fbpx
LOADING

Type to search

உலகம் சிறப்புக் கட்டுரைகள் தெரிவு பல்பொருள்

திசை மாற்றும் சமூக வலைத்தளங்கள்

social media

ஊருக்கு போகணுமா?கார் வாடகைக்கு வேணுமா?டேட்டிங் போகணுமா? ஹோட்டல் வேணுமா, அங்க சாப்பாடு வாங்கணுமா ஆப் இருக்கு.  கல்யாணத்துக்கு மாப்பிளை பொண்ணு பார்க்கணுமா? கல்யாணத்த ஊர் முழுக்க லைவா காட்டணுமா? ஹனிமூன் போக ட்ரிப் புக் பண்ண ஆப் இருக்கு.பத்து நிமிடத்தில் எவனையும் கெஞ்சாமல் பணம் வேணுமா?ஆப் இருக்கு.விளையாட ஆப் இருக்கு ஆனா அது பின்னாடி ஆப்பும் வைக்கும் தெரிஞ்சும் அதை பயன்படுத்தனும். நெனச்ச நேரம் நெனச்ச இடத்தில் படம் பார்க்கணுமா, ஷாப்பிங் பண்ணனுமா எல்லாத்துக்கும் ஆப் இருக்கு. அட நெஞ்சுக்குள்ள ரகசியமா தேங்கியிருக்கிற வக்கிரத்தை  கொட்ட கூட ஆப் இருக்குங்குறேன். எல்லாத்துக்கும் தளம் இருக்கு அதற்கென சுதந்திரமும் எக்கசக்கமா  இருக்கு.  சமூகவலைத்தளங்களுக்கு பின் போகும் சமுதாயத்தை பற்றி நாம் பேசியே தீரவேண்டும். 

தகவல் தொழில்நுட்பம் வரமா? சாபமா? தெரியல.

உலகம் சுருங்கி கைக்கு வந்துவிட்டது வரமென்றாலும் மனிதமும் மனித நேயமும் தொலைதூர சென்றுவிட்டது என்பதை சாபமென்றே  சொல்லலாம். எதையுமே லைக்ஸ், கமெண்ட்ஸில்  அளக்கும் யுகத்தில் பொருள், பேர் சம்பாதித்து  சுயத்தை  ரொம்ப சுலபமாக  இழக்குறோம். பெங்களூர்,சென்னை,மும்பை போன்ற ஊர்களில் எந்த தெருவில் போய் நின்று கல்லெறிஞ்சாலும் அது தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்க்கும் ஆள் மீது விழுவதற்கு நூற்றுக்கு தொன்னூறு  சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறதென்றால் மீதி பத்து சதவிகிதம் சமூக வலைத்தளங்களை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் மீது விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சமூகவலைத்தளம் எனும் கிணற்றுக்குள் ஊறுகாய் முதல் வைரம் வரை விற்கலாம், பொருள் இல்லையா கருத்தை விற்கலாம், கருத்தும் இல்லையா உணர்வுகளை கூட விற்கலாம். எதுவும் இல்லையா எல்லாவற்றிர்கும் உங்கள் இருப்பை காட்டிக்கொண்டால் போதும் அதுகூட விலைபோகும். சாரிசாரியாக ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் சமூகவலைத்தளம் உபயோகபடுத்துகிறார் என்கிறது புள்ளிவிவரம். இதில் சமூகவலைத்தளம் வர்த்தகத்திற்கான தளமாக மாறாமல் இருக்குமா என்ன?

செல்ல முடியாத நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை தெரிந்துகொள்ள முடிகிறது.நல்ல கலை வடிவங்கள், படைப்புக்கள், புத்தகங்களை இருந்த இடத்தில் இருந்தே பார்க்க படிக்க முடிகிறது.இணைய வழியில் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்க முடிகிறது. தேவையான தகவல்களை தேடவும் முடிகிறது.அசாதாரணமான காலகட்டங்களில் வீட்டில் இருந்தே வேலை பார்க்கவும் முடிகிறது.

உலகமெங்கும் நடைபெறும் வன்முறைகள் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் முடிகிறது. அது போல பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான உதவிகளும்  வாய்ப்புகளும்  கிடைக்கவும் சமூக வலைத்தளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றது. 

பாதகங்களை பட்டியலிட்டு பார்த்து ஆறுதல் அடைந்துகொள்வதா? இல்லை இந்த அழகியலை எல்லாம்  களைந்து உண்மை நிலையை  காணுவதா?

