இலங்கை எதிர்நோக்கும் முக்கிய திருப்பம்; எரிபொருளால் மீளுமா பொருளாதாரம்?

செய்தி சுருக்கம்:
இலங்கை நாட்டின் சில்லறை எரிபொருள் சந்தையில் அமெரிக்க நிறுவனமும் புதியதாக இணைந்துள்ளது. அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டையும், அந்நிய செலாவணி பற்றாக்குறையையும் போக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எரி சக்தி மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. சரக்குகளை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து விற்பனைக்கு கூடிய விரைவில் அனுப்பிவிடவேண்டும். இல்லையேல், சரக்குகள் தேக்க நிலையை அடைந்து வீணாகிவிடும். இதனால் உற்பத்தி பெருமளவில் பாதிப்படைந்து, பொருட்களின் விலை விண்ணைத் தொடும். இதை சமநிலையில் வைக்கவே அரசாங்கங்கள் எரிபொருளை இறக்குமதி செய்கிறது. தற்போது இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் எரிபொருளை இறக்குமதி செய்வது கடினமான ஒன்றாக இருக்கிறது. இதனைப் போக்கவே தனியார் நிறுவனங்களுடன் இந்த டீல் போடப்பட்டுள்ளது.
பின்னணி:
தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமையமாக்கல் அசுர வளர்ச்சியைக் கண்டது. தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் பல நாடுகளின் நிதிநிலை பெருகியது. சில நேரங்களில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும் அதை இயல்பாகக் கடந்து வந்தது. பின்னர் தனியார் நிறுவனங்களின் தேவையும் ஆதிக்கமும் அதிகரித்தது.
இப்படி எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது, அது கொரோனா வைரஸ். இராண்டாயிரத்தி இருபதாம் ஆண்டில் உலகையே புரட்டிப்போட்ட கோவிட் தொற்று இலங்கையும் விட்டுவைக்கவில்லை. இலங்கை ஒரு தீவு நாடாக இருப்பதால், சுற்றுலாத் துறை மிகவும் பிரபலமாக இருந்தது. பல நாடுகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வந்து சென்றனர்.
கொரோனாவின் போது வீட்டைவிட்டே வெளிவர முடியாத சூழலில் சுற்றுலா எல்லாம் ஒரு பொருட்டாகவே மக்களுக்குத் தெரியவில்லை. அனைத்து நாடுகளும் தங்கள் எல்லையை மூடிக்கொண்டது. விமான சேவை படிப்படியாக குறைந்து பிறகு விமானநிலையங்கள் எல்லாம் பூட்டப்பட்டது. கொரோனாவின் முடிவில் உயிர் சேதத்துடன், பொருட்சேதமும் பெருமளவில் இருந்தது. இந்த நிலையில் சுற்றுலாவை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த இலங்கையின் அந்நிய செலாவணி சர சரவென குறைந்து கொண்டே வந்தது. அடிப்படைத் தேவைகளுக்காக அலைந்து கொண்டிருந்த மக்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் கையில் காசில்லாமல் இலங்கை அரசு வேடிக்கை பார்த்தது. ஏனென்றால், அரசு கஜானா சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டிருந்தது.
எரிபொருளை அமெரிக்க டாலருக்கு தான் வாங்க வேண்டும் என்னும் பெட்ரோ டாலர் கட்டாயம் வேறு. என்ன செய்வது என்று தெரியவில்லை அரசுக்கு. பொருட்கள் தேக்க நிலையை அடைந்து விலைவாசி எகிறியது. இதனால் மக்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகினார். பிழைத்தால் போதும் என பலர் வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். கடந்த ஒரு ஆண்டாக, இலங்கை மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி அந்த நாட்டின் அதிபரான ராஜபக்ஷேவை அதிகாரத்தில் இருந்து தூக்கினர். பின்னர் ரணில் விக்ரம சிங்கே புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இலங்கையில் சில்லறை எரிபொருள் வணிகத்தில் தனியார் நிறுவனங்களை தொழில் துவங்க அனுமதி கொடுத்து வருகிறது ரணில் விக்கிரம சிங்கே அரசு. கடந்த மாதம் சீனாவின் ‘சினோபெக்’ நிறுவனம் இலங்கையில் சில்லறை எரிபொருள் வணிகத்தில் ஈடுபட அனுமதி பெற்றது. இப்போது அதனைத் தொடர்ந்து ஆர். எம் பார்க்ஸ் எனும் அமெரிக்க நிறுவனமும் சில்லறை எரிபொருள் வணிகத்தில் ஈடுபடவுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த நிறுவனம் எரிபொருளை விநியோகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஷெல் நிறுவனத்துடன் இந்த ஆர். எம் பார்க்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இனிவரும் காலங்களில் இந்த ஆர். எம் பார்க்ஸ் நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விநியோகம் செய்யத் துவங்கும்.
அதே சமயம், இந்நிறுவனம் தொழில் செய்ய இலங்கை அரசிடம் இருந்து எந்தவொரு நிதியையும் எதிர்பார்க்காது. மாறாக அதன் செலவிலேயே எண்ணையை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும். இந்தவொரு செயலால் இலங்கையின் எரிசக்தி பற்றாக்குறையும் தீரும் அதே நேரம் இலங்கையின் நிதி நிலமையும் சீரடையும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். எனவே, இந்த வகை டீல்கள் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்கும் கருவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.