சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒத்திருக்கிறார்கள்: டிஎன்ஏ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இலங்கையின் இருபெரும் இனங்களான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்துப் போகிறார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகள் இவ்விரண்டு இனங்களுக்கிடையே இருந்தபோதும் பல நூறு ஆண்டுகளாக இணைந்திருப்பதால் இந்த மரபணுத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த டிஎன்ஏ விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த செய்தி ஐசயின்ஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் உள்ள இனக்குழுக்களின் தோற்றம், வரலாறு மற்றும் அவர்களின் சமூகத் தொடர்புகள் குறித்தான செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்களும் சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களும் காலனித்துவக் காலத்திலிருந்தே இரத்தக்களரியான மோதலில் ஈடுபட்டபோதும், 2009 வரை உள்நாட்டுப் போரில் மோதிக் கொண்டபோதும், பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் பகைமை இன்னும் தொடர்ந்தபோதும், அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்த மரபணுத் தொடர்பு எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார் இந்தியாவின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த விலங்கியல் துறையின் பேராசிரியர் ஞானேஸ்வர் சௌபே.
இந்த ஆய்வினை நடத்திய ஆய்வுக் குழுவில் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் தவிர லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்சஸ், மங்களூர்ப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். ஐந்து வருடங்களாக நடைபெற்ற இந்த ஆய்வில் 88 இலங்கைத் தமிழர்கள், 129 சிங்களவர்கள், 56 இலங்கையைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் மற்றும் 562 இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் ஆகியோரிடமிருந்து 834 டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இலங்கையில் பிரதான குடிகளான சிங்களவர்கள் 74.9 சதவீதமும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதாவது மூர்ஸ் எனப்படுபவர்கள் முறையே 11.1 சதவீதம் மற்றும் 9.3 சதவீதமும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்துடன் இந்தியத் தமிழர்கள் 4.1 சதவீதத்துடன் 4-வது மக்கள்தொகைக் குழுவாக இலங்கையில் உள்ளதாகவும் மற்றும் பர்கர், மலாய், வேதா என்னும் ஆதிவாசிகளும் அங்கே வசிக்கின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிமு 500 வது ஆண்டில் இந்தியாவிலிருந்தே இரண்டு பெரும் இனக்குழுக்களான சிங்களவர்களும் தமிழர்களும் இலங்கைக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிங்கபுரம் என்னும் இடத்தில் இருந்துதான் சிங்களர்கள் வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதை விஞ்ஞானிகள் குழு பரிசீலித்திருந்தபோதும் அதை அவர்கள் முழுதாக ஏற்கவில்லை. சிங்களவர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர்கள். இலங்கைத் தமிழர்களோ இந்தியாவின் தெற்குப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். அதுவும் ஒரே நேரத்தில் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். ஆக நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இரு இனங்களிடையே மரபணு ஓட்டம் தொடர்ந்திருக்கிறது. இதுவே அவர்களுக்கு இடையே மரபணு ரீதியானத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது எனக் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மூத்த விஞ்ஞானி ஆர் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தனி நபரின் அரை மில்லியன் மரபணு மாற்றங்களில் செய்யப்பட்ட முதல் ஆய்வு இது என்றும் அதனால் இதன் முடிவுகள் மிகவும் உறுதியானவை மற்றும் வலுவானவை என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முந்தைய ஆய்வுகளில் மரபணு மேப்பிங் அடிப்படையில் ஆழம் இல்லாததால் அந்த ஆய்வுகளின் மூலம் சரியான முடிவுகளைக் கணிக்க இயலவில்லை என்று கூறும் ரணசிங்க, “பொதுவாக ஒரு தனிநபரின் மரபணு அவரது சுற்றுப்புறத்தில் காணப்படும் சில பொதுவான தன்மைகளைக் கொண்டிருக்கும். உதாரணமாக நாட்டின் வடக்குப் பகுதியை சேர்ந்த ஒருவர் வட இந்தியாவின் மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்களுடன் அதிக மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வார். ஆனால் இந்த இலங்கை ஆய்வில் தெற்கை விட மேற்கு இந்திய மரபணுக் கூறுகளே அதிகமாக இருந்தன. அதாவது சிங்களம் மற்றும் மராட்டியத்தின் பொதுவான வேர்களின் தடயங்களை இந்த ஆய்வில் நாங்கள் கண்டோம்” என்கிறார். மேலும் “இதில் இன்னும் ஆச்சரியம் என்னவென்றால் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே இனம் மற்றும் மொழியின் எல்லைகள் தாண்டிய வலுவான மரபணுத் தொடர்பு உள்ளது. இது தெற்காசியச் சூழலில் மிகவும் அசாதாரணமானது” என்கிறார் ரணசிங்க.
இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இன்றும் நல்லிணக்கம் ஏற்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்கி இவ்விரண்டு இனங்களும் சமமாக நல்லமுறையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டபோது இலங்கைத் தமிழர்கள் அவற்றை ஏற்றுக் கொண்டபோதும் சிங்களவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சிங்களமயமாக்குதல் மற்றும் பௌத்தமயமாக்குதல் ஆகியவை திட்டமிட்ட முறையில் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது என்றும் தமிழர் பகுதிகள் இலங்கை ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே மரபணுத் தொடர்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியிருப்பது அவ்வினங்களுக்கு இடையேயான சகோதரத்துவத்தையே புலப்படுத்துகிறது. சகோதரர்களுக்கு இடையே சண்டைகளும் சர்ச்சைகளும் எதற்கு என்கிறீர்களா? உண்மைதான். இனி இருக்காது என நம்புவோம்.