சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை எங்கே கொண்டு செல்கின்றன?

இன்றைய இளைஞர்களுக்கு உணவு உடை ஆகியவற்றுக்குப் பின் உறைவிடமாய் இருப்பது சமூக வலைத்தளங்கள்தான். பரந்துபட்ட இந்த யதார்த்தமான உலகிலிருந்து விலகி சுருங்கிக் கிடக்கும் அந்த மாய உலகில்தான் அவர்கள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அவர்களுடைய உலகமே தனி உலகமாகிவிட்டது. ஆனால் அவற்றிலிருந்து அவர்களால் வெளிவர இயலாத அளவுக்கு அடிமைகளாகிவிட்டதுதான் பெரும் வேதனை.
உலக அளவில் 210 மில்லியன் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இளைஞர்களின் மனநலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களின் வரிசையில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. பதினான்கு வயதிலிருந்து இருபத்து நான்கு வயதுக்குட்பட்ட 1479 பேரிடம் ஐந்து பிரபல சமூக வலைத்தளங்களில் பயனர்களுக்கு எது மிகவும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது என்ற கேள்விக்குத்தான் மேற்கண்ட பதில் கிடைத்துள்ளது. தனிமை, கவலை, மன அழுத்தம், தோற்றத்தை அவமதித்தல், கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடந்துள்ளது.
இளைஞர்களின் மத்தியிலான இந்தச் சமூக வலைத்தளங்களின் தாக்கம் குறித்து தி கார்டியன் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு அதிர்ச்சியடையச் செய்கிறது. இந்த ஆய்வானது 12 லிருந்து 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாங்கள் சமூக வலைத்தளங்களில் உருவக் கேலிக்கு ஆளானதாகவும் இதன் காரணமாக தங்கள் உடல் தோற்றத்தின் மீது வெறுப்பு ஏற்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக, பன்னிரண்டு வயது சிறுவர் சிறுமியரில் நான்கில் மூன்று பேர் தங்கள் தோற்றத்தை வெறுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். பதினெட்டு முதல் இருபத்தொரு வயதுக்குட்பட்டவர்களில் பத்தில் எட்டு பேர் தங்களது உருவம் அவமானம் தருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 40 சதவீதத்தினர் சமூக வலைத்தளங்களால் தீவிர மன உளைச்சல் தங்களுக்கு ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார்கள். சுமார் 97 சதவீதம் பேர் 12 வயதிலேயே தங்களுக்குச் சமூக வலைத்தளங்கள் அறிமுகமானதாகக் கூறியிருக்கிறார்கள். மேலும் 70 சதவீதம் பேர் தினமும் மூன்றரை மணி நேரம் சமூக வலைத்தளங்களில் செலவிடுவதாகக் கூறியிருக்கிறார்கள்.
அதேவேளையில் இந்த ஆய்வில் பங்குபெற்ற சிலர் சமூக வலைத்தளங்கள் தங்களது சுய வெளிப்பாடு மற்றும் சுய அடையாளம் ஆகியவற்றின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்கள். இருந்தபோதும் ஆரம்பகாலங்களில் சமூக வலைத்தளங்கள் தங்களைச் சமூகத்தோடு இணைத்திருந்ததாகவும் தங்களை மதிப்புமிக்கவர்களாக உணரச் செய்வதாகவும் கூறிய அவர்கள் நாளடைவில் அவை நிஜ உலகின் உறவுகளையும் நட்புகளையும் புறக்கணிக்கச் செய்ததாகக் கூறியிருக்கிறார்கள். அதன் விளைவாகத் தங்களுக்கு ஆழ்ந்த மனச் சோர்வு ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இன்னும் சிலரோ சமூக வலைத்தளங்கள் தங்களைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்க வைத்தது எனவும் அது தங்களை மிகவும் மோசமாக உணரவைத்தது எனவும் கூறி இருக்கிறார்கள். மற்றவர்களைப் போலத் திறமையாக, அழகாக, சுறுசுறுப்பாகத் தங்களால் இருக்க முடியாது என்பதுபோல் உணர்ந்ததாகக் கூறுகிறார்கள் அவர்கள். இவை மன அழுத்தம், பதட்டம், பயம், அதீத சிந்தனை, மனச் சோர்வு ஆகியவற்றை அதிகரித்தன எனவும் கூறுகிறார்கள்.
ஆக, சமூக வலைத்தளத்தை அதிக நேரம் செலவு செய்யும் ஒரு நபர் தனிமைப்படுத்தப்படுகிறார். அதாவது உண்மையான சமூகத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் ஒரு நாளைக்கு 30 நிமிடத்திற்குள்ளாகப் பயன்படுத்துவோரை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகத் தனிமையையும் சமூக விலகலையும் உணர்வதாகக் கூறுகின்றது. அமெரிக்காவில் சமூக வலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவோரில் பத்தில் நான்கு இளைஞர்கள் தூக்கக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகத் தெரியவருகிறது. அங்கே விவாகரத்து சம்பவங்களும் சமூக வலைத்தளங்களால் அதிகமானதாகக் கூறப்படுகிறது. அதாவது அமெரிக்காவில் மூன்றிலொரு விவாகரத்து சமூகவலைத்தளம் காரணமாக நிகழ்கிறதாம்.
சமூக வலைத்தளங்களால் நன்மைகளே கிடையாதா என்றால் நிச்சயம் இருக்கின்றன. எந்த நேரத்திலும், எங்கே இருந்தாலும் நம்முடைய குடும்பத்தோடு நாம் தொடர்பு கொள்ள முடியும். உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இருந்த இடத்திலேயே அறிந்துகொள்ளமுடியும். ஆபத்துக்கள் மற்றும் அத்துமீறல்கள் நிகழும் இடங்களில் ஒலி ஒளிப் பதிவுகள் மற்றும் செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். ஆன்லைன் வசதிகளால் பொருட்களை வாங்குதல், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்புதல், பணப் பரிவர்த்தனைகள், கல்வி பயிலுதல், பொழுதுபோக்கு என அனைத்தும் எளிதாக நடைபெறும். இவ்வளவு வசதிகளையும் நமக்குத் தரும் அதே சமூக வலைத்தளங்கள்தான் நம்மைத் தனிமைப்படுத்துகின்றன. அருகில் இருப்பவர்களிடமிருந்து கூடத் தொலைதூரத்திற்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. மன அழுத்தத்தையும் மனச் சோர்வையும் தருகின்றன. ஏன், சிலரைத் தற்கொலைக்குக் கூடத் தூண்டுகின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாத டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளிவந்த கட்டுரையில் இந்தியப் பெற்றோர்கள் 37 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் இணையவழி அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஸ்டாக்கிங் எனப்படும் இந்த இணைய வழி அச்சுறுத்தல்கள் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பொதுவில் வெளியிடுவது, மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் வெளிப்படையாக மற்றும் மறைமுகமாக அச்சுறுத்தல்களை அளிப்பது, பாலியல் ரீதியான தொந்தரவுகள் செய்வது என நீண்டுகொண்டே போகிறது.
இதனால்தான் பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மனநல ஆரோக்கியத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஒருவர் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்தும் போது மற்றவர்கள் அதைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றும் மனநலப் பிரச்சினை கொண்ட பயனர்களை அடையாளம் காட்டவேண்டுமென்றும் ராயல் சொசைட்டியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிந்துரை செய்துள்ளன.
மனிதர்களைச் சமூக விலங்குகள் என்பார் அரிஸ்டாட்டில். ஏன் தெரியுமா? ஒருவரை ஒருவர் சார்ந்துதான் மனிதர்கள் வாழ முடியும். தனிமையில் பிழைத்திருப்பது மிகக் கடினம். மற்றவர்களுடன் நாம் கொள்ளும் நல்ல உறவும் உரையாடலும்தான் நம் மனதைத் தெளியச் செய்யும். பாதுகாப்பு உணர்வை அளிக்கும். சமூக விலகல் ஒருநாளும் நன்மை தராது.
தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழும் நமக்குச் சமூக வலைத்தளங்கள் என்பது தவிர்க்க முடியாததுதான். இருந்தபோதும் அவற்றுக்கு நம்மை அடிமையாக்கிக் கொண்டு உடலையும் மனதையும் சிதைப்பது முட்டாள்தனம் இல்லையா? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. ஆகவே எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.