கடிதம், டெலிகிராம் காலத்தில் கூட மனிதர்களுக்குள் இணக்கம் எப்படி இருந்ததோ தெரியவில்லை.கடல் கடந்து, தேசம் கடந்து எல்லைகள் கடந்த மனிதம் என்ற உணர்வில் பல நண்பர்களை உருவாக்குகிறேன் பேர்வழியென உண்மையில் ஒரே வீட்டில் வாழ்பவர்கள் கூட உறவுகளிடையே பேசமுடியாத ஒரு தூரத்தை சமூகவலைத்தளம்  உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.  

 இதில் புள்ளிவிவரங்கள்  உலகளவில் சமூக ஊடக பயனாளர்கள் எண்ணிக்கை 4.9 பில்லியன் மக்களாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை 2027க்குள் சுமார் 5.85 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல் கொடுக்கிறது. உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் நிஜத்தில் வாழ்வதை விட கற்பனையில்  ஓர் பிம்பத்தை கட்டமைத்து வாழ பழகிவிட்டோம் என்றே தோன்றுகிறது.

 சமூக ஊடங்கங்கள்  பலரை தற்பெருமை மிக்கவர்களாக உருவாக்குகின்றது என்கிறது பப்மெட் ஆராய்ச்சி ஆய்வறிக்கை. தங்களின் இயல்பான வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை , புகைப்படம் , குறும்படம் மூலம் பகிர்ந்துக்கொள்ளுதல் என்பது ஏற்றுகொள்ளகூடியதாக இருந்தாலும், அதைவிட அதிகமாக தன் நிலைமைக்கும்  மீறிய ஒன்றை காண்பிக்கும் வகையிலேயே சமூக ஊடங்களில்  தகவல்கள் பதியப்படுகின்றது. இப்படி தற்பெருமை பேசுவதும், நான் ஒரு படி மேலே என்று காட்டிக்கொள்வது முகபுத்தகம், இன்ஸ்டாகிராம் ட்விட்டரில் மட்டுமில்லை லிங்க்டின்னிலும் அதிகமாக உள்ளது. தொழில்முறை அடையாளத்தை பலப்படுத்திக்கொள்ள தற்பெருமை ஒன்றே  வழியாக இருக்கும் பட்சத்தில் போதாமை என்ற உணர்வில் சிக்கித்தவிக்கிறது பெரும் கூட்டம் இங்கே.

 சமூக ஊடகங்களில்  உங்களை சங்கடமாக்கும் விஷயம் என்னவென்று கேட்டதற்கு லிங்க்டின் சிலநேரம் காழ்புணர்ச்சியை தூண்டுகிற தளமாக செயல்படுகிறது என்றும் ட்விட்டர் ஆரோக்கியமற்ற குழுவாதம்  ஊக்குவிக்கிறது, முகத்தை காட்டாமல், அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒருவரை திட்டி அசிங்கப்படுத்தி அவர் தனிப்பட்ட விவரங்களை, குடும்ப நபர்களின் புகைபடங்களை  வெளியிட்டு  மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதே இப்போதைய ட்ரெண்டாக இருக்கிறது. ஒழுக்கம் என்பது இன்டர்நெட் வாழ்க்கைக்கு இல்லை. இங்கே யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் , யாரையும் யாரும் கேட்க முடியாதென தைரியத்தில் முகபுத்திகமும் ட்விட்டரும் எல்லையே இல்லாத   “வெர்பல் அபியுஸ்”க்கு தளமாக இருக்கிறது பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீலகண்டன், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர் “இந்த ரீலிஸ் ஷார்ட்ஸ்ல எல்லாம் நாய் பூனை செய்ற சேட்டை வீடியோ போடுவாங்கல்ல அதுல சிலர் நாய கஸ்டமான ஸ்டண்ட் செய்ய வைப்பாங்க. வீடியோ பார்க்கும் போதே அந்த நாய அவங்க கஷ்டப்படுத்துறாங்க நல்லா தெரியும். பாவமா இருக்கும். அப்போ இதுக்குலாம் காசு வருதுன்னுதான இப்படியெல்லாம் செய்றாங்க என்ன ஜென்மங்கடான்னு கோவம் வரும் ” மிருகவதை சட்டம் இதெல்லாம் கவனிக்காதா என்ன?

 2022ல் சராசரியாக இந்தியாவில் சுமார் 470.1 மில்லியன் செயல்பாட்டில் இருக்கும் பயனாளர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திருந்திக்கின்றனர்.  இது மொத்த மக்கள் தொகையில் 33.4% ஆகும். புதிய அக்கௌன்ட் திறப்பது 4.2% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் உள்ளது . 

 ‘பிபிசி தனிமைச் சோதனை’ (BBC Loneliness Experiment) ஆய்வில் சுமார் 55,000 பேர் பங்கேற்றனர். இதில் 16 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்ட 40 சதவீதம் பேர் தனிமையை அதிகமாக உணர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். வைஃபை காலத்து  இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தைச் சமூக ஊடகங்களில்தான் கழிக்கிறார்கள். இந்தப் பழக்கம் அவர்கள் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

லாக்டௌன் காலத்தில் ஆன்லைன் க்ளாஸ் போக போன் வாங்கிக்கொண்டு லுடோ, ரம்மி போன்ற விளையாட்டில் பந்தயம் வைத்து விளையாடி பணத்தை இழந்த பதின்ம வயதினர் அதிகம்.  

ஃப்ரீ பயர்,கிளாஷ் ஆப் க்ளான்ஸ், பி.ஜி.எம்.ஐ போன்ற விளையாட்டில் ட்ரிக்ஸ் சொல்லி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறார் இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர். உண்மையான பெயர் கூட சொல்லாமல் வெறும் நான்கைந்து ரீலிஸ் காட்டி ஒவ்வொருவரிடமும் ஐநூறு முதல் ஆயிரம் வரை வாங்கியிருக்கிறார்.இவரிடம் பல கல்லூரி பள்ளிக்கு செல்லும் பதின்ம வயதினர் ஏமாந்திருக்கின்றனர். 

 ட்விட்டர்,பேஸ்புக்கில் காதலென ஏமாற்றிவிட்டான்/ள் எனவும் சிலர் நட்பென உதவி பெற்று ஏமாற்றிவிட்டாரென அம்பலப்படுத்தும்போது மனித உறவுகளுக்கு விலை என்ன என்று கேள்விதான் எழுகிறது? காதலுக்கு வெறும் நான்கு கவிதைகளும், சில லைக்குகளுமே போதுமானதா? காதலென ஏமாற்றம் கூட விட்டுவிடலாம், காமத்தை விலைபேசி ஏமாறுபவர்களை என்ன சொல்வது?இயந்திர வாழ்க்கையில்  மனிதநேயம் என்பதே கடுகளவுதான். இந்த கடுகளவு மனித நேயத்தையும் கருணையையும் கூட ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முழுக்க களவாடுவதற்கே கும்பல்கள் அலைகிறது.

  ராயல் சொசைட்டி ஃபார் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வில், இங்கிலாந்தில் உள்ள 14-24 வயதுடையவர்கள் மத்தியில் ஸ்னாப்சாட், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது அவர்கள் சுயமரியாதையை குலைக்கிறது என்று தெரிவிக்கிறது. லைக்ஸ் பிறரின் கமெண்ட் போன்றவை அவர்களை அங்கீகரிக்கும் விஷயமாக பார்ப்பதால் சீக்கிரமாக மனஉலைச்சலுக்கு ஆளாகின்றனர். எதிலும் அழகியல், நிறைவான பிம்பமென பார்த்து அவர்களின் உடல் அமைப்பு பற்றி பாதுகாப்பின்மையை சுலபமாக வளர்த்துக்கொள்கின்றனர். பதினாறு பதினேழு வயதில் பிளாஸ்டிக் சர்ஜெரியும், ஹார்மோன் ஊசிகளும் பயன்படுத்த முன்னெடுத்து வருகிறார்கள் என்று பகிர் உண்மைகளை பகிர்கிறார் ஹார்வர்ட்  மெடிக்கல் ஸ்கூலில் ஆய்வாளராக பணிபுரியும்  டாக்டர். கேத்தரின் ஸ்டெய்னர்-அடேர்.

 இந்தியாவில் பேஸ்புக்கின் ஆட்சி 2023 வரை தொடர்ந்துகொண்டிருந்தாலும் ,இப்போது 2.5 மில்லியன் மாதாந்திர பயனர்களுடன் யூடியூப் சூடுபிடித்துள்ளது.

இந்தியாவில், 2022 தரவுகளின்படி,மிகப்பெரிய பயனர் தளத்துடன் கூடிய சமூக ஊடக தளமாக WhatsApp உள்ளது. AXIS My India ஆல் நடத்தப்பட்ட சமீபத்திய நுகர்வோர் உணர்வுக் கணக்கெடுப்பில், 35% பயனர்கள் ஃபேஸ்புக்கைத் தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சமூக ஊடகத்தளமாகக் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

 சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கிக் கொண்டிருக்கிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன. சமூகவலைத்தளம் வாழக்கை தரத்தை உயர்த்தியிருக்கிறதா என்ற கேள்விக்கு  பலர் சித்தாந்தந்தங்களில் மாற்றம் வந்திருக்கிறது, உலகத்தை பார்க்கும் பார்வை விரிந்திருக்கிறது என தெரிவித்தனர். 

ரம்யா, ரம்யம் சோப் ஆயில் என்று இன்ஸ்டாக்ராம், ட்விட்டர் போன்ற தளங்களில் விற்பவர் “வரம்பு மீறிய கிண்டல் கேலி, அதை கடக்க பழகிக்கொண்டால் இங்கே நிம்மதியாக இருக்கலாம். சிலர் பொண்ணுன்னு சலுகை கிடைக்குது, சோப்பு மட்டும் வித்துட்டு போ கருத்தெல்லாம் சொல்லாதன்னெல்லாம் சொல்லி இருக்காங்க. தந்திரமா என் பிஸ்னஸ்க்கு இந்த தளத்தை உபயோகபடுத்திக்கிறேன் சொல்வாங்க. சிலர் என் பிஸ்னஸ் இன்னும் எப்படி வளர்க்கலாம் யோசனையும் குடுப்பாங்க. பிஸ்னஸ் வளர கான்டாக்ட்ஸ் வாங்கி தந்திருக்காங்க. இங்க நல்ல மனிதர்கள் நிறைய நட்பு கிடைத்திருக்கு எனக்கு” என்று அவர் குறுந்தொழில் விரிவடைய சமூக ஊடங்கங்களின் பங்களிப்பை தெரிவிக்கிறார்.

சமூக வலைதளங்களின் எதிர்மறை அம்சமென எதை சொல்வீர்களென கேட்டத்திற்கு ட்விட்டரில் பெரும்பாலானோர் வரம்பு மீறிய கிண்டல் கேலி, சிறுமை படுத்துவது, கும்பலாக சேர்ந்து  ஒருவரை தாக்குவதென மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் அளவுக்கு வெறுப்பை விதைக்கும் பண்புகளை எடுத்து சொல்கின்றனர்.

இப்போதெல்லாம் நேர்மறை விளம்பரம் காட்டிலும் எதிர்மறை விளம்பரங்களுக்கு எதிர்வினை கூடுதலாக கிடைக்கின்றது என்பதால் சமூக ஊடங்களில்  எதிர்மறை விளம்பரங்களை பகிர,அதை ட்ரெண்டில் வைக்க, சர்ச்சை, சச்சரவுகள் உருவாக்கவென தனி நெட்வர்க் உருவாக்கி பார்ட் டைம் வேலை ஆக்குகிறார்கள். டெலெக்ராம், வாட்ஸ் அப் போன்றவற்றில் இதெற்கென நிறைய குரூப்ஸ் இருக்கிறது. காசு கிடைக்கிறதென இம்மாதிரியான விஷயங்களில்  பலரும் இணைகிறார்கள்.  குறிப்பிட்ட சினிமா, தயாரிப்புகள், கட்சி, நிறுவனம் போன்றவற்றை பிரபலப்படுத்துவதே இவர்களின் வேலை.  ஒருவர் இன்னொருவருக்கு சொல்லி விளம்பரம் விரிவடையும் இந்த யுக்தி ஆதி காலம் முதல் வெற்றியடைவதால் சுலபமாக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

எனக்கு இந்த தகவல் தெரியுமென காட்டிக்கொள்வது, நான் மற்றவர் அனுபவிக்காத சுகங்களை அனுபவிக்கிறேன் என காட்டிக்கொள்வது, தன் புகைப்படத்தை தானே பகிர்ந்துகொள்வது எல்லாம் ஒருவர் அவரின் சுயமரியாதையை தேற்றிக்கொள்ள பொதுவாக சமூக ஊடகங்களில் பயன்படுத்தும் யுக்தி என்கிறார் மனநல மருத்துவர் போனி ஜுக்கர். தன் உடலமைப்பில் திருப்தியில்லாதவர்கள் அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு வரும் லைக்ஸ்ஸில் தான் அழகாக இருக்கிறோமென உறுதிப்படுத்திக்கொள்கின்றனர் என்று விளக்குகிறார் போனி ஜுக்கர். 

சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 22% இளைஞர்கள் பிடித்தமான சமூகவளைத்தை, ஒரு நாளைக்கு 10 முறையாவது திறக்கின்றனர் என்று  ஒப்புக்கொண்டுள்ளனர்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தை பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலையில்  சமூக ஊடகப் பயன்பாட்டை சரியாக வரைமுறைப்படுத்துவதன் மூலமே அடுத்து வரக்கூடிய தலைமுறைகளையும் அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பேண முடியும்.

ஒரு குடும்பத்தில் ஒரு காட்ஜெட் வாங்கும்போது அதன் பலனையும், பாதகங்களையும் சிந்தித்துப் பார்ப்பது  அந்த  குடும்பத்தின்  உடல் மற்றும் உள நலத்திற்கு பயனளிக்கும். 

சிந்தித்து செயல்படுவோம்!!

Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *