சிங்கப்பூரில் துவங்கவுள்ள தமிழ் இளைஞர் திருவிழா – மூன்றாம் ஆண்டு கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம்.


செய்தி சுருக்கம்:
சிங்கப்பூரில் வாழ்கின்ற தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் சிறப்புகளையும் அதன் தொன்மை வாய்ந்த கலாச்சார பெருமைகளையும் கொண்டு சேர்ப்பதற்காக சிங்கப்பூரின் Tamil Language Council (TLC) அமைப்பினால் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற தமிழ் இளைஞர் திருவிழாவின் மூன்றாமாண்டு கொண்டாட்டங்கள் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து எட்டு நாட்கள் பல கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு ஈவன்ட்கள் கொண்டதாக இந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த விழாவின் நிறைவாக பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.
சிங்கப்பூரின் அலுவல் மொழியாக தமிழ் மட்டுமல்லாது சீனம், மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் உள்ளன. உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு பெயர் போன நாடு, எனவே இந்த தமிழ் விழாவினை முன்னிட்டு விழாவை காணவும் அதிகமான வெளிநாட்டு பயணிகள் வரக்கூடும் என்று தெரிவித்துள்ளது TLC.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள தமிழ் இளைஞர் திருவிழாவில் 10 வெவ்வேறு விதமான தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். நம் தமிழ் மொழியின் புராதன சிறப்புகள் முதல் தற்கால முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான இலக்கிய வெளிப்பாடுகள் வரை தமிழ் கலைகளில் உள்ள அனைத்து அம்சங்களையும் நிகழ்த்தி காட்ட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு TLC அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இந்த விழாவின் தீம் என்கிற மையக்கருவாக “அழகு” என்கிற பதத்தை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழியின் வளமை, ஆளுமை மற்றும் அழகினை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
TLC அமைப்பின் சேர்மன் S.மனோகரன் இந்நிகழ்ச்சியை பற்றி கூறும்போது, “இந்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ் இளமை திருவிழா என்பது வெறும் கலைநிகழ்ச்சிகள் மட்டும் கொண்டுள்ள ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், இது ஒன்றுபட்ட எண்ணங்களை கொண்டுள்ள மற்றும் தமிழ் பற்று என்ற அடிப்படை ஒற்றுமை கொண்டுள்ள தனி மனிதர்களை இணைக்கின்ற ஒரு மாபெரும் தமிழ் விழா என்று நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் தமிழ் கலாச்சாரம் இளைய தலைமுறையினரை சென்றடைவது எளிதாகவும், தமிழை உலகம் அறிந்துகொள்ள வைப்பதின் ஒரு முயற்சியாகவும் இந்த விழா இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்த விழாவின் மூலம் நாங்கள் எங்கள் மொழியை மட்டும் தனியாக கொண்டாடுவதில்லை, இதன் மூலம் நம் தமிழ் இளைஞர்களின் படைப்பாற்றலையும் அவர்களது தனிப்பட்ட திறமைகளையும் வெளிக்கொணர உதவும் ஒரு விழாவாக இது உள்ளது, இங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வாய்ப்புகள் மூலம் தங்கள் திறமைகளை அவர்கள் வெளிப்படுத்தி கொள்ள முடியும். இந்த விழாவின் முக்கிய அம்சம் தமிழ் மொழியை காப்பது மற்றும் அதன் பெருமையை நிலை நாட்டுவது என்கிற கொள்கைகளாகும். நாங்கள் உலக மக்கள் அனைவரையும் இந்த விழாவிற்கு வரவேற்கிறோம். முக்கியமாக இளைஞர்கள் எங்களோடு இணைந்து நம் செழிப்புமிக்க தமிழ் கலாச்சாரத்தையும், பெருமை வாய்ந்த தமிழ் மொழியையும் கொண்டாட அழைப்பு விடுக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறவுள்ள தமிழ் திருவிழாவின் நிகழ்ச்சிகளில் பல்வேறு விதமான கலாச்சாரம் சார்ந்த மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்த நாடகங்களும், விவாத நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இவைபோக மொழி சார்ந்த கண்காட்சிகள், பட்டிமன்றங்கள் மற்றும் பேச்சு, கட்டுரை, கவிதை துறைகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. நாங்கள் குறிப்பிட்டுள்ள பத்து விதமான முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்பது நிகழ்ச்சிகள் நேரடியாகவும் ஒரு நிகழ்ச்சி மட்டும் ஆன்லைன் வாயிலாக Zoom மீட்டிங் App மூலம் நிகழ்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
TCL உறுப்பினராக இருக்கும் Sundar Plavenderraj என்பவர் இதப்பற்றி தெரிவிக்கையில் “தற்போது நடக்கவுள்ள மூன்றாவது ஆண்டு தமிழ் இளைஞர் திருவிழாவை நடத்தித்தர பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன, இளையதலைமுறையினர் விருப்பத்திற்கேற்ப புதுமையான நிகழ்ச்சிகளை அனைவரும் ரசிக்கும்படியாக அமைத்து இளம் மாணவர்களை இதில் பங்குகொள்ள வைப்பது முதல் சில நிகழ்ச்சிகளை அவர்களே தலைமையேற்று நடத்துவது போலவும் செய்துள்ளனர், இதனை நேரில் காண்பதற்கு நாங்கள் அனைவரும் மிகவும் ஆவலாக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இந்த Tamil Language Council அமைப்பானது நம் இளைஞர்களை இந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் நம் மொழியின் அழகை அவர்கள் கொண்டாடுவார்கள், எனவே தமிழ் மொழி இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் சிறப்பாக வாழக்கூடிய சக்தி வாய்ந்த உலகின் மிகப்பழமையான மொழியாக என்றும் இருக்கும்” என்று தெரிவித்தார்.
பின்னணி:
சிங்கப்பூரில் இந்த தமிழ் இளமை திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கும் இந்த Tamil Language Council என்பது 2000 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் கலாச்சாரம், இனம் மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சகம் மூலமாக துவங்கப்பட்ட அமைப்பாகும், இதில் கல்வித்துறை, பல்வேறு மக்கள் அமைப்புகள், கலைத்துறை மற்றும் செய்தித்துறை ஆகியவற்றின் சிறந்த திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக இதன் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.
இந்த அமைப்பின் மூலமாக கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கி வருடந்தோறும் இந்த தமிழ் இளைஞர் திருவிழாவினை நடத்தி வருகின்றனர் சிங்கப்பூர் தமிழ் மக்கள், இந்த ஆண்டில் செப்டம்பரில் துவங்கவுள்ள இந்த விழா பலவிதமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாகவும், இந்த விழாவினை சிங்கப்பூர் மக்கள் மகிழ்ச்சியுடனும் கோலாகலத்துடனும் கொண்டாட தயாராகி வருகின்றனர் என்பது தெரிகிறது. மூன்றாம் ஆண்டில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை கொண்டு இதனை வடிவமைத்து உள்ளதாக இதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.