fbpx
LOADING

Type to search

இந்தியா இலங்கை உலகம் மொழி

தமிழால் தலை நிமிர்வோம்! தமிழில் கையோப்பமிடுவோம்!

உலகில் பேசப்படும் ஆறாயிரம் மொழிகளில் உயர்தனிச் செம்மொழியாக விளங்குவது நமது தாய்மொழியான தமிழ்மொழி மட்டுமே. காலங்களில் மூத்ததும் பழமையானதும் என்பது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை. தமிழ்மொழியின் இலக்கிய வளமும், இலக்கணச் செறிவும் வேறெந்த மொழியிலும் இல்லாதவை. தமிழறிஞர் கா. சிவத்தம்பி, ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் இருக்கிறது’ என்பார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளில் உள்ள சொற்கள் பலவும் இன்னும் நம்மால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அளவிற்குத் தொடர்ச்சியான மரபு கொண்ட மொழி உலகத்தில் வேறொன்று இல்லை என்கிறார்கள் மொழி ஆராய்ச்சியாளர்கள். கடந்த 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ தமிழ்மொழியை ‘மனிதகுலத்தின் வாய்மொழி மற்றும் அருவமான பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பு’ என அறிவித்தது. உலக மொழிகள் பலவற்றுக்கும் எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியவை உண்டு. ஆனால் நம் தமிழ்மொழியில் மட்டுமே பொருளுக்கும் இலக்கணம் உண்டு. எண்ணற்ற புலவர்களாலும் மன்னர்களாலும் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட ஒரே மொழி நம் தமிழ்மொழியே. மாவீரன் அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழியும், இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழியும், மகான் புத்தர் பரப்பிய பாலி மொழியும் இன்று இல்லை. வடமொழியும் கூட கோயில்களில் மந்திரங்களாகவே ஒலிக்கின்றன. ஆனால் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய நமது தமிழ் மொழி இன்றளவிலும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் வழக்கத்தில் உள்ளது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’, ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’, ‘அறம் செய்ய விரும்பு’, ’ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்னும் கொள்கைகளோடு வாழ்ந்து அவற்றை உலகிற்கு முதன் முதலில் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள். இப்படி அதன் தொன்மையும், பிறமொழித் தாக்கமின்மையும், இலக்கிய வளமையும், செழுமையும், நடுவு நிலைமையும், உயர்ந்த விழுமியங்களும், தாய்மைப் பண்புமே அதனைச் செம்மொழியாக இன்று உலக அரங்கில் உயர்த்தியிருக்கிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தமிழ்மொழியை ‘மதுரமான மொழி’ என்பார். அதாவது நம் தமிழ்மொழி தேனைவிடத் தித்திப்பானது. தமிழ் என்ற சொல்லின் பொருளே இனிமைதானே. ஆகையினால்தான் உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தபோதும், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றும் ‘தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்றும் பாடினார்கள் பாரதியும் பாரதிதாசனும்

‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!’ என்னும் நாமக்கல் கவிஞரின் வரிகள் வெற்று வார்த்தைகள் அல்ல. நம் பண்பாடும் பாரம்பரியமும் நமது தாய்மொழியை அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. நம் தமிழ்நாடு என்பது தமிழ்மொழி மூலமாகவே வளமான கலாச்சாரத்தைப் பெற்றது என்றால் அது மிகையில்லை.

இங்ஙனம் தமிழர்களின் உயிராகவும் உயிர் மூச்சாகவும் விளங்கிய தமிழ்மொழி இன்று இளம் தலைமுறையினரிடையே ‘தமிழில் பேசினாலே அவமானம்’ என்ற நிலையை அடைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம். மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் ஆங்கில மொழியின் மீதான மோகம், நாகரிகம் ஆகியவையே தமிழை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. தமிழை ஆங்கிலத்தில் ‘டமில்’ என்று சொல்வதில்தான் எத்துணை பெருமை அவர்களுக்கு! தமிழுக்குப் பெருமையே அதன் சிறப்பு ‘ழ’கரம்தான் என்பதை  அறியாத இவர்களை என் சொல்வது? முண்டாசுக் கவிஞன் பாரதி இன்று இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே என இன்றைய இளந்தலைமுறையினரைப் பார்த்துத்தான் பாடியிருப்பார்.  

நம் தமிழ் மொழியின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் இளையதலைமுறை உணராதவரை, உணர்த்தப்படாதவரை இந்த அவலம் நீடித்துக் கொண்டேதான்  இருக்கும். அறிவின் அடிப்படை தேடல் என்றும் தேடலின் அடிப்படை மனிதனின் சிந்தனை என்றும் அந்தச் சிந்தனையின் அடிப்படை மொழி என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆக, ஒரு மனிதனின் சிந்தனைத் திறன் என்பது அவனுடைய தாய்மொழியைப் பொறுத்தது என்பது தெளிவாகிறது.

தாய்மொழியில் கற்பதன் மூலமே மனிதவளம் செழுமையாகும் என்ற காரணத்தினால்தான் பல நாடுகள் தங்கள் தாய்மொழியிலேயே குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கின்றன. ஆனால் நம் தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ்க் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி போதிக்கப்படுகிறது. தமிழில் பேசினால் அவமானம் எனும் நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கிறது. ஒரு ஆங்கிலேயக் குழந்தையோ அமெரிக்கக் குழந்தையோ  தமிழில் கையொப்பம் இடுவதில்லை. ஆனால் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழிலே கையொப்பமிடத் தெரியவில்லை. இதைத்தானே அவமானமாகக் கருத வேண்டும்.

வெறும் ஐந்நூறு வருடங்களுக்கு முன் உருவான ஆங்கில மொழியின் மீது ஏன் இத்தனை மோகம்? ஆங்கிலமே சிறந்தது என்னும் மூளைச்சலவை எங்கிருந்து ஆரம்பமாகிறது தெரியுமா? நம்முடைய வீட்டிலிருந்துதான். நம்முடைய குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதைத்தானே நாம் ரசிக்கிறோம். பல பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் என்ற நிலை உள்ளது என்பது எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்? தமிழ்நாட்டில்தான் தமிழுக்கு இந்த நிலைமை. சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அங்கே தமிழ் நிர்வாக மொழியாகவும் உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளில் தமிழ் இரண்டாவது மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் மக்கள் தொகையில் இருபது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் நாம். நாட்டின் மிகப்பெரிய மொழியியல் குழுக்களில் ஒன்றாக நாம் இருக்கிறோம். ஆனால் மற்ற நாடுகள் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்தைக் கூட நாம் நம் தாய்மொழி மீது கொண்டிருக்கவில்லை என்பது எத்தனை அவமானம்? தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழில் பிழையின்றி எழுதத் தெரியவில்லை என்றால் அதுவே வெட்கத்துக்குரியது, வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது. ‘தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாவேந்தர் கூறியதுதான் இங்கே நினைவுக்கு வருகிறது.

எந்தப் புரிதலும் இல்லாமல்தானே எத்தனையோ மாணவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்கிறார்கள்? புரிதல் இல்லாத அறிவினால் என்ன பயன்? சிந்திக்கத் தெரியாத தலைமுறையை உருவாக்கித்தான் என்ன பயன்?

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற ஒரு ஆய்வின் முடிவில் பிற மொழிக் கல்வியை கற்றவர்களை விடத் தாய்மொழியில் கல்வி கற்றவர்களுக்கு நாற்பது சதவீதம் எழுத்தறிவுத் திறன் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தாய்மொழியின் சிறப்பை உணர்ந்துதான் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது. ‘மனிதர்கள் தங்களது பாரம்பரிய அறிவினையும் பண்பாட்டினையும் நிலைநிறுத்திக் கொள்ளத் தங்களது தாய்மொழியைக் காத்துக்கொள்வது அவசியம்’ என ஐ.நா வலைப்பக்கத்தில் தாய்மொழி தினச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது சுயசரிதையைத் தன்னுடைய தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் எழுதினார் மகாத்மா காந்தி. நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலியும் தாகூரின் சொந்த மொழியான வங்க மொழியிலேயே எழுதப்பட்டது. புரிந்துகொள்வோம். தாய்மொழி அவமானமல்ல. அது நம் இனத்தின் அடையாளம்.  முதற்கட்டமாக நம் குழந்தைகளுக்குத் தமிழில் கையொப்பமிடக் கற்றுக்கொடுப்போம்.

தொடர்புடைய பதிவுகள் :

தடிகளை ஏந்திச் செல்லும் காலனித்துவ மரபுக்கு முடிவு: இந்தியக் கடற்படை அறிவிப்பு
கூகுள் ஏன் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்கிறது?பின்னணி என்ன?
திசை மாற்றும் சமூக வலைத்தளங்கள்
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளிப்பது எப்படி - மனுக்களின் மீதான நடவடிக்கை எவ்வாறு இருக்க...
இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!
குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதர் சந்திப்பு: இந்திய-சீன உறவு பலப்படுமா...
இந்தியாவின் சந்திராயன் - 3 வெற்றிகரமாக நிலவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது!! 
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு.
புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *