இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளும் இலங்கை! இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் எல்லாமே எளிதாகிறது!!

இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இலங்கை அறிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை (ஜூலை 20) தெரிவித்தார்.
இந்திய ரூபாயை (INR) ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக ஏற்றுக்கொள்வது, இரு நாடுகளுக்கும் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகங்களை செய்துகொள்வதோடு மட்டுமல்லாமல், இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளும் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயையே பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவிற்கு வருகை தரும் விக்கிரமசிங்க
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்க, இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
மக்களின் எதிர்ப்பால் கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பிறகு 2022 ஜூலை மாதம் பதவியேற்ற விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை விக்ரமசிங்க சந்தித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார் என்று வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்தும்!
இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவின் அண்டை நாடுகளில் இலங்கை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால நட்பை வலுப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா பலவிதமான உதவிகளைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, இந்தியா இலங்கைக்கு நாணய ஆதரவு, ஒத்திவைக்கப்பட்ட கடன்கள் மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளை அவசரகால கொள்முதல் செய்வதற்கான கடன் உட்பட கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21 முதல் இரண்டு நாட்களுக்கு இந்தியாவுக்கு விஜயம் செய்யும்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிட் இணைப்பு, துறைமுக அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், போன்றவை விவாதிக்கப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.