fbpx
LOADING

Type to search

இந்தியா இலங்கை

அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

செய்தி சுருக்கம்:

அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் – பிடிஐ செய்தி.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த புதன்கிழமை நெடுந்தீவு அருகில் இருந்து அழைத்து வரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மீனவர்கள் பயன்படுத்திய 4 படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கத்தினர் கூறும்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் “இலங்கை கடற்பரப்பில் இருந்து சட்ட விரோதமாக மீன்பிடிக்கும் இந்திய இழுவை படகுகளை விரட்டுவதற்கான சிறப்பு நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் ஜூன் 21 ஆம் தேதி மேற்கொண்டனர். யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவின் வடமேற்கே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 22 இந்திய மீனவர்களுடன் 4 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர் சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், ‘இந்த கைது நடவடிக்கையால் உள்ளூர் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்’ என்றார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைத் தமிழக அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ் ராமதாஸ் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை கூட்டுக் குழுவை உடனடியாக கூட்டி, இந்திய மீனவர்களின் அச்சத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீனவர் பிரச்சினை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி இந்திய மீனவர்களைக் கைது செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.

பின்னணி:

காலம் காலமாக இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் பாக் ஜலசந்தியில் தத்தம் மீன்பிடி பகுதியில் மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள கச்சத்தீவு என்ற 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவுப் பகுதியை இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தாரை வார்த்துக் கொடுத்ததில் இருந்து இந்த பிரச்சனை தொடங்குகிறது.

1974 ஆம் ஆண்டு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்ட இத்தீவு அதுவரையில் இருநாட்டு மீனவர்களும் வலைகளை காயவைத்து ஓய்வெடுத்துச் செல்லும் ஒரு இடமாக இருந்தது இன்றளவும் இம்மீனவர்களின் நினைவில் வாழும் சரித்திரம்.

1970 காலகட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டார நாயகவின் அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இருநாட்டு பிரதமர்களும் அந்நேரத்தில் நல்ல நட்புறவுடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி இருநாட்டு மீனவர்களும் அப்பகுதியில் மீன்பிடிக்கவும், அத்தீவில் அமைந்திருக்கும் தேவாலயத்திற்கு யாத்திரை செல்லவும் எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை.

ஆனால், 1976 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த நிலையில், வெறும் கடிதங்கள் வாயிலான ஒப்பந்தங்கள் மூலம் இருநாட்டு மீனவர்களும் இனி தத்தம் கடல் எல்லைகளில் மட்டும் மீன் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டனர்.

இத்தகைய பலகீனமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருநாட்டு மீனவர்களுக்கும் இந்த பாரம்பரியமான கடல் பகுதியில் இருந்துவந்த மீன்பிடி உரிமை பறிபோனதுதான் சோகம்.

கடல் எல்லையைக் கடந்துவந்தவர்களை சுட்டுக்கொல்வதை வழமையாக்கிக் கொண்ட இலங்கை கடற்படை தனது வாதமாக ‘எல்லை தாண்டி வருதல் தவறுதானே?’ என்கிறது. பிரச்சனை எல்லை தாண்டுவதில் இல்லை. எல்லை எது என்பதிலேயே இருக்கிற்து.

இந்த இழுபறியில் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கான தீர்வுதான் என்ன?

முதலாவதாக, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும். இந்த தீவையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் இந்திய அரசாங்கம் நீண்ட கால குத்தகைக்கு எடுக்கலாம். இவ்வாறு செய்கையில் இந்திய தமிழ்நாட்டு மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிப்பது ஒரு பிரச்சனையாக உருவாகாமல் தடுக்கலாம். மீனவர்கள் உயிரிழப்பது தடுக்கப்படும்.

இரண்டாவதாக, இந்திய தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய லைசென்ஸ் அளித்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி அளிப்பது. இது தொடர்பாக இந்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பாக கலந்தாலோசித்தனர்.

அரசியல் ஆதாயங்களைக் கடந்து மீனவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு இப்பிரச்சனைக்கு தீர்வு காணுதல் அவசியம். தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, இருதரப்பு மீனவர்களோடும் கலந்து பேசி இதற்கு நிலையான முடிவைக் காண வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார இணைப்பு! திட்டங்களை புதுப்பிக்கும் முயற்சியில் இருதரப்ப...
அரசுப் பள்ளிகளில் தமிழ்க் கொடை திட்டம்: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
இந்திய பிரதமரின் எகிப்து பயணம் : பரஸ்பர பலன்கள் என்னென்ன?
வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது: திடுக்க...
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.!! கடற்படையிடம் சிக்கிய 130 கி...
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை பதவி விலகுமாறு பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ம...
சந்திராயன்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பின்னணியில் தமிழக ரயில்வே தொழிலாளியின் ம...
இந்தியா-குடிகளும் அவர்கள் குடிப்பழக்கமும் 
புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *