலவக்கூடிய குறுந்தகவல் (SMS), டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் மற்றும் வழிகாட்டுதல் மூலம் எளிதில் ஈர்க்கும் படியான விளம்பரங்களை செய்து ஏமாற்றப் படுகின்றனர், எனவே பொதுமக்கள் எப்பொழுதும் செபி அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட இடைத்தரகர்களை (traders) மட்டுமே நம்பி பங்குசந்தையில் முதலீடு செய்யும்படி அறிவுறுத்தப் படுகிறார்கள். முதலீடு சார்ந்த எல்லா விதமான விளம்பரங்களையும் எளிதில் நம்பிவிட வேண்டாமென எச்சரிக்கை செய்கிறது செபி.
பின்னணி:
செபி அமைப்பு அளித்த தகவலின் படி தற்போது தடை செய்யப்பட்டுள்ள 135 டிரேடிங் நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்களின் பங்குகளை முதலில் தங்களுகுள்ளாக வாங்கியும் விற்றும் பரிவர்த்தனை செய்து அந்த பங்குகளின் விலை உயர்வதாக ஒரு மாயபிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களை இந்நிறுவன பங்குகளை உடனடியாக வாங்குமாறு குறுந்தகவல் மூலமாக பரிந்துரை செய்தும் மற்றும் சமூக வலைத்தள ஊடகங்கள் வழியாக விளம்பரங்கள் செய்தும் அதன் மதிப்பை மேலும் மேலும் உயரச்செய்து பங்கு வெளியீட்டாளருக்கு தங்கள் நிறுவன பங்குகள் லாபம் ஈட்டுவதாக காண்பித்து மோசடி செய்துள்ளது. இதன்மூலம் அந்த ஐந்து நிறுவனங்களின் லாபத்தை உயர்த்தியதாக கூறி கமிஷன் தொகையை 135 நிறுவனங்களும் பங்கிட்டுள்ளன.
இவ்வாறு பங்கு பரிவர்த்தனை உலகில் பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி தவறான வழியில் லாபம் அடைந்துள்ளன இந்த தடை செய்யப்பட்ட டிரேடிங் நிறுவனங்கள்.
மேலும் இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் செபி அமைப்பு, பங்கு சந்தை அறிவுரை வழங்கும் உரிமம் பெற்ற ஆறு தனி நபர்களை ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை பங்கு சந்தை முதலீடு ஆலோசனை வழங்க தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் டெலிகிராம் செயலியில் பங்கு முதலீடு சார்ந்த தவறான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுந்தகவல் மூலம் ஆலோசனை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும், தனி நபர்களையும் மிக தீவிரமாக கண்காணிக்க செபி உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்கால டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப வரைமுறைகள் மற்றும் கண்காணிப்பு விதிகளை மாற்றியமைத்து சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை மற்றும் பரிந்துரைகளை தடுக்க திட்டமிட்டுள்ளது செபி. டிரேடிங் நிறுவனங்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்வதும் கண்காணிக்கப்படுகிறது என செபி தகவல்.