சோஷியல் மீடியா மயக்கத்தில் இந்தியா – முளைக்கும் திடீர் பிரபலங்கள்

செய்தி சுருக்கம்:
சமூக ஊடகத்தின் மீதான ஈர்ப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் யூடியூப்பை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். 46 கோடியே 70 லட்சம் இந்தியர்கள் யூடியூப் தளத்தை பயன்படுத்துகிறார்கள். உலக அளவில் தனி படைப்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 18 சதவீதம் உயரும் நிலையில் இந்தியாவில் அது 115 சதவீதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சமூக ஊடகதளங்களில் பங்களிப்பவர்களின் எண்ணிக்கையும், அவற்றை பார்த்து ரசிப்பவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்தியாவில் சராசரியாக ஒருவர் ஐந்து சமூக வலைத்தள கணக்குகளை வைத்திருப்பதும், நாளொன்றில் கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்தை சமூக ஊடகத்தில் செலவிடுவதும் 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலக அளவில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் சராசரி 7.4 ஆகும். ஆனால் இந்தியாவில் இந்த சராசரி 8.7 ஆக உள்ளது. 15 முதல் 35 வயது வரையிலானவர்கள் யூடியூப்பை அதிகம் பார்ப்பதாகவும், நிமிடம்தோறும் யூடியூப்பில் 500 மணி கால அளவுக்கான பதிவுகள் பதிவேற்றப்படுவதாகவும் 2021 ஆண்டின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
பின்னணி:
இந்தியாவில் சமூக ஊடகத்தில் ஃபேமிலி விலாக்கர்ஸ் வகை படைப்பாளர்களே பெரிதும் பிரபலமாக இருக்கிறார்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் மக்களுக்கு அதிகமாக இருப்பதால், தங்கள் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கிறவர்கள் விரைவில் புகழ்பெறுகிறார்கள்.
பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும்வண்ணம் நீளமான வீடியோக்களை எடுத்து, குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்தால் வெற்றி கிடைக்கிறது. அந்தந்த தருணத்திற்கு ஏற்றவண்ணம் தலைப்புகளை இடுவதும் மக்களை ஈர்க்கிறது.
ஆர்வத்தை தூண்டும் குடும்ப சண்டை
இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்த ஒரு பெண் டிஜிட்டல் படைப்பாளராக இருக்கிறார். அவரது யூடியூப் தளத்திற்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைப்பர்கள் இருக்கிறார்கள். அந்தப் பெண் ஒருநாள் தன் கணவரின் மேசை இழுப்பறையில் ஒரு சிகரெட் பெட்டியை கண்டுபிடிக்கிறார். அவ்வளவுதான்! வீடே ரணகளமாகிறது. அவரது கணவர் மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணோ மாமியாரை நோக்கி, கைகளை ஆட்டி ஆக்ரோஷமாக பேசுகிறார். கணவரோ, அவரின் தாயாரோ ஒரு வார்த்தையும் பேசவில்லை.
அந்தப் பெண் தன் கணவரை கடுமையாக மிரட்டுகிறார். இப்போது கணவரும் பதிலுக்கு பேச ஆரம்பிக்கிறார். வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டும்போது, அந்தப் பெண் காட்சியை படம் பிடித்துக்கொண்டிருக்கிற காமிராவை நோக்கி ஓடி, காமிராவின் லென்ஸை மூடுகிறார். இந்த வீடியோ பதிவை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள்.
அன்றாட அலுவல்கள் என்னும் அவல காட்சிகள்
இன்னொரு பெண், வீடியோவில் தன் முகத்தை மறைத்துக்கொள்கிறார். டெல்லி மெட்ரோ ரயிலில் இது நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் தன் நீண்ட சடையை ஹேர் ஸ்ட்ரைட்னர் கொண்டு வாருகிறார். அந்த ஹேர் ஸ்டிரைட்னருக்கு மெட்ரோ ரயிலில் மின்னிணைப்பு கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவையும் எட்டு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
கொடூர ரசனை
பெரும்பாலும் மக்களின் மனநிலையில் அவலத்தை வெளிக்காட்டுவதாகவே பார்வையாளர்களின் செயல்பாடு அமைகிறது. 2023 ஜூன் மாதம் இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள மதுராவில் நடந்த ஒரு சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் 26 வயது இளம்பெண், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்வது பதிவாகியுள்ளது. இதை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்பேர் பார்த்திருக்கிறார்கள். இதுபோன்ற பேரதிர்ச்சி தரும் காட்சிகளையும் பார்க்க விரும்புவோர் உள்ளனர்.
நம்மில் ஒருவர்
சமூக ஊடக படைப்பாளர்கள், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடப்பவற்றையே படைப்புகளாக காட்டுகிறார்கள். அவர்கள் நம்மைப் போன்றவர்கள்; அவர்களுக்கும் வாழ்க்கையில் கடமைகள், பொறுப்புகள், உறவுச் சிக்கல்கள் இருக்கின்றன. இதுபோன்ற சாதாரண மக்கள் படைப்புகளை வைக்கும்போது, அதைப் பார்க்கிறவர்கள் தங்கள் அனுபவத்தோடு ஒப்பிடுகிறார்கள் என்று வலைத்தள ரசிகர் ஒருவர் கூறுகிறார்.
இளமையில் புகழ்
யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் ஒரு குடும்பத்தினர், தங்கள் பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு ஒரு பத்திரிகையாளரிடம் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். தந்தையும் தாயும் மகன், மகள் என்று இரண்டு பிள்ளைகளும் பிரபலங்கள் அந்தஸ்தை அடைந்துவிட்டனர். “நாங்கள் ஓரிரவிலே பிரபலங்களாகிவிட்டோம். சாதாரணமானதான எங்கள் குடும்பம் இவ்வளவு புகழடையும் என்று நாங்கன் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. எங்கள் பிள்ளைகள் ஸ்பான்சர் பதிவுகள், விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார்கள். குடும்ப வருமானத்தில் பாதி அவர்கள் ஈட்டுவதுதான். ஆனால், அவர்கள் இன்னும் பதின்ம வயதை தாண்டவில்லை. விளம்பரங்களுக்கான ஆடைகள், பொம்மைகள், புத்தகங்கள் எல்லாம் கூட கூடுதல் அன்பளிப்பாகவே எங்களுக்குக் கிடைக்கின்றன,” என்று கூறியுள்ளார்.
சிறுபிள்ளைகளும் இன்ஃப்ளூயன்சர்களாக அதிகம் வருமானம் ஈட்டுகிறார்கள். 15 வயது சிறுமியின் யூடியூப் கிட் கணக்கிற்கு 1.6 சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். கிட் விலாக்கர்களின் மதிப்பு தற்போது 900 கோடி ரூபாயாக உள்ளது. 2025ம் ஆண்டு இது 2,200 கோடியாக உயரும் என்று கணிக்கப்படுகிறது. 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி யூடியூப் கிட் செயலிதான்.
மில்லேனியல்ஸ் எனப்படும் 1981க்கு பிறகு பிறந்தவர்களிலும் 1990க்கு பிறகு பிறந்த ஜென் இசட் இளைஞர்களிலும் 72 சதவீதத்தினர் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களை பின்தொடருகிறார்கள். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் இரண்டும் சேர்ந்து இந்தியாவில் சந்தை பங்கில் 56 சதவீதத்தைப் பெற்றிருக்கின்றன. 2028ம் ஆண்டில் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் 84.89 பில்லியன் டாலர் மதிப்புக்கு உயரும் என்று கருதப்படுகிறது.