Sophisticated Meaning in Tamil

உங்கள் நண்பர் வட்டாரத்தில் சிலர் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய அறிவுமுழுவதும் பழையதாக இருக்கும். அதாவது, இதற்குமுன் உலகத்தில் என்ன நடந்தது என்பதைமட்டும்தான் அறிந்துகொண்டிருப்பார்கள், இப்போது என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குச் சிறிதும் தெரியாது. பழைய அறிவின் அடிப்படையில்தான் அவர்கள் செயல்படுவார்கள்.
இன்னும் சிலர் மாறிவரும் உலகத்தில் என்னவெல்லாம் புதிது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். புதிதாக வந்துள்ள படங்கள் என்ன, மக்கள் விரும்பிக் கேட்டு மகிழ்கிற பாடல்கள் எவை, எந்த ஊருக்கு எப்போது செல்லலாம், என்னென்ன பார்க்கலாம், இணையத்தில் பொருட்களை மலிவாக வாங்குவதற்கு என்ன வழி, எப்படி உடுத்தினால் மக்களிடையில் நல்ல பெயர் கிடைக்கும் என்று எல்லாவற்றையும் நீங்கள் இவர்களிடம் கேட்கலாம். இவர்களுடைய வழிமுறைகளின்படி நடந்தால்கூட நமக்கு மிகச் சிறந்த நன்மைகள் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட நண்பர்களைப்பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
சொஃபிஸ்டிகேட்டட்
ஆங்கிலத்தில் சொஃபிஸ்டிகேஷன் என்ற சொல்லுக்கான விளக்கம் “உலகத்தை மிக நன்கு அறிந்துவைத்திருப்பது, ஃபேஷன், பண்பாட்டை அறிந்திருப்பது.” இதன்படி நடக்கிறவர்களைத்தான் நாம் சொஃபிஸ்டிகேட்டட் என்று அழைக்கிறோம்.
ஆனால், சில இயந்திரங்கள், கருவிகளையும் சொஃபிஸ்டிகேட்டட் என்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘நாங்கள் சொஃபிஸ்டிகேட்டட் இயந்திரத்தைப் பயன்படுத்தி எங்களுடைய பொருட்களை உருவாக்குகிறோம்’ என்று ஒரு நிறுவனம் சொன்னால் அதற்கு என்ன பொருள்?
இங்கு சொஃபிஸ்டிகேஷன் என்ற சொல் சிக்கலானது என்ற பொருளைத் தருகிறது. நான்கும் மூன்றும் ஏழு என்று கணக்குப் போடுவதற்குக் கால்குலேட்டர் போதும். ஆனால், ஒரு லட்ச ரூபாயை ஏழு சதவிகித வட்டிக்கு எட்டு ஆண்டுகள் முதலீடு செய்து, அந்த எட்டு ஆண்டுகளில் சராசரிப் பணவீக்கம் ஐந்து சதவிகிதமாக இருந்தால் எட்டாவது ஆண்டிம் நிறைவில் கிடைக்கும் பணத்துக்கு என்ன மதிப்பு என்று கணக்குப் போடுவதற்கு ஒரு சொஃபிஸ்டிகேட்டட் கருவி (அதாவது, கணினி) தேவைப்படுகிறது.
தமிழில்சொஃபிஸ்டிகேட்டட்
நம்மிடையில் சொஃபிஸ்டிகேட்டடாக இருக்கும் மக்களைத் தமிழில் எப்படி அழைக்கலாம் என்று சிந்தித்தால், அதற்கு ஒரு நல்ல சொல் இருக்கிறது: உலகியல் அறிந்தவர்கள். அதாவது, உலகத்தின் இயல்பை அறிந்துவைத்திருக்கிறவர்கள், அதன்படி செயல்படுகிறவர்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு விழாவுக்குச் செல்லவேண்டுமென்றால் அதற்கு எப்படி உடுத்துவது? அது திருமண விழாவாக இருந்தால் வேறுவிதமான உடை, அதிலும் தென்னிந்தியத் திருமணம் என்றால் வேறு, வட இந்தியத் திருமணம் என்றால் வேறு. மாறாக, அது ஒரு நிறுவன விழாவாக இருந்தால், அல்லது, ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறுகிற விழாவாக இருந்தால், அலுவலர்கள், பெரிய தலைவர்கள் கலந்துகொள்கிற விழாவாக இருந்தால் முற்றிலும் வேறுவிதமான உடை தேவைப்படும். இவையெல்லாம் உலகியல் அம்சங்கள், இவற்றை அறிந்துவைத்திருப்பவர்கள்தான் சொஃபிஸ்டிகேட்டட் நபர்கள்.
நாம்சொஃபிஸ்டிகேட்டட்ஆவதுஎப்படி?
உலகியலை அறிந்துகொள்ளவேண்டுமென்றால், உலகைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். யார் என்ன செய்கிறார்கள், அதில் எது ஏற்கப்படுகிறது, எது மறுக்கப்படுகிறது, எதற்கு வரவேற்பு பெருகிவருகிறது, எதை மக்கள் முன்பைவிடக் குறைவாகச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்து அந்த இணைப்புகளை மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால், பின்னர் அதுபோன்ற ஒரு கேள்வி எழும்போது இந்த அனுபவத்தைப் பயன்படுத்திச் சரியான பதிலைச் சொல்லலாம்.
அந்தவிதத்தில், சொஃபிஸ்டிகேட்டட் மக்கள் உலகியலை எல்லாருக்கும் பரப்புகிறார்கள், அவர்களையும் சொஃபிஸ்டிகேட்டடாக ஆக்க முயல்கிறார்கள், அதன்மூலம் சமூகத்தில் அவர்களுக்கு ஒரு தனித்துவமான இடம் கிடைக்கிறது.