ஸ்பாட்டிஃபை செயலியில் ருசிகரத் தகவல்; இசையை விற்கிறதா நிறுவனம்?

செய்தி சுருக்கம்:
ஸ்பாட்டிஃபை நிறுவனம் தனது சந்தா தொகையை சில நாடுகளில் உயர்த்தியுள்ளது. முதலீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
மியூசிக் ஸ்ட்ரீமிங் சந்தையில் இளைஞர்களின் மத்தியில் பிரபலமாக இருப்பது ஸ்பாட்டிஃபை செயலிதான். எளிமையான வடிவமைப்பு, கிளீன் யூஐ/யூஎக்ஸ் டிசைன், ஏஐ ரெக்கமண்டேஷன், இன்டிபெண்டன்ட் ஆல்பம், பாட்காஸ்ட், பாடல் லிரிக்ஸ், என அனைத்திலும் புதுமையை கொண்டு இயங்குவதால் தான் ஸ்பாட்டிஃபை இத்தனை பிரபலம் ஆக உள்ளது. இந்த விலையேற்றத்தின் தாக்கம் ஸ்பாட்டிஃபையை எப்படி பாதிக்கும்?
பின்னணி:
ஸ்பாட்டிஃபை, ஒரு மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட்பார்ம் ஆக 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த டேனியல் மற்றும் மார்ட்டின் இருவரும் இணைந்து துவங்கிய நிறுவனம்.
உலக முழுவதும் இசை என்பது அனைத்து காலகட்டங்களிலும் முக்கியதுவம் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. அது கலாச்சார மாற்றங்கள் நிகழும்போது பரிணாமம் அடைகிறது.
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அடிமையாக இருந்த காலத்தில் ‘ப்ளூஸ்’ என்னும் இசை பிறந்தது. கடுமையான வெயிலில், வயல் வெளியில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவர்கள் தங்களது சோகங்களை புலம்பலாக பாடிக்கொண்டிருந்தனர். பிற்காலதில் இவ்வகையான இசை அமெரிக்கா முழுவதும் பிரபலமாகின.
இசையானது வார்த்தைகளில்லா உணர்ச்சியின் வெளிப்படாகும். வானொலியில் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்த இசை, பிறகு இசைதட்டுகளாக வடிவம் பெற்றது. பின்னர், இசையை பதிவு செய்து கேட்கும் தொழில்நுட்பம் பிறந்தது. 90 களின் இளைய வட்டம் ‘வாக் மேன்’ என்னும் கருவியில் ஒரு முறையாவது பாடலைக் கேட்டுவிட மாட்டோமா என்று அலைந்தனர்.
பிறகு இணையத்தில் பாடல்கள் வெளியானது. தேவையான பாடல்களை தரவிறக்கம் செய்து எப்போது வேண்டுமானாலும் கேட்டு மகிழ்ந்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. பின்பு அனைத்து பாடல்களையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து மியூசிக் செயலிகளாக உருவாக்கினர்.
அப்போது உருவான செயலிதான் ஸ்பாட்டிஃபை. ஆரம்ப காலத்தில் இந்த சேவையை இலவசமாக கொடுத்தது அந்நிறுவனம். இதனால் சிறிது சிறிதாக பயணாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஒரு கோடி பயனாளர்கள் ஸ்பாட்டிஃபையில் கணக்கைத் துவங்கினர். இருந்தும் யூடியூப் அதற்கு பெரும் சவாலாக இருந்தது.
2010 ஆம் ஆண்டிற்கு மேல் ‘பாட்காஸ்ட்’ என்னும் வலையொலி புதிய வடிவம் எடுத்தது. இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு அமைதியான அறையில் அமர்ந்து ஏதோ ஒரு விஷயதைப் பற்றி ஆழமாக விவரித்துப் பேசுவர். ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இது மிகவும் வைரல் ஆனது. வேலைக்கு செல்லும் பயண நேரத்திலும், உறங்குவதற்கு முன்பும் இந்த பாட்காஸ்டை கேட்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
ஸ்பாட்டிஃபை நிறுவனம் இந்த பாட்காஸ்ட் வகை கிரியேடிவிட்டியை கெட்டியாக பிடித்துக்கொண்டது. ஒருவர் இணையத்தில் அல்லது யூடியூபில் பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், பாட்காஸ்ட் கேட்க ஸ்பாட்டிஃபை வரவேண்டும் என்ற நிலை வந்தது. அதற்கேற்றவாறு ஸ்பாட்டிஃபை நிறுவனம் பல நல்ல நபர்களை தேர்வுசெய்து பணம் கொடுத்து பாட்காஸ்ட் செய்ய வைத்தது. அதன் விளைவாக, இன்றைய சூழலில் ஸ்பாட்டிஃபை செயலில் சுமார் 55 கோடி நபர்கள் பயனாளர்களாக இருக்கிறார்கள். மேலும் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு பயனாளர்களுக்கு பிடித்தமான பாடல்களை, அவர்களின் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ஒலிக்கச் செய்தது. இது பயனாளர்களை பெருமளவில் தக்கவைத்தது.
ரெவின்யூவிற்கு ஆடியோ வடிவ விளம்பரங்களை பயன்படுத்தியது. பாடல்களுக்கு நடுவில் இருபது முப்பது வினாடிகள் விளம்பரத்தை செருகியது. அதேநேரம், விளம்பர இடையூறுகளை விரும்பாத பயனாளர்களுக்கு மாத அடிப்படையில் சந்தா செலுத்தும் வசதியையும் உருவாக்கியது.
தற்போது 20 கோடி பேர் சந்தா செலுத்தும் பயனாளர்களாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்நிறுவனதிற்கு போட்டியாக இருக்கும் அமேசான் தற்போது அதன் சந்தா விலையை உயர்தியுள்ளது. இதனால் ஸ்பாட்டிஃபை முதலீட்டாளர்களும் அந்நிறுவன சந்தாவையும் ஏற்றுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நிறுவனம் தற்போது விலைப்பட்டியலை சற்று உயர்த்தியுள்ளது.
இரண்டு, மூன்று விளம்பரம் போட்டாலும் பரவாயில்லை என்று சொல்பவர்களுக்கு எந்த ஒரு அதிர்ச்சியும் தகவலும் இல்லை, தொடர்ந்து கேட்கலாம் பாட்டு, ஸ்பாட்டிஃபை.