தென்கொரியாவில் தடை செய்யப்படும் நாய் இறைச்சி உற்பத்தி! பல நூற்றாண்டு பழக்கத்திற்கு கொரியாவில் எதிர்ப்பு!!

செய்தி சுருக்கம்:
தென் கொரியாவில் நாய் இறைச்சி நுகர்வு என்பது பல நூற்றாண்டுகள் பழமையான நடைமுறை. இந்த உணவுப் பழக்கம் வெளிப்படையாக தடை செய்யப்படவில்லை என்பதோடு இதுநாள் வரை சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. அந்த அரசாங்கம் இப்பொழுது இந்த உணவுப் பழக்கத்தை தடை செய்யும் முயற்சியில் இருக்கிறது.
விசித்திரமான உணவுப் பழக்கங்கள்!
சீனர்கள் புச்சி புழுக்களை உண்பதற்கு காரணமாக அவர்கள் கடந்துவந்த கடுமையான வறட்சியைக் கூறுவார்கள். அதேபோல ஒவ்வொரு நாட்டிற்கும் புதிரான உணவுப் பழக்கங்கள் உள்ளன. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அத்தகைய உணவுப் பழக்கங்கள் சிலநேரம் குமட்டலையும் உண்டாக்க வல்லன.
அதிலும் தாங்கள் வளர்க்கும் நாயை தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதும் நம்மவர்கள் அத்தகைய நாய்களை ஒரு நாட்டினர் கறிசமைத்து உண்பதை எப்படி ஏற்றுக்கொள்வர்..? இருப்பினும் தென் கொரியாவில் நாய் இறைச்சி என்பது நமது ஊர் கோழி ஆட்டிறைச்சி போன்ற ஒன்றுதான். அதைத்தான் இப்போது சர்வதேச அமைப்புகள் மற்றும் உள்ளூர் விலங்கு ஆர்வலர்கள் காரணமாக தடை செய்ய இருக்கின்றனர்.
நாய் இறைச்சியும் தென் கொரியாவும்!
நாய் இறைச்சி நுகர்வு என்பது கொரிய தீபகற்பத்தில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் பழமையான நடைமுறையாகும். இது தென் கொரியாவில் வெளிப்படையாக தடைசெய்யப்படவில்லை, ஆனால் அதிகமான மக்கள் இந்த உணவுப் பழக்கத்தைத் தடை செய்ய விரும்புகிறார்கள்.
தென் கொரியாவின் இந்த உணவுப் பழக்கம் சர்வதேச அரங்குகளில் கேள்விக்குள்ளாவது மற்றும் விலங்குகளின் உரிமைகள் பற்றிய பொது விழிப்புணர்வு அம்மக்களிடையே அதிகரித்து வருவது இதற்கு காரணமாக அமைகிறது.
நாய் இறைச்யின் வீழ்ச்சி!!
அந்நாட்டின் முதல் குடிமகள் இந்த நாய் இறைச்சி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், இரண்டு சட்டமியற்றுபவர்கள் இதற்கான மசோதாவை சமர்பித்திருக்கின்றார்கள்.
எதிர்கட்சியைச் சேர்ந்த சட்டமியற்றுபவர் ஒருவர் கூறுகையில், ‘அயல்நாட்டினர் தென்கொரியாவை ஒரு கலாச்சார மையமாக காண்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்நாட்டில் காணப்படும் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்தைக் கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்” என்றார்.
நாய் இறைச்சி உற்பத்தித் தொழில் நிலை என்ன?
இத்தனை நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் இருக்கையில் அது ஒரு தொழிலாக வேரூன்றி இருக்குமல்லவா!? விவசாயிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் நாய் இறைச்சி தொழிலில் ஈடுபட்டுள்ள பிறர் எதிர்ப்பு தெரிவித்ததால், நாய் இறைச்சிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் தெளிவாக இல்லை.
