சமூக வலைதளங்களில் விழும் விட்டிலாய் வளர்கின்ற இளைய தலைமுறையினரின் மனநலனை காக்க உதவும் 30 நிமிட டெக்னிக் – புதிய ஆய்வில் வெளிவந்த உண்மைகள்.


செய்தி சுருக்கம்:
சமீபத்தில் அமெரிக்காவின் IOWA மாகாண பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடும் மாணவர்களின் மனநலன் மற்றும் நினைவுத்திறன் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் நல்ல மாற்றத்தை அடைந்துள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம் எடுக்கப்பட தரவுகள் நமக்கு பரிந்துரைப்பது என்னவென்றால், “சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு அதிலுள்ள எதிர்மறை பதிவுகளால் மனம் பாதிக்கப்பட்டு வாழும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அதேபோல சிலர் தங்கள் பதிவுகளுக்கு போதிய likes கிடைக்காத அற்ப காரணத்தால் கூட மனமுடைந்து போவதை நம் கண்முன்னே பார்க்க முடியும், உலகெங்கிலும் இந்த மாதிரியான மக்கள் உள்ளனர். எனவே யாரெல்லாம் தங்களின் சுய கட்டுப்பாடு மூலமாக சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடாமல் நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே அதற்கென நேரம் ஒதுக்கி கொள்கிறோமோ அவர்கள் பல்வேறு விதமான மன உளைச்சல்களை சந்திக்காமல் உற்சாகமான வாழ்வை வாழ முடியும்” என்பதாகும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
கடந்த ஜூலை மாதத்தில் American Psychological Association மற்றும் U.S. Surgeon General இணைந்து உலக மக்களுக்கு ஒரு திடுக்கிடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். நம் நல்வாழ்விற்கும், உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்திற்கும் நாம் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டிய வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர். இந்த எச்சரிக்கைகள் இளம் தலைமுறையினரும், பெற்றோர்களும் மற்றும் நாட்டின் சட்டங்களை இயற்றுவோரும் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்னமும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை உலக மக்களுக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளார், மேலும் இந்த ஆய்வின் பலதரப்பட்ட சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வரும் இளம் தலைமுறையினரின் சமூக வலைத்தள பயன்பாடுகளுக்கும், மருத்துவ துறையில் அதிகரித்து வருகின்ற இளம் வயதில் மனநலம் சார்ந்த செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளுக்கும் நேரடியாக சில தொடர்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது, எனவே உலக மக்கள் மற்றும் அரசு இணைந்து சமூக வலைதளங்களை உபயோகிப்பதில் உள்ள நேர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளனர்.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் IOWA மாகாண பல்கலைகழகத்தில் 230 மாணவர்களை கொண்டு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. அதில் 115 மாணவர்களுக்கு தினசரி 30 நிமிடங்கள் மட்டுமே சமூக வலைதளங்களை உபயோகிக்க அனுமதிக்கப் பட்டிருந்தது, மற்ற 115 மாணவர்களுக்கு அவர்கள் இஷ்டப்படி பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சமயங்களில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உளவியல் ரீதியான பரிசோதனைகளில் தினசரி 30 நிமிடங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் இருந்த மாணவர்களின் கவலை, மனச்சோர்வு, தனிமையான உணர்வு மற்றும் பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் குறைந்து உற்சாகமான மனநிலையுடன் இருந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேலும் இப்படி குறைவாக பயன்படுத்திய மாணவர்களின் நேர்மறை தாக்கம் உயர்ந்திருந்தது. இப்படி நேர்மறை எண்ணங்கள் அதிகமாவதின் அடையாளமாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது “அவர்கள் அனைவரும் அவர்களின் நேர்மறை வெளிப்பாடுகளை அனுவிக்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர், இதனை அவர்கள் அடிக்கடி வெளிப்படுத்தும் நேர்மறை வார்த்தைகளான Excited மற்றும் Proud ஆகியவற்றின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டோம்.” என்பதாகும். மொத்தத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் இல்லாமல் ஒரு சிறந்த மனிதனாக இருந்து நம்மை சுற்றி நடக்கும் சமூக நடவடிக்கைகளை கவனித்து வாழ்கையை நிஜமாக வாழ்வதை இவர்கள் உணர்ந்து கொண்டார்கள் என்று சொல்லலாம்.
இந்த ஆராய்ச்சியின் முதன்மை இயக்குனராக இருக்கும் கணினி-மனித தொடர்புத்துறை Ph.D மாணவி Ella Faulhaber கூறும்போது “இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் குறைந்த அளவில் சமூக வலைதளங்களை உபயோகம் செய்பவர்களின் மனநல ஆரோக்கியம் சார்ந்த முன்னேற்றங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது, இது என்னை வெகுவாக ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறிய நினைவூட்டலின் மூலம் மக்கள் தங்களின் சமூக வலைத்தள பயன்பாட்டினை குறிப்பிட்ட 30 நிமிடங்கள் என்ற அளவில் மாற்றிக்கொள்ளும் போது அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் நேர மேலாண்மை போன்ற அம்சங்கள் மிகவும் அதிசயிக்கத்தக்க அளவில் முன்னேறுகிறது என்பதை தெரிந்து கொண்டதில் நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சியின் போது சில சமயங்களில் சிலருக்கு 30 நிமிட கட்டுப்பாட்டினை தளர்த்தி அதிக நேரம் உபயோகிக்க வைத்துள்ளனர், அந்த சமயத்தில் அவர்களின் மனநலத்தில் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது “இந்த சமூகத்தில் Perfect என்ற பெயரை எடுப்பதை விட வாழ்வை மாற்றும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் குடுத்து அதற்கான செயல்களை செய்து முன்னேறுவதில் அதிக அக்கறை வைக்க வேண்டும். எனவே இந்த 30 நிமிட எல்லைக்கோடு போன்றவற்றை தாண்டி சுய கட்டுப்பாடும், வாழ்கையின் போக்கை கவனித்தலும் மிக முக்கிய விஷயங்களாக இருக்கின்றன.” என்பதாகும்.
இந்த ஆராய்ச்சியின் இணை இயக்குநர் மற்றும் உளவியல் துறை பேராசிரியரான Douglas A.Gentile இதைப்பற்றி கூறும்போது “எங்களுடைய இந்த ஆய்வின் முடிவுகள், மனித மனம் மற்றும் இயக்கவியல் துறைகளிலும் உடல்நலம் சார்ந்த துறைகளிலும் செய்யப்பட்டுள்ள வேறுசில ஆய்வுகளின் முடிவுகளோடு பெரும்பாலும் பொருந்தி வருகிறது, மேலும் நாம் நம்முடைய வாழ்வில் தினசரி எத்தனை நேரத்தை எந்தெந்த விஷயங்களில் செலவிடுகிறோம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியமாகும். அவற்றில் நம் நேரத்தை வீணாக விரயமாக்கும் விஷயங்களை கவனித்து மாற்றிக்கொண்டால் எளிதில் நம்முடைய செயல்பாடுகள் மாறிவிடும்” என்று தெரிவித்தார். மேலும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மூலமாக இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்வது நம்மை என்றுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுகளில் கலந்து கொண்ட ISU மாணவர்கள் இதைப்பற்றி கூறும்போது ஆரம்பத்தில் சில நாட்கள் இந்த அரைமணி நேர கட்டுப்பாட்டினை கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்தது, ஆனாலும் தொடர் முயற்சியால் சில நாட்களிலேயே நாங்கள் எங்கள் அதீத உற்சாகத்தை உணர்ந்தோம், மேலும் எங்களிடம் அதிகமான நேரம் கையில் உள்ளதாகவும் உணர்ந்தோம். நாங்கள் எங்களை சுற்றி நடக்கின்ற சமுதாய நடைமுறை வாழ்கையில் கவனத்தை செலுத்தி உயிர்ப்புடன் வாழத் துவங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர் இதனால் நன்றாக உறங்க முடிந்ததாகவும் இன்னும் சிலர் சக மனிதர்களுடன் வீட்டிலும் வகுப்புகளிலும் அதிக நேரத்தை செலவிட முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.
Ella மற்றும் Gentile கூறிய போது, இன்னும் வேறுசில ஆய்வுகள் இதேபோன்று சமூக வலைத்தள பயன்பாட்டின் அளவு குறைத்தல் மற்றும் தவிர்த்தல் போன்ற தரவுகளை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அவர்கள், என்னதான் இளம் தலைமுறையினர் சுய கட்டுப்பாடு முறைகளை முயற்சித்தாலும் அவர்களை மிக அருகிலிருந்து கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது, அவர்களுக்கு தேவையில்லாத App களை Uninstall செய்தல், சிறப்பான Tracking App களை பயன்படுத்தி அவர்களின் சமூக வலைதள உபயோகிப்பு நேரத்தை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அவர்களின் மணநலத்தை நம்மால் காக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் மது மற்றும் போதை பழக்கங்களில் இருந்து விடுவிக்கும் மறுவாழ்வு மையங்கள் போன்று மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் ஆரம்பத்தில் மனம் தடுமாறி கட்டுப்பாட்டை கைவிடவும் வாய்ப்புள்ளது. ஆனாலும் அதிபட்ச கண்காணிப்பு அவர்களின் சுதந்திரம் பறிபோனதாக நினைக்க வைத்துவிட கூடாது.
இந்த சமூக வலைத்தளங்ககளை உபயோகிப்பதில் நேரக் கட்டுப்பாடு செய்வதால் அதன் மூலமாக கிடைக்கின்ற சில நன்மைகளையும் கூட நாம் இழக்க நேரிடும், ஆனாலும் விடாமல் முயற்சித்து அதில் மூழ்காமல் வெளிவர வேண்டும். இயல்பான உலக வாழ்வை முழுதாக எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Ella இந்த ஆய்வுகளின் பலனாக மக்கள் தங்கள் நேரத்தை கட்டுபடுத்தும் வழிமுறையை கீழ்காணும் விஷயங்களை பின்பற்றுவதன் மூலமாக மேலாண்மை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
1. விழிப்புணர்வோடு இருத்தல்: அரைமணி நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு சமூக வலைதளம் பார்த்தல், ஃபோனில் இருக்கும் well being மற்றும் wellness App களை பயன்படுத்தி எத்தனை நேரம் பயன்படுத்தினோம் என்று தெரிந்து கொள்ளுதல்.
2. நலனில் அக்கறை கொள்ளுதல்: இங்கு அனைவராலும் குறிப்பிட்ட நேர அட்டவணையை பின்பற்ற முடியாமல் போகவும் வாய்ப்புண்டு, ஏனெனில் அனைத்து சமூக வலைத்தள App களும் எளிதில் அதிலிருந்து வெளிவர முடியாத நிலையிலேயே வடிவமைக்கப் படுகின்றன. அடிக்கடி Update செய்து கொள்ளவும் வேண்டியிருக்கும்.
3. மனம் தளர்ந்து போய் முயற்சியை கைவிடாமல் இருத்தல்:
சிறிது சிறிதாகவாவது சமூக வலைதள பயன்பாடுகளை குறைத்து கொள்வது நிச்சயமாக பலவகையிலும் ஆதாயங்களை தரும், நடைமுறை சிக்கல்களை எளிதில் கையாள முடியும்.
பின்னணி:
இந்த ஆய்வுகளின் மூலம் நாம் நம் நேரத்தை சமூக வலைதளங்களில் எவ்வளவு செலவிடுகின்றோம் என்று தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்றாகிறது. இன்னும் இது போன்ற ஆய்வுகள் தொடரும்போது குறைந்த பயன்பாட்டின் நீண்ட கால தாக்கம் எப்படியிருக்கும் என்பதையும், இதனால் கிடைத்த அதிகப்படியான நேரத்தை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
நாம் உலகெங்கும் கவலைகள் நம்மை சூழ்ந்திருக்கும் காலத்தில் வாழ்கிறோம், நம்மில் பலர் கவலைகளையும், மனச்சோர்வான நிலையையும், தனிமையையும் வெகுவாக உணர்கின்றனர், அதற்கான சிகிச்சைகளையும் நாடி வருகின்றனர். சிலர் இதனால் மிகவும் தனிமைப்படுத்தி கொண்டு வாழ்வதை நாம் பார்க்கிறோம். ஆனால் இந்த ஆய்வுகள் மூலம் கிடைத்த முடிவுகள் மக்கள் இதிலிருந்து வெளிவரவும், உற்சாகமான ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும் என்பதையும் தெரியப்படுத்தியுள்ளது.
நாம் நம்முடைய நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதை கவனத்தில் கொண்டு சீரான இடைவெளிகளை உருவாக்கி படிப்படியாக நேரத்தை குறைத்து நிஜ வாழ்வில் நேரத்தை அதிகமாக செலவிடலாம். இதனால் வாழ்வில் நேர மேலாண்மையை நிர்வகிப்பது கைகூடும், அறிவு மற்றும் தொழில் சம்பந்தமான தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் நேரம் செலவிடலாம், குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கலாம், தோட்டம், காய்கறி வளர்ப்பு போன்ற இயற்கை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இவ்வாறு இந்த ஆய்வு கட்டுரை சமூக வலைத்தள உபயோகிப்பை குறைத்துக்கொள்ள சொல்லி உலகெங்கும் உள்ள மக்களிடம் மிக உரக்க அறிவித்துக் கொள்கிறது.