இலங்கையின் வெகுஜன படுகுழிகள் : ஜனநாயகமும் மனிதமும் சேர்த்துப் புதைக்கப்பட்டது குறித்த 75 பக்க அறிக்கை!!

செய்திச் சுருக்கம்
“பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்பான் பாரதி. அறம் மறந்த ஆட்சியாளர்கள் கொடூரத்தின் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு வாழ்நாள் சாட்சியாக வெளிப்பட்டு வருகின்றன இலங்கை மண்ணில் கண்டறியப்படும் வெகுஜன படுகுழிகள்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இலங்கையில் உள்ள ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (ஜேடிஎஸ்) மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள ‘இலங்கையில் வெகுஜன புதைகுழிகள் மற்றும் தோல்வியுற்ற தோண்டுதல்கள்’ என்ற 75 பக்க அறிக்கையில் வெளிப்படும் அதிர்ச்சிகரமான உண்மைகளைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.
சிங்கள இராணுவமும் மற்ற பாதுகாப்பு படைகளும் சேர்ந்து பல்லாயிரம் போராளிகளையும் பொதுமக்களையும் கொன்று புதைக்கும்படி கொடூர மனம் கொண்ட ஆட்சியாளர்கள் முழு அதிகாரம் அளித்திருக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்கள் யார்?
இலங்கை ஆட்சியாளர்கள் ஏதோ தமிழர்களை மட்டும் இனவெறியால் கொன்று குவித்துப் புதைத்தனர் என்று எண்ணிவிடவேண்டாம். இந்த வெறிகொண்ட மிருகங்களுக்கு தம்மக்கள் பிறமக்கள் என்றெல்லாம் வேறுபாடுகள் தெரியவில்லை போலும். தமிழர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லாமல் இருக்கிறது சிங்கள மக்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை.
சிங்களர்களின் அமைப்பான இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி அல்லது மக்கள் விடுதலை முன்னணி) மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஆகிய இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் காணாமல் போயுள்ளனர். எந்த சார்புமற்ற பொதுமக்கள் எண்ணிக்கை தனி.
ஜேவிபி அமைப்பு இதுவரை இரண்டு கிளர்ச்சிகளை நடத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு 1983 இல் இருந்து 2009 ஆண்டிற்குள்ளான காலகட்டத்தில் பிரிவினைக்கான யுத்தத்தை தொடர்ந்து நடத்தியுள்ளது.
எங்கெங்கே எத்தனை வெகுஜன புதைகுழிகள் அறியப்பட்டுள்ளன?
இந்த யுத்தப் போராட்டத்தின் விளைவுகள்தான் இன்று இலங்கை முழுவதும் வெகுஜன புதைகுழிகளாக விளைந்து செழித்துள்ளது. இலங்கை முழுவதும் சுமார் 20 வெகுஜன புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இடங்களும் அடைப்புக்குறிக்குள் வெகுஜன புதைகுழிகளின் எண்ணிக்கையும் : யாழ்ப்பாணம் (3), கிளிநொச்சி (2), முல்லைத்தீவு (2), மன்னார் (2), மற்றும் மட்டக்களப்பு (1) இவை அனைத்தும் புலிகளினுடனான போர் நிகழிடங்கள். கண்டி (1), குருநாகல். (1), மாத்தளை (1), கம்பஹா (3), கொழும்பு (2), மாத்தறை (1) மற்றும் இரத்தினபுரி (1), இவை அனைத்தும் சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள்.
இலங்கைத் தீவு முழுவதும், பல்லாயிரக்கணக்கான உடல்கள் வெகுஜன புதைகுழிகளில் இருந்து வெளிவருவதாக இந்த 75 பக்க அறிக்கை கூறுகிறது. இதுவரை, எந்த ஒரு தமிழ் குடும்பமோ அல்லது சிங்கள குடும்பமோ தங்கள் அன்புக்குரியவர்களின் இறந்த உடலின் எச்சங்களை திரும்பப் பெறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இப்போதாவது நிலைமை மாறியுள்ளதா?
வெகுஜன புதைகுழிகள் கண்டறியப்பட்டும் கூட நிலைமை பெரிதாக ஒன்றும் மாறவில்லை. இலங்கையில் உள்ள எண்ணற்ற விசாரணை ஆணைக்குழுக்களில் ஒன்றுகூட வெகுஜன புதைகுழிகள் தொடர்பான பிரச்சினையை ஆராய கட்டளையிடப்படவில்லை. மாறாக, நேர்மையான அதிகாரிகளால் உண்மையை வெளிக்கொணரும் அனைத்து முயற்சிகளும் முடக்கப்பட்டுள்ளன.
மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் மீறி நீதித்துறை உத்தரவுகளை நிறைவேற்றுவதை காவல்துறை தன்னால் இயன்ற அளவிற்கு தாமதப்படுத்தியுள்ளது,
காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வழக்கறிஞர்கள் வெகுஜன புதைகுழிக்களின் அருகே செல்லக்கூட அனுமதிக்கவில்லை மற்றும் உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அத்தி பூத்தாற்போல யாரேனும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டாலும் அவர்கள் மன்னிக்கப்பட்டனர். எனவே, செத்து மண்ணோடு மக்கிப் போனபின்பும் கொல்லப்பட்ட அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பது கண்கூடு.
தடயங்கள் அழிப்பும் விசாரணை முடக்கங்களும்
ஜே வி பி அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வந்த மாத்தளை மாவட்டத்தில் 2013ல் ஒரு வெகுஜன புதைகுழி கண்டறியப்பட்டது. ஜூலை 1989 முதல் ஜனவரி 1990 வரை மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டாபய இருந்தார். 2013 ல் அவர் அதிகாரமும்மிக்க செயலாளராக இருந்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
மாத்தளையில் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டதும், மாத்தளை உட்பட மத்திய மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள அனைத்து வழக்குப் பதிவுகளையும் ஐந்து வருடங்களுக்கும் மேலான பதிவுகளையும் மொத்தமாக அழிக்குமாறு கோட்டாபய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.அந்த மாகாணத்தில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள் எவருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிங்களர் பகுதியிலேயே இப்படி என்றால் தமிழர் பகுதியைப் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழர்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியில் நிலைமை இன்னும் மோசம். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழியை ஆரம்பத்தில், புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என நினைத்து அதிகாரிகள் தோண்டி எடுக்க விரைந்தனர்.
பின்னர் விசாரணைகள் முடங்கின. காரணம் என்ன? ஏனெனில் புலிகளின் கிழக்கு இராணுவத் தளபதியாக இருந்து இராணுவத்தின் பக்கம் மாறிய கேணல் கருணாவின் உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்தான் அந்த புதைகுழிக்கு காரணம் என்று தெரியவந்தது. கேணல் கருணா, 2008 இல் உத்தியோகபூர்வமாக மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இணைந்தார். அதன்பிறகு களுவாஞ்சிக்குடியில் எதுவும் தோண்டி எடுக்கப்படவில்லை.
இலங்கை அரசுக்கு அளிக்கும் பரிந்துறைகள்
கண்மூடித்தனமாக கொன்று புதைக்கப்பட்ட இம்மகளுக்கும் அவர்தம் உறவினருக்கும் இனியாவது நீதிகிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த அமைப்புகள் இவ்வறிக்கையோடு சேர்த்து சில பரிந்துறைகளை வழங்கியுள்ளது:
- வெகுஜன புதைகுழிகள் மற்றும் தோண்டுதல்களை நிர்வகிப்பதற்கான ஒரு குறிப்பிட்ட சட்டம் மற்றும் கொள்கையை இயற்ற வேண்டும். அதில் சடலங்களை அடையாளங்கண்டு பாதுகாத்தல் மற்றும் மேற்கொண்டு விசாரணை செய்தல் ஆகியவை அடங்கும்;
- அரசு, உள்ளூர் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், இறந்தோரது குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சட்டப்பூர்வ நிறுவனத்தை நிறுவுதல்.
- ஒவ்வொரு அகழாய்வுக்கும் ஒரு குடும்ப தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்; தோண்டியெடுக்கப்பட்ட உடல்களில் தங்கள் உறவினர்கள் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது டிஎன்ஏவை சேகரிக்கவும்; மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் உடைமைகள் / கலைப்பொருட்களை அடையாளம் காண உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் வேண்டும்.
- அடையாளம் காணப்பட்ட எச்சங்களை அவர்களின் குடும்பங்களுக்கு விரைந்து திருப்பித் தரவேண்டும்.
- வெகுஜன புதைகுழிகள் உருவாக காரணமானவர்கள் குறித்த விசாரணைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் முழுவீச்சில் தொடங்கப்பட வேண்டும்.
கண்காணிக்கப்படாத, காட்டுமிராண்டித்தனமான அரசாங்கம் எந்த எல்லைக்குச் செல்லும் என்பதற்கான நிகழ்கால உதாரணமாக இலங்கை திகழ்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி உலக நாடுகளின் ஆதரவை எதிர்நோக்கி நிற்கும் நிலையிலும் இலங்கை அரசாங்கம் இந்த மனித உரிமை மீறல் படுகொலைகள் குறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கத் தயாராக இல்லை என்பதுதான் முகத்திலறையும் நிதர்சனம்.
சிறப்பு
உண்மைகள் தூங்குவதில்லை, எந்நேரமும் வெளிப்பட தயாராக இருக்கும் வெடிகுண்டுகள் அவை.