தென் கொரியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அத்தகைய தடையை எதிர்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் பெரும்பாலான மக்கள் நாய் இறைச்சியை இனி சாப்பிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
தென் கொரியா முழுவதிலும் உள்ள பண்ணைகளின் எண்ணிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து சுமார் 3,000 முதல் 4,000 வரை பாதியாகக் குறைந்துள்ளது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700,000 முதல் ஒரு மில்லியன் நாய்கள் படுகொலை செய்யப்படுகின்றன. இது 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு பல மில்லியனிலிருந்து குறைந்துள்ளது என்று நாய் வளர்ப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
சில ஆர்வலர்கள் விவசாயிகளின் மதிப்பீடுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று வாதிடுகின்றனர், இது அவர்களின் தொழில்துறையை அழிக்க முடியாத அளவுக்கு பெரியது என்பதைக் காட்டுகிறது.
நாய் இறைச்சி எதிர்ப்பு எப்போது தொடங்கியது?
2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தென் கொரியா, செல்லப்பிராணிகளை விரும்புபவரான அப்போதைய ஜனாதிபதி மூன் ஜே-இன் பரிந்துரையின் பேரில் நாய் இறைச்சியை சட்டவிரோதமாக்குவதைக் கருத்தில் கொள்ள ஒரு குழுவைத் தொடங்கியது. விவசாயிகள் மற்றும் விலங்குகள் உரிமை ஆர்வலர்களை உள்ளடக்கிய இந்த குழு, 20 முறைக்கு மேல் கூடி எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை என்பதே உண்மை.
கடந்த ஏப்ரல் மாதம், தற்போதைய ஜனாதிபதி யூன் சுக்-யோலின் மனைவியான முதல் பெண்மணி கிம் கியோன்-ஹீ, மிருக ஆர்வலர்களுடனான சந்திப்பில், நாய் இறைச்சி நுகர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறினார்.
தாங்கள் இறக்கும் வரை இருக்கட்டும் நாய் இறைச்சி!!
நாய் வளர்ப்பு பண்ணைகளை மூட ஒப்புக் கொள்ளும் விவசாயிகளுக்கு தனது மசோதா ஆதரவு திட்டங்களை வழங்குகிறது என்று ஹான் கூறினார். அவர்களின் வசதிகள், தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு உதவி மற்றும் இதர சலுகைகளை அடைய பணம் பெற உரிமை உண்டு, என்றார்.
ஆனால், விவசாயிகள் சங்கத்தின் அதிகாரி ஜு யோங்பாங் கூறுகையில், இறைச்சி நாய் வளர்ப்பவர்கள் அதிகமும் வயதானவர்கள். அவர்கள் இறக்கும் வரை சுமார் 20 ஆண்டுகள் இந்த உணவுப் பழக்கம் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் இறந்தவுடன் இயற்கையாகவே தொழில் மறைந்துவிடும் என்றார்.
அரசு எட்ட வேண்டிய முடிவு என்ன?
இத்தனை காலமாக நடைமுறையில் இருந்து வந்த ஒரு உணவுப் பழக்கம், அது சர்வதேச அரங்கில் எத்தகையதாக பார்க்கப்பட்டாலும் – அந்த உணவுப் பழக்கத்தைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களையும் சேர்த்தே வளர்த்து வந்திருக்கும்.
சட்டென்று ஒரு கொள்கை முடிவை எட்டுவதன் மூலம் அந்த தொழிலை அழிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. இருப்பில் இருக்கும் நாய்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தல் மற்றும் குறிப்பிட்ட சுற்று வட்டத்திற்குள் இருக்கும் நாய் வளர்ப்பு பண்ணைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் என்ற மிதமான நடவடிக்கையே இதற்கு தீர்வாக அமையும்.
இந்த உணவுப் பழக்கத்தை மாற்றுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் இந்த இறைச்சிக்கான தேவையை சந்தையில் குறைக்கலாம். இதன் மூலம் இந்த தொழில் மெல்ல மறைய வாய்ப்புள்ளது. நாய்கள் கண்டிப்பாக போற்றிப் பாதுகாத்து கொஞ்சி வளர்க்கப்பட வேண்டியவைதான். சந்தேகமில்லை. ஆனால், மனிதர்கள் அதைவிட முக்கியமாயிற்றே!!