இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் சீராகி வருகின்றன – ஜூலை மாதத்தில் அதன் பணவீக்கம் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது.

செய்தி சுருக்கம்:
வெகுவேகமாக உயர்ந்து கொண்டிருந்த பணவீக்க மதிப்பை கடந்த ஜூலை மாதத்தில் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது இலங்கை அரசு. தற்போது அதன் பணவீக்கம் ஒற்றை இலக்கத்தை தொட்டுள்ளது, Colombo Consumer Price Index (CCPI) எனப்படும் இலங்கையின் நுகர்வோர் ஆரம்ப நிலை விலைவாசியானது இலங்கையின் பணவீக்கம் குறைந்து மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து வருவதை சுட்டி காட்டுகிறது.
ஜூன் மாத நிலவரப்படி 12% ஆக இருந்துவந்த இலங்கையின் பணவீக்கம் தற்போது ஜூலை மாத இறுதியில் 6.3% என்ற அளவில் குறைந்துள்ளது, இது இலங்கை அரசு செய்து வருகின்ற பல்வேறு புணரமைப்பு திட்டங்களால் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதை தெளிவாக காட்டியுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வந்த பொருளாதார சரிவுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு வருகிறது, பணவீக்க மதிப்பு புள்ளிகளின் அடிப்படையில் உணவுப் பொருட்கள் அல்லாத வணிகப்பொருட்களின் பணவீக்கத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இலங்கையின் தலையாய பிரச்னையாக இருந்துவந்த பணவீக்கம் என்பது பெருமளவில் குறைந்து தற்போது ஆசுவாசம் அடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 4.1% ஆக இருந்து வந்த உணவுப்பொருட்களின் பணவீக்க மதிப்பானது ஜூலை மாத இறுதியில் 1.4% ஆக குறைந்துள்ளது, இதேபோல உணவுப்பொருட்கள் அல்லாத வணிக பொருட்களின் பணவீக்க மதிப்பும் பெருமளவில் சரிந்துள்ளது, ஜூன் மாதத்தில் 16.2% ஆக இருந்தது தற்போது 10.5% ஆக குறைந்துள்ளது.
இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கமானது தற்போது 6.1% என்ற அளவில் உள்ளது. 1948 ஆம் ஆண்டில் இருந்து நாம் பார்த்தோமானால் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கை அரசின் மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்புகள் பற்றாக்குறையாலும் மற்றும் அதன் காரணமாக சர்வதேச சந்தையில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போனதாலும் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு இலங்கை அரசு வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியிருந்த கடன்களுக்கு தவணையை செலுத்த முடியாமல் தடுமாறி நின்றது.
இவற்றுடன் சேர்ந்து கூடுதலாக இந்த ஆண்டு வாங்கியிருந்த வெளிநாட்டு கடன்களும், வரிகுறைப்பு போன்ற நடவடிக்கைகளாலும் நிதிப்பற்றாக்குறை மேலும் மேலும் அதிகரித்தது. இதுபோக இரசாயன உரங்கள் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளும், திடீரென சரிந்த இலங்கை ரூபாயின் மதிப்பும் கூட இலங்கையின் இத்தகைய பொருளாதார சிக்கல்களுக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதேபோல கோவிட்-19 தாக்கத்தால் உலகமே முடங்கியிருந்த ஊரடங்கு காலமானது இயற்கை அளித்த இன்னுமொரு கூடுதல் அடியாக இலங்கையின் மீது விழுந்து அந்நாட்டை தடுமாற வைத்தது. பெருமளவிலான வருவாய் என்பது சுற்றுலாத்துறை மூலமாகவே கிடைத்து கொண்டிருந்த நிலையில் கோவிட் பாதிப்புகள் அதனையும் முடக்கியது.
இப்பேர்பட்ட பொருளாதார நெருக்கடிகள் இலங்கையை சூழ்ந்து கொண்டதால் கடந்த ஆண்டில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களிலும் கலவரங்களிலும் ஈடுபட தூண்டுகோல் ஆகியது, இத்தகைய மக்கள் எதிர்ப்புகளால் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த ஆண்டு இலங்கையை விட்டு மக்களால் விரட்டியடிக்க பட்டார். உணவு, எரிபொருள் மற்றும் பல அத்தியாவசிய பொருள்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக இலங்கை மக்கள் பல்வேறு கலவரங்களில் ஈடுபட்டு அதிபரின் வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியது. போராட்டக்காரர்களின் தீவிர தாக்குதலுக்கு அஞ்சி நாட்டை விட்டு தப்பியோடும் சூழலுக்கு ராஜபக்சேயின் குடும்பம் உள்ளானது.
இலங்கை அரசு எதிர்கொண்ட அந்நிய செலாவணி நெருக்கடியால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வெளிநாடுகளிடம் வாங்கியிருந்த கடன்களுக்கான தவணையை கட்ட இயலாமல் இந்த ஆண்டு திண்டாடியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை அரசு செலுத்த வேண்டியிருந்த இந்த ஆண்டிற்கான தவணைத்தொகை சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தவில்லை, இந்த கடன்தொகை 2026 ஆம் ஆண்டிற்குள் திருப்பி செலுத்த வேண்டிய மொத்த தவணை தொகையான 25 பில்லியன் அமெரிக்க டாலர்களில் ஒரு பங்காகும். இலங்கை செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி இலங்கை அரசின் மீது மொத்தமாக 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கியுள்ள இலங்கை அரசுக்கு கடந்த மார்ச் மாதம் “சர்வதேச நிதி ஆணையம் (IMF)” தன்னுடைய (Extended Fund Facility) விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூலமாக நான்கு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியின் மூலமாக இலங்கை அரசு அதன் பொருளாதார கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கி வருவாயை பெருக்கும் வகையில் சீர் செய்துகொள்ள ஒப்பந்தத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. IMF வழங்குவதாக கூறியுள்ள 3 பில்லியன் டாலர்களில் முதல் கட்டமாக 330 மில்லியன் டாலர்களை உடனடியாக விடுவித்துள்ளது, அதைக்கொண்டும், இறக்குமதியில் தளர்வுகளை செய்தும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தியும் இலங்கை அரசு முழு மூச்சாக தன்னுடைய நாட்டின் பொருளாதார சீர்குலைவை சரி செய்வதில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த ஜூலை மாத நிலவரப்படி அந்த முயற்சியில் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
பின்னணி:
கோவிட் காலத்தில் ஏற்பட துவங்கிய பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் இலங்கை மக்கள் கலவரங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட துவங்கினர், இதன் விளைவாக கடந்த 2022 இல் அந்நாட்டின் அதிபராக இருந்து வந்த கோத்தபய ராஜபக்சே மக்களால் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார். இத்தகைய மோசமான சூழ்நிலையில் சிக்கித்தவித்த இலங்கை அரசுக்கு இந்தியா சீனா போன்ற நட்பு நாடுகளும் சர்வதேச நிதி ஆணையமும் பல்வேறு வகையில் உதவிகளை தக்கசமயத்தில் அளித்துள்ளனர். அதன் மூலமாக இலங்கை அரசின் பொருளாதாரத்தின் மீது விழுந்த பலத்த அடியிலிருந்து மீண்டு மெல்ல மெல்ல மேலெழுந்து வந்து கொண்டுள்ளது.
தற்போது இறக்குமதியில் தளர்வுகளை செய்தும், சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொண்டதாலும், இன்னும் பல சீர்திருத்தங்களை செய்தும் இலங்கை வேகமாக பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறது. விரைவில் அனைத்தும் சரியாகி இலங்கை மக்களும் மற்றும் இலங்கை அரசும் நிம்மதி பெருமூச்சு விடுகின்ற காலம் வெகுதூரம் இல்லை என்பது தற்போதைய பொருளாதார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.