fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் தொழில்நுட்பம் பொழுது போக்கு

ஸ்மார்ட் போனில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்: ஒரு எச்சரிக்கை

ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் என்பது கற்பனை செய்ய முடியாத ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு.  எளிதாக எங்கும் எடுத்துச் செல்லலாம். எந்த நேரத்திலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளலாம். தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம். உலகில் நடக்கும் பல சம்பவங்களையும் விஷயங்களையும் சில நொடிகளுக்குள் அறிந்து கொள்ளலாம். காலையில் துயில் எழுப்பும் அலாரம் என்பதில் இருந்து தொடங்கி, வானொலியாக, தொலைக்காட்சியாக, கணினியாக, விளையாட்டுக்களமாக அப்பப்பா, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உதவியாளராகவே மாறிப்போனது இந்த ஸ்மார்ட் போன். இது இல்லாமல் அன்றாட வாழ்க்கையைக் கடப்பது கடினமான காரியம் என்பது போல இதுவரை எந்தக் கண்டுபிடிப்பும் ஆக்கிரமிக்காத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது ஸ்மார்ட் போன்.

அறிவியல் தொழில்நுட்பங்களும் கருவிகளும் மனிதகுலத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் விஞ்ஞானிகளால் உருவாக்கப்படுகின்றன. மனிதனின் அன்றாட வாழ்வை எளிமையாக்கவும் மனித குலத்தை முன்னேற்றவும் மேம்படுத்தவுமே கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் எல்லாவற்றுக்கும் எதிர்வினைகள் என்பது உண்டு. ஆம், அது இந்த ஸ்மார்ட் போனுக்கும் பொருந்தும். தொடர்ந்து ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிடுவதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது.  குறிப்பாக, குழந்தைகள் இதைப் பயன்படுத்தும்போது விளையக்கூடிய தீங்குகள் பற்றி அறியும்போது இந்த அறிவியல் சாதனம் மனிதனுக்குத் தேவைதானா என்கிற ரீதியிலேயே மனம் யோசிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்பாடு குழந்தைகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் தாத்தா பாட்டியுடன் கதை பேசிக் கொண்டிருந்த குழந்தைகள் இன்று ஸ்மார்ட் போனுடன் மட்டுமே தங்களது நேரத்தைக் கழிக்கிறார்கள். தற்காலப்  பெற்றோர்கள் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும்போது அவர்களை வழிக்குக் கொண்டுவர ஸ்மார்ட்போனை அவர்கள் கையில் திணிப்பதும் சிலர் தொந்தரவே வேண்டாமென காலை முதல் உறங்கச் செல்லும் வரை குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போனைக் கொடுப்பதும் என இருக்கிறார்கள். இது சரியா, தவறா, பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் யோசிப்பதேயில்லை.

கொரோனாவுக்குப் பின்னர் பள்ளிகளும், வகுப்புகளில் பாடம் நடத்துவது மட்டுமன்றி வீட்டுப்பாடம் முதல் தேர்வுகள் என அனைத்தையும் இணையதளம் மூலம் பயிலும் வகையில் கல்வி முறையை மாற்றி விட்டன.

குழந்தைகள் பேசத் தொடங்கும் நேரத்தில் அவர்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தினால் அவர்களின் பேச்சுத் திறன் பாதிப்படையும் எனவும் பேசுவதற்கு மிகவும்  காலதாமதம் ஏற்படும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவர்களுடைய சொல்லாற்றலோடு எழுத்தாற்றலும் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விரல்களை வைத்து நெடுநேரம் ஸ்மார்ட்போனில் விளையாடுவதால் அவர்களுடைய விரல்களின் வளையும் தன்மை குறைந்து எழுத்தாற்றல் தடைபடுகிறது. ‘வீடியோ கேம்ஸ்’ விளையாடப் பழகும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமையாகிறார்கள். உணவு, பெற்றோர், சூழல் என எதையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. இவர்கள் நடைமுறை வாழ்வில் இருந்து விலகி பெரும்பாலும் கற்பனை உலகில்தான் வாழ்கிறார்கள். பெற்றோர்களிடமும் நண்பர்களிடமும் பேசுவதைக் கூட தவிர்ப்பார்கள். பாடங்களில் கவனம் இருக்காது.

மேலும் குழந்தைகளின் உறங்கும் நேரமும் குறைந்துவிடுகிறது. பொதுவாக குழந்தைகள் பெரியவர்களை விட அதிக நேரம் உறங்க வேண்டும். அதாவது பத்து மணி நேரமாவது உறங்க வேண்டும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் அவர்கள் ஒரு மணி நேரம் செலவழித்தால் உறங்கும் நேரத்தில் பதினைந்து நிமிடங்கள் குறைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஸ்மார்ட் போனிலிருந்து வரும் நீலக் கதிர்வீச்சானது கண்களின் முக்கிய பகுதியான மக்கியூலா பகுதியை மோசமாகப்  பாதிக்கிறது. இதில் வேதனை என்னவென்றால் இந்தப் பாதிப்பைக் குணப்படுத்தவே முடியாது என்பதுதான். மெலட்டோனின்தான் மனிதனுக்கு உறக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன். இது சுரப்பதை ஸ்மார்ட்போனின் நீலநிறக் கதிர்வீச்சு தடுப்பதால் உறக்கத்தின் கால அளவு குறைந்து போகிறது. இதனால் சுறுசுறுப்பின்மை, கவனச்சிதறல், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகின்றது. குழந்தைகளுக்கு எளிதாகத் தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் ஸ்மார்ட் போனில் அதிகம். சுமார்  90 சதவீதம் ஸ்மார்ட் போன்களில் நோய் பரப்பும் கிருமிகள் இருப்பதாக ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன. அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியில் ஒரு கழிப்பறையில் காணப்படும் பாக்டீரியாக்களை விடப் பத்து மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் ஒரு ஸ்மார்ட் போனில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

          எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்மார்ட் போன் தரப்படவில்லை என்று டெல்லியில் சிறுவன் ஒருவன் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டான் என்ற சமீபத்திய செய்தி ஒன்று நெஞ்சை உலுக்கிற்று. ஸ்மார்ட் போன் தரப்படாதபொழுது எழுந்த ஒருவித படபடப்பும் அச்ச உணர்வுமே  இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது. இந்த இடத்தில் நாம் யோசிக்கவேண்டும். இன்றைய குழந்தைகள் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்?

உங்களுக்குத் தெரியுமா? கம்ப்யூட்டர் கிங் எனப்படுபவரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு அவர்களது பதினான்கு வயது வரை அலைபேசியைப் பயன்படுத்த அனுமதி தரவில்லையாம். செல்போனைக் கண்டுபிடித்த அமெரிக்கரான மார்ட்டின் கூப்பர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? தினசரி நேரத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே அதாவது சராசரியாக ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே அவர் செல்போனைப் பயன்படுத்துவதாகவும் அதில் அதிகநேரம் செலவிட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இப்பொழுதாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும் அவை எவ்வளவு ஆபத்தானவை என்று.

ஆக, தலை நிமிர்ந்து நடக்க வேண்டிய இளம் குழந்தைகள் ஸ்மார்ட் போனால் தலைகுனிந்து வலம் வருவதைப் பார்க்கும்போது மனது வலிக்கத்தான் செய்கிறது. நாம் வாழும் இந்தத் தகவல் உலகத்தில் டிஜிட்டல் சாதனங்களைத் தவிர்க்க இயலாதுதான். குழந்தைகளைச் சுற்றி முழுக்க முழுக்க டிஜிட்டல் சாதனங்களே நிறைந்துள்ளன. முழுமையாக அவர்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் அவர்களை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் சொல்வதைப் போல, ‘குழந்தைகள் எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்கள், எப்படி அதைக் கையாளுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். நாம்தான் தொழில்நுட்பத்தை இயக்க வேண்டுமே தவிர அவை நம்மை இயக்கக்கூடாது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை அவர்கள் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்கலாம். டீன்ஏஜ் குழந்தைகள் ஆபத்தில் சிக்காமல் இருக்க பிரவுசிங் ஹிஸ்டரியைக் கண்காணிக்கலாம். ‘ஸ்கிரீன் டைம்’ போன்ற தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தலாம்.

இறுதியாக, எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் பெற்றோர்களாகிய நீங்கள்  உங்கள் குழந்தைகளுடன் உரையாடுவதிலும், அவர்களுடன் சேர்ந்து உண்பதிலும், வெளியில் செல்வதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், விளையாடுவதிலும் நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களது தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவற்றில் ஈடுபடுத்துங்கள்.

நினைவில் கொள்ளுங்கள், ஸ்மார்ட்போன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமான இடைவெளியை எந்நேரத்திலும் அதிகரிக்கலாம்.   

தொடர்புடைய பதிவுகள் :

எண்பதிலும் ஆசை வரும்
உலகில் முதன்முறையாகப் பெண்ணின் மூளைக்குள் மலைப்பாம்பின் ஒட்டுண்ணி உயிருடன் கண்டுபிடிப்பு
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்க்கு ஓர் விடிவுகாலம்
Walnut Health Benefits in Tamil
காதல் உணவுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்..! சிறப்பான காதல் வாழ்க்கைக்கு நீக்க வேண்டிய மற்றும் சேர்க...
பார்கின்சன்ஸ் நோய் அறிகுறிகளை தீவிரமாக்கும் இரண்டு விஷயங்கள் எவை தெரியுமா?
மனித உடலில் மெல்லக் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்! உங்கள் மூளைக்குள்ளும் செல்லும் பிளாஸ்டிக் க...
நொடிப்பொழுதில் கட்டுரை எழுதி தரக்கூடிய ChatGPT செயலியின் நுண்ணறிவு திருடப்பட்டு கட்டமைக்கப்பட்டதா? -...
வானிலையின் அரிதான நிகழ்வால் இந்தியாவின் வடக்கு பிரதேசங்களில் தொடர் பெருமழை - இது காலநிலை மாறுபாட்டின...
டிஜிட்டல் யுகத்தில் பிரைவசி எனும் ஹம்பக்
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *