இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார இணைப்பு! திட்டங்களை புதுப்பிக்கும் முயற்சியில் இருதரப்பு அரசுகள்!!

செய்தி சுருக்கம்:
இந்தியாவும் இலங்கையும் மின்சாரத்தை வர்த்தகம் செய்வதற்காக இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பவர் கிரிட் இணைப்பு திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில் இருதரப்பு அரசுகளும் இறங்கி வருகின்றன.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இதற்கான முன்மொழிவு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. கடல் பகுதிக்கும் மேல் அல்லது கடலுக்கடியில் கேபிள் மூலம் மின் கம்பிகளை கொண்டு செல்லும் விரிவான திட்ட வரைவு தயாரிப்பு நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்த விரிவான திட்ட அறிக்கை வரும் செப்டம்பர் 15 தேதிக்குள் சமர்பிக்கப்பட்டு, இரு தரப்பும் விவாதித்து இறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி:
கடந்த இரண்டு தசாப்தங்களாக எல்லை தாண்டிய மின் இணைப்புத் திட்டம் விவாதத்தில் உள்ளது. இந்த திட்டம் மிக அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றும் சாத்தியமற்ற ஒன்று என்றும் இந்த துறைசார் வல்லுநர்கள் தெரிவித்திருந்த நிலையில், இரு அரசுகளும் இந்த திட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் 2027-28 ஆண்டுகளில் இலங்கை இந்த மின் இணைப்பில் மின் அழுத்த சோதனைகளை மேற்கொள்ளும். இந்தியாவில் இருந்து 500 மெகா வாட் மின்சாரத்தை பெற திட்டமிடுகிறது. அதற்கான தொழில் நுட்ப சோதனைகளையும், முன்னேற்பாடுகளையும் அந்நாடு செய்து வருகிறது.
இலங்கை தரப்பிலிருந்து தரப்படவேண்டிய சோதனை முடிவுகளையும், மின் அழுத்த சோதனை ஆய்வுகளையும் இந்தியா மேற்பார்வை செய்யும். வரும் ஆகஸ்டு 21 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவடையும்.
இந்த அறிக்கைகள், மத்திய மின்சார ஆணையம் , பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் 2016 இல் உருவாக்கப்பட்ட இலங்கை மின்சார வாரியம் (CEB) ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுகின்றன.