எண்பதிலும் ஆசை வரும்

செய்தி சுருக்கம்:
முதியவர்களைக் குறித்த சமுதாயத்தின் பார்வை அவர்களை ஏதும் இயலாதவர்களாகவே காண்கிறது. வயதாகிவிட்டால் அவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. அதேபோன்று வயதாகும்போது நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. வயதை காரணம் காட்டி வேறுபாடு காணுதல் என்பது மற்ற பல்வேறுவிதங்களில் சமுதாயத்தை பிரிப்பது போன்றதே ஆகும். வயது முதிர்ந்தவர்கள் பாலியல் சார்ந்த இன்பங்களை அனுபவிக்க முடியாது என்பதே பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
பாலியல் சார்ந்த குறைபாடுகளுக்காக பல்வேறு சிகிச்சைகளை அநேகர் நாடுகிறார்கள். பாலியல் உறவு கொள்வதற்கு உடல் மட்டுமல்ல, மனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உடல் சார்ந்த பலவீனங்கள் வரக்கூடிய முதுமையில் பாலியல் உறவு கொள்வது சாத்தியமா? என்ற சமுதாயத்தின் கேள்வியே முதியவர்களை முற்றிலுமாக பாலியல் உலகிலிருந்து அகற்றுவதாக இருக்கிறது. 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வானது, முதியவர்கள் பாலுறவு கொள்வதை ஜனங்கள் வெட்கத்திற்குரியதாக, சிரிக்கவும், அருவருக்கவும் தக்கதாக, நடைமுறைக்கு ஒவ்வாததாக கருதுவதாக தெரிவிக்கிறது. ஆனால், தற்போது அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையின்படி 65 முதல் 80 வயது வரையிலான முதியோரில் மூன்றில் இரண்டுபேர் பாலியல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
பின்னணி:
வயதாகியிருந்தாலும் தம்பதியர் மனமொத்து பாலியல் உறவில் ஈடுபடுவது ஒருபோதும் வெட்கத்துக்குரியதாகாது; மாறாக, இனிமையானதாகவே அமையும். அமெரிக்காவை சேர்ந்த பாலியல் மற்றும் உறவுகள் துறை வல்லுநரான மிராண்டா கிறிஸ்டோபர்ஸ், நல்ல பாலியல் உறவை எப்படி தக்க வைக்கலாம்? எப்படி மறுபடியும் தொடங்கலாம்? என்பது குறித்து ஆலோசனை கேட்கும் 65 முதல் 85 மற்றும் அதற்கும் மேலான வயதினரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
எழுபதில் எண்ட் கார்டா?
அதிகபட்சமாக எழுபது வயதில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால் அநேகர் அந்த வயதுக்குமேல் பாலியல் உறவில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணுகிறார்கள். ஆண்கள் முதுமையடையும்போது விறைப்பு தன்மை குறைபாடும் பெண்கள் முதுமையடையும்போது பெண் குறியின் வாசலும், சுவர்களும் சுருங்குதலும் ஏற்படும். அதற்காக பாலியல் இன்பத்தை அனுபவிக்கவே இயலாது என்று கூற முடியாது. பெரும்பாலும் அந்த வயதில் இருப்பவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது குறித்து பொதுவாக பேசுவதில்லை என்பதாலும் அப்படி ஒரு மனநிலை நிலவுகிறது.
வயது சார்ந்த பாகுபாடு உலக அளவில் நிகழும் மாற்றமாக உலக சுகாதார நிறுவனம் 2021ம் ஆண்டில் அறிவித்துள்ளது. உலகமெங்கும் இரண்டு பேரில் ஒருவர், வயதானவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குன்றியிருப்பார்கள்; வாழ்க்கையில் பெரிய சிரமங்களை அனுபவித்துக்கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கின்றனர்.
வாழ்வின் பிற்பகுதியில் அநேக விஷயங்களை செய்ய முடியும் என்று நாம் புரிந்துகொள்வது அவசியம். முதியோரில் அநேகர் வேலை செய்கிறார்கள்; பொழுதுபோக்கில் ஈடுபடுகிறார்கள்; நிறைவான வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதே உண்மை.
அதுவரைக்கும் இணையுடன் நெருக்கமாக உறவில் இருந்து, பாலியல் இன்பத்தை அனுபவித்தவர்கள் ஏன் திடீரென அவற்றில் ஈடுபடுவதை நிறுத்திவிடவேண்டும்? சமூகத்தை பீடித்திருக்கும் இதுபோன்ற நம்பிக்கைகளை நாம் உறுதியுடன் எதிர்கொள்வது அவசியம். உயிரோடு இருப்பவர்கள் வாழ்கின்றனர் என்று அர்த்தம்; குறிப்பிட்ட வயதில் நாம் வாழ்வதை நிறுத்திவிட்டு வெறுமனே பிழைத்திருப்பதில் என்ன பயன் இருக்கிறது? ஆகவே, உயிர் இருக்கும்வரைக்கும் இன்பமாக வாழ்வதும் அவசியமாகும்.
ஆரோக்கியம் – பாலியல் தொடர்பு என்ன?
முதுமையடைந்துவிட்டோம் என்று முடங்கியிராமல் பாலியல் உறவில் ஈடுபடுவது அநேக விதங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று நம்பப்படுகிறது. இன்பத்தோடும் உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடைய டோபமைன், எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடாக்சின் ஆகிய நியூரோடிரான்மிட்டர்கள் என்னும் வேதிப்பொருள்களை பாலியல் உணர்வு தூண்டுகிறது.
தன்னை தானே மெச்சிக்கொண்டு சந்தோஷப்படுவதற்கு காரணமானதும் மூளைக்கு உத்வேகத்தை அளிப்பதும் டோபமைன் ஆகும். எண்டார்பின் மனச்சோர்வையும் உடல் வேதனையையும் குறைக்கக்கூடியது. ஆக்ஸிடாக்சின் என்பது அன்பு, நம்பிக்கை நிறைந்த பந்தத்திற்கு உரியது. இவை மூன்றுமே மனதை உற்சாகமாகவும் உடலை ஆரோக்கியமாகவும் காத்துக்கொள்ளக்கூடியவை.
பாலியல் சார்ந்து துடிப்போடு இருக்கும் பெரியவர்கள், பாலியல் துடிப்போடு இல்லாத முதியோரைக் காட்டிலும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள்; அவர்கள் வாழ்க்கை நலன் உயர்வாக இருக்கிறது என்று 2018ம் ஆண்டின் ஆய்வு ஒன்று கூறுகிறது.
முதுமை என்னும் நல்வாய்ப்பு
எழுபதை தாண்டி நாம் வாழும் நாள்கள் நமக்கு அளிக்கப்படும் நல்ல வெகுமதி போன்றவை. ஒருவேளை முதுமைக்குரிய சில சிறிய குறைபாடுகள் இருக்கக்கூடுமாயினும், முதுமையானது உலகை இன்னும் சில காலம் நன்றாக அனுபவிக்க கிடைக்கும் வாய்ப்பாகும். இளமையைப் போல் முதுமை கவர்ச்சியானதாக இல்லாதிருக்கலாம். ஆனால், இளம்வயதினர் தங்கள் இணையுடன் கூடி பெறும் இன்பத்தைக் காட்டிலும் முதிய தம்பதியினர் நிறைவான இன்பதை அடையலாம் என்று பாலுறவு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இளம் வயதினரின் இணையைக் குறித்த எதிர்பார்ப்பு, பாலியல் உறவு குறித்த எண்ணம் ஆகியவை வேறுபடுவதால் மனமொத்த உறவு முழுவதுமாக வாய்க்க சாத்தியம் குறைவும். பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளும் அவர்கள் முழு இன்பத்தை பெறுவதற்கு தடையாக அமையக்கூடும். இளம் வயது இணையின் எதிர்பார்ப்பை முழுவதும் ஈடுசெய்வதிலும் பிரச்னை எழும்பக்கூடும்.
ஆனால், முதியவர்களுக்கு பரபரப்பான வேலையின்றி தங்கள் இணையுடன் செலவழிக்க போதுமான நேரம் கிடைக்கும். அவர்களது பாலியல் சார்ந்த அணுக்கமும், தொடர்பும், வெளிப்பாடும் சிறப்பாக அமையும். ஆகவே, வயது முதிர்ந்த தம்பதியர் பாலியல் உறவில் தயக்கமின்றி ஈடுபட்டு இன்பம் பெறலாம்.