விண்வெளியை கதிர்வீச்சால் நிரப்பும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள்!

செய்தி சுருக்கம்:
விண்வெளியில் செயல்படாத செயற்கைக்கோள்கள் மற்றும் உதிரிபாகங்கள் போன்றவையே விண்வெளிக்குப்பைகள் என்று அழைக்கப்படுகின்றன. செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களின் மீது மோதுதல், கட்டுப்பாட்டை இழந்து பூமியில் வந்து விழுதல் என்று இந்த விண்வெளிக்குப்பைகளால் ஏற்படும் பாதிப்புக்கு பஞ்சமில்லை. மாறாக, செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களால் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பைப் பற்றி இப்பொழுது செய்தி வெளியாகியிருக்கிறது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கணக்கு வழக்கின்றி விண்ணில் விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. இத்தகைய செயற்கைக்கோள்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சால் ரேடியோ அஸ்ட்ரானமர்ஸ் (Radio Astronomers) என்று சொல்லப்படக்கூடிய வானொலி வானியலாளர்களது பணி பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
வானொலி வானியலாளர்கள் பணி என்ன?
காணொளி வானியல் என்பது விண்வெளியின் ஆழத்திலிருந்து வரும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்யும் வானியலின் ஒரு கிளையாகும். விண்வெளியில் புலப்படும் ஒளி மற்றும் விண்வெளிப் புகைப்படங்களை மட்டுமே நம்பி ஆய்வு செய்வதற்கு பதிலாக விண்வெளியில் இருந்து வரும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்வது இதன் தனித்தன்மையாகும்.
இதன் மூலம் தொலைநோக்கிகளாலும் புகைப்படக் கருவிகளாலும் எளிதில் பார்க்க இயலாத பல விண்வெளி உண்மைகளை கண்டறிய முடியும்.
இந்த இடத்தில் பல்சர்கள் என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விண்வெளியில் அதிவேகமாக சுழலும் விண்கற்களுக்கு பல்சர் என்ற பெயர். அதிவேகமான சுழற்சியின் காரணமாக சூப்பர் நோவா என்று சொல்லப்படக்கூடிய ஒளித்தன்மையை இது பெற்றிருக்கும். இந்த பல்சர்கள் உண்மையில் ரேடியோ அலைகளின் மூலம் வானொலி வானியல் ஆய்வாளர்களால் மட்டுமே கண்டறியப்பட்டது.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சட்டவிரோதமானதா?
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இத்தகைய செயற்கைக்கோள்கள் கனடா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இணைய சேவையை வழங்கி வருகின்றன. 2027 ஆம் ஆண்டுக்குள் பத்தாயிரம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
ஏற்கனவே செயற்கைக்கோள் குப்பைகளால் நிரம்பி இருக்கும் பூமியின் விண்வெளி இப்பொழுது பல்லாயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் நிரப்பப்பட உள்ளது. உண்மையில் இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் எந்த சர்வதேச விதிமுறைகளையும் மீறவில்லை. இருப்பினும் இயல்பாக இந்த செயற்கைக்கோள்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சானது ஆழ் விண்வெளியில் இருந்து வெளிப்படும் ரேடியோ சிக்னல்களை குலைக்கிறது.
விண்வெளிக்குப்பைகளும் வானியல் ஆய்வும்
விண்வெளியில் நிரம்பி இருக்கும் செயற்கைக்கோள் குப்பைகள் ஏற்கனவே வானியல் ஆய்வாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருந்து வருகின்றன. இரவு வானத்தை தேவையற்ற ஒளியால் நிரம்பச் செய்வது, இரவு நேர விண்வெளி புகைப்படங்களில் வெளிர் கோடுகளை உருவாக்குவது, தொலைநோக்கிகள் மற்றும் கேமராக்கள் பூமியிலிருந்து விண்வெளியை துல்லியமாக படம் பிடிப்பதை தடுப்பது போன்றவை இவ்விண்வெளிக் குப்பைகளால் ஏற்பட்டிருக்கும் தொல்லைகளாகும்.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் என்னதான் பிரச்சனை?
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோர்களால் ஏவப்பட்ட 68 செயற்கைக்கோள்களில் 47 இலிருந்து 110 மற்றும் 158 மெகா ஹெட்ஸ் கதிர்வீச்சு வெளியாகிறது. இந்த அதிர்வெண் வரம்பில் 150.05 முதல் 153 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான பாதுகாக்கப்பட்ட பேண்ட் உள்ளடங்கியுள்ளது. இந்த அதிர்வெண் வரிசையானது விண்வெளியின் ஆழத்தில் இருந்து வரும் ரேடியோ அலைவரிசையை சிதைக்கிறது. இதனால் வானொலி வானியல் ஆய்வாளர்கள் தங்கள் பணியை சரிவர செய்வது கடினம்.
லாப நோக்கத்தை மட்டுமே கொண்டு வராமல் உலகமெங்கும் இருக்கும் வானில் ஆய்வாளர்களை கருத்தில் கொண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சர்வதேச வானியல் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.