fbpx
LOADING

Type to search

இந்தியா இலங்கை உலகம்

இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரனுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருது

ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழ் வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் சங்கரி சந்திரன் தனது ‘சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ்’ (Chai Time at Cinnamon Gardens) என்னும் நாவலுக்காக 60 ஆயிரம் டாலர் மதிப்பிலான ஆஸ்திரேலியாவின் மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருதை வென்றுள்ளார். கடந்த செவ்வாயன்று சிட்னியில் உள்ள தி ஓவோலோ ஹோட்டலில் நடந்த விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. 

இந்த நாவல் 1980 களில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டை விட்டு வெளியேறிய ஒருவரால் மேற்கு சிட்னி நகரில் அமைக்கப்பட்ட முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. போர், இனப்படுகொலை, இனவெறி, குடும்பம், காதல் மற்றும் நட்பு போன்ற பல கருப்பொருள்களை உள்ளடக்கியுள்ளது இந்த நாவல். 

புகழ்பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் மைல்ஸ் பிராங்கிளின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரனின் ஆங்கில நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. இது சங்கரி சந்திரனின் மூன்றாவது நாவல். சின்னமன் என்னும் இல்லத்தைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள இந்த நாவல் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்பத்தின் வாழ்க்கையை விளக்குவதன் மூலம் ஆஸ்திரேலியாவின் நடுநிலைமையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. 

இதுகுறித்து இந்த நாவலின் ஆசிரியர் சங்கரி சந்திரன் என்ன கூறுகின்றார் தெரியுமா? 

“ஆஸ்திரேலியாவின் உயரிய இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. உண்மையில் நான் இன்னும் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறேன். ஆஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவதெல்லாம் அசாத்தியமானது. இந்த நிலையில் எனது சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ் என்ற நாவல் அங்கீகரிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் அவர். 

சங்கரி சந்திரன் இந்த நாவலில் மகத்தான திறமையுடன் ஒரு புனிதமான வரலாற்றை விவரிக்கிறார் எனவும் சர்ச்சைக்குரிய வரலாற்றுக் கூற்றுகளையெல்லாம் மிகக் கவனமாகப் பின்பற்றியுள்ளார் எனவும் மறைக்கப்பட்ட பயங்கரங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் கொடூரங்கள் என்பதை நினைவூட்டியது எனவும் அனைவரது இதயத்தையும் திறக்க வைத்திருக்கிறார் எனவும் இந்நாவலைத் தேர்வு செய்த நடுவர் குழுவினர் பாராட்டியுள்ளனர். 

2023 ஆம் ஆண்டின் நடுவர் குழுவில் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் பெர்னாடட் பிரென்னன், இலக்கிய அறிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் மிருதுளா நாத் சக்கரவர்த்தி, புத்தக விமர்சகர் ஜேம்ஸ் லே, என் எஸ் டபுள்யு மிட்செல் நூலகர் மற்றும் தலைவர் ரிச்சர்ட் நேவில் மற்றும் கவிஞர் எல்பி ஜியோசாக்கி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மற்றும் மதிப்புமிக்க இலக்கிய விருதுகளில் ஒன்றான  மைல்ஸ் பிராங்கிளின் விருது 1957 இல் தொடங்கப்பட்டது. இந்த விருது, ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய வாழ்க்கையை அதன் எந்தக் கட்டத்திலும் முன்வைக்கும் மிக உயர்ந்த இலக்கியத் தகுதி உடைய நாவலுக்கு வழங்கப்படுகிறது. 

‘மை பிரில்லியன்ட் கேரியர்’ அதாவது ‘எனது புத்திசாலித்தனமான வாழ்க்கை’ என்ற பிரசித்தி பெற்ற ஆஸ்திரேலிய நாவலை 1901ஆம் ஆண்டு வெளியிட்ட மைல்ஸ் பிராங்கிளின் அவர்களின் விருப்பத்தின்படி இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்காகத் தனது தோட்டத்தை உயில் எழுதி வழங்கிய அவர் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார்.  இவர் ஒரு ஆஸ்திரேலியப் பெண் எழுத்தாளர் மற்றும் பெண்ணியவாதி. 1879 இல் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தவர். முதல் மைல்ஸ் பிராங்க்ளின் விருதை வென்றவர் பாட்ரிக் ஒயிட்.  1957 ஆம் வருடம் வோஸ் என்னும் அவருடைய நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விருதை ஜெனிஃபர் டவுன் என்பவர் பாடிஸ் ஆப் லைட்  என்னும் தன்னுடைய நாவலுக்காகப் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இலங்கைத் தமிழரான சட்டநிபுணர் சங்கரி சந்திரனுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களான சங்கரி சந்திரனின் பெற்றோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது இலங்கையை விட்டு வெளியேறியவர்கள். முதலில் இங்கிலாந்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் சங்கரி பிறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் புறநகர்ப் பகுதியான கான்பெர்ராவில் வளர்ந்த சங்கரி தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சித் திட்ட வடிவமைப்பு மற்றும் விநியோகத்தின் நீதித் துறையில் வழக்கறிஞராக இரண்டு தசாப்தங்களாகப் பணிபுரிந்துள்ளார். தற்போது சிட்னியில் வசிக்கும் அவர் ஆஸ்திரேலியத் தேசிய சில்லறை விற்பனை நிலையத்தில் தமது பணியைத் தொடர்கிறார். 

சங்கரி சந்திரன் தனது முதல் நாவலுக்கான கையெழுத்துப் பிரதியை ஆஸ்திரேலிய வெளியீட்டாளர்களிடம் அனுப்பிய போது ஒருமனதாக அனைவரும் அதை நிராகரித்துள்ளனர். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நீங்கள் எழுதும் விதம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் உங்கள் புத்தகத்தில் ஆஸ்திரேலியச் சந்தைக்குத் தேவையான ‘ஆஸ்திரேலியன்’ இல்லை. அதனால் அவற்றை இங்கே விற்க முடியாது”, என்றார்களாம். தற்போது விருது பெற்றிருக்கும் இந்த நாவலும் வெளியிடப்படுமா என்ற சந்தேகத்தில் இருந்தாராம் அவர். அதனால்தான் தான் இன்ப அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறுகின்றார். இந்நிலையில் இன்னும் வெளியிடப்படாத அவரது அரசியல் த்ரில்லரான ‘அன்பினிஷ்டு பிசினஸ்’ என்னும் படைப்பு வரும் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய பதிவுகள் :

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை பதவி விலகுமாறு பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ம...
விமான விபத்தில் இறந்துவிட்டாரா ரஷ்யாவின் தனியார் இராணுவ கம்பெனியின் தலைவர்..? 
அதானி நிறுவன ஆடிட்டர் பதவி விலகுகிறார்! - Hindenburg, அதானி குழும நிதிநிலை அறிக்கை பற்றி கேள்வி எழுப...
அதிபழமையான டைனோசர் எச்சங்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன தெரியுமா?
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த பூகம்பம், கவுகாத்தியில் வீட்டைவிட்டு அலறியடித்து வெளியேறி...
ஒர்க்னி இங்கிலாந்தை விட்டு வெளியேறி நார்வேயுடன் இணையப் போகிறதா? காரணம் என்ன?
சந்திராயன்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பின்னணியில் தமிழக ரயில்வே தொழிலாளியின் ம...
கூகுள் ஏன் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்கிறது?பின்னணி என்ன?
ஹரியானா மாநிலத்தில் வெகுவாக குறைந்து வரும் பெண்களின் பிறப்பு விகிதம் - 1000 ஆண்களுக்கு 900 த்திற்கும...
அதிபர் பைடனின் மனத்திறன் குறைவதை அமெரிக்க ஊடகங்கள் மறைக்கின்றனவா?